ADVERTISEMENT

"என்னை கெட்ட வார்த்தையில் திட்டிய ஒளிப்பதிவாளர்" - ஹீரோ பகிர்ந்த ஷாக் நினைவு  

05:22 PM Mar 03, 2019 | vasanthbalakrishnan

உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கொண்டாடப்பட்ட 'டுலெட்' திரைப்படம் சென்றவாரம் தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் விமர்சனக் கூட்டம் 'கூகை' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'டுலெட்' நாயகன் சந்தோஷ் ஸ்ரீராம், தான் செழியனிடம் உதவியாளராக சேர்ந்த கதையை கலகலப்பாக பகிர்ந்துகொண்டார். சந்தோஷ். அடிப்படையில் ஒளிப்பதிவாளர் ஆவார். 'கருப்பம்பட்டி', 'கத்துக்குட்டி' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். 'டுலெட்' படத்தின் இயக்குனர் செழியன், 'கல்லூரி', 'பரதேசி' உள்ளிட்ட பல சிறந்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்தான் சந்தோஷ். அவர் பேசியது...

ADVERTISEMENT



"நான் ஆரம்பத்தில் சிலரிடம் பணியாற்றினேன். ஆனால், எதுவும் சரியாக அமையலை. தமிழ் சினிமாவில் பொதுவாகவே பெரும்பாலானோர் தங்கள் உதவியாளராக புதிதாக சேர்பவர்களுக்கு எதுவும் கத்துக்கொடுக்க மாட்டாங்க. எல்லா விஷயங்களையும் கொஞ்சம் அடைச்சே வைப்பாங்க. ஒரு சீனை எப்படி எடுக்கணும் என்பதையோ, என்ன மாதிரி புக்ஸ் படிக்கணும் என்பதையோ கூட சொல்ல மாட்டாங்க. அப்படித்தான் ஒருத்தர்கிட்ட நான் வேல பாத்தேன். கூடுதலா அவர் என்னை பயங்கர டார்ச்சர் பண்ணார். சரியென்று அவர்கிட்ட இருந்து விலகி செழியன் சார்கிட்ட சேர முயற்சி பண்ணினப்போ, செழியன் சார். 'நீதான் இப்போ அங்க வேலை பாக்குறியே, ஏன் விலகுற?'னு கேட்டார். நான் சொன்னேன், 'அவர் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறார் சார்'னு. "அப்படி என்ன டார்ச்சர் பண்ணுறார்?" என்று கேட்டார். "என்னை கெட்ட வார்த்தையில் திட்டுறார் சார்"னு சொன்னேன். உடனே அண்ணன் சொன்னார், "அப்போ நீ முதல்ல அந்த ஆளை அடிச்சிட்டு வா, நான் உன்ன சேத்துக்குறேன்" என்று. "என்னது அடிக்கிறதா? அதெல்லாம் ரொம்ப கஷ்டம்"னு சொன்னேன். "அப்படின்னா அட்லீஸ்ட் போன் பண்ணி அவரை திட்டிட்டு வா. நீ ஒரு மனிதன், ஒரு சக மனிதன் உன்னை எப்படி கெட்ட வார்த்தையில் திட்டலாம்?"னு சொல்லி சுயமரியாதை கற்றுக்கொடுத்து, பின்னர் என்னை வேலைக்கு சேர்த்து அங்கீகாரமும் கொடுத்தார். பாத்துக்கங்க, செழியன் சார் கேட்ட குவாலிஃபிகேஷனை. ஆனா, நான் அந்த ஒளிப்பதிவாளர அடிக்கலை. சார் போன் பண்ணப்ப எடுக்கவேயில்லை".

ADVERTISEMENT



இவ்வாறு தன் அனுபவத்தை கலகலப்பாகப் பகிர்ந்துகொண்ட சந்தோஷ், தான் ஒவ்வொரு முறை வேலையில்லாமல் இருந்த போதும் செழியன் திடீரென அழைத்து ஒரு வேலை கொடுத்ததாகவும், அப்படித்தான் 'பரதேசி' படத்தின் மேக்கிங் வீடியோ, பின்னர் இந்த டுலெட் நடிப்பு வாய்ப்பு ஆகியவை கிடைத்ததாகவும் தெரிவித்தார். "சினிமாவில் பொதுவாக, மாலை ஆறு மணி ஆனால் வேறு மனிதர்களாகி விடுவார்கள். ஆனால், எங்க சார் 'கல்லூரி' ஷூட்டிங் தினமும் ஏழு மணிக்கு முடிஞ்சபின்னாடி லேப்டாப் எடுத்து வச்சு எங்களுக்கு ஒளிப்பதிவு குறித்து கற்றுக்கொடுப்பார்" என்று கூறி நெகிழ்ந்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT