Skip to main content

'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி!

Published on 21/02/2019 | Edited on 21/02/2019
tolet


கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் போன்ற வெற்றிப்படங்களில் பணியாற்றி சிறந்த ஒளிப்பதிவாளராக திகழ்கிறவர் செழியன். ஒளிப்பதிவிற்கு மட்டுமின்றி இவரின் எழுத்திற்காகவும் பல விருதுகளை பெற்று பிரபலமானவர். இவரது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் டூலெட் திரைப்படம் 2018 ஆம் வருடத்திற்கான இந்திய தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து உலகின் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை குவித்துவருகிறது. உலக சினிமாவில் ஆழமான பார்வை கொண்டுள்ள அவருடன் நாம் நடத்திய உரையாடலின் தொகுப்பு. 
 

டூலெட் திரைப்படதிற்கான மையக்கரு உங்கள் வாழ்க்கையின் உண்மை அனுபவங்களா?

2007-ல் ஒரு மே மாதம் நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து என்னை வெளிய போக சொல்லிட்டாங்க. சரி, வேற வீட்டுக்கு மாறிடலாம். அதுக்கும் இந்த அளவு வாடகைதான் இருக்கும்னு நினைச்சேன். அது ஐடி கம்பனிகளும் ரியல் எஸ்டேட் வியாபாரங்களும் வளர்ந்துவந்த காலகட்டம். அதனால் நிலைமை வேறாக மாறியிருந்தது. ஒரு மாதத்திற்குள்ளாக நிறைய வீடுகளை பார்த்துட்டோம். எங்க போனாலும் யாரு, எந்த ஊரு, ஏன் வீடு காலி பண்ணீங்க, மதம் என்ன, இனம் என்ன, அப்படினு பல கேள்விகள் வந்தது. வித்தியாசமான பல மனிதர்களை சந்திக்க நேர்ந்தது. அப்போதான் யோசிச்சேன், இதுவே ஒரு நல்ல கதையா இருக்கே, இதுக்குள்ள இவ்வளவு கேரக்டர்கள் இருக்காங்களே, இதையே ஒரு படமா பண்ணலாம்னு. அதுதான் ‘டூலெட்’ படம்.
 

எந்தெந்த பரிமானங்களில் இந்தப் படம் உண்மைத்தன்மைக்கு அருகில் இருக்கும்?

ஒருத்தன் வீடு தேடி அலையுறான் அப்படிங்குற உண்மைச் சார்ந்த கதையை எடுக்கும்போது, ஒருத்தருக்கு வேஷம்போட்டு நடிக்கவச்சாலே அது முதல் பொய் ஆகிடுது. ஏசி காருல வர ஒரு நடிகருக்கு வேஷம்போட்டு, ஓட்ட ஸ்கூட்டர் ஓட்டிகிட்டு, வீடு தேடி போங்கனு சொன்னால், படம் எடுக்குற என்னாலயே அத நம்ப முடியாது. எனவே, உண்மையான ஆட்களை கூட்டிட்டு வந்து நடிக்கவைக்கும்போது எந்த சமரசமும் இல்லாம படம் பண்ண முடியுது. அதுபோல செட்டு போடும்போதும் பாக்குறதுக்கு பழையவீடு மாதிரி காட்டினாலும் தொட்டுபார்க்கும்போது அந்த உணர்வு கிடைக்காது. அதனால நாங்க ஒரு உண்மையான பழைய வீட்டை தேர்ந்தெடுத்தோம், நடிகர்களுக்கு கதைக்குள்ள இருக்குற உணர்வு கிடைச்சுது. செட்ல இது கிடைக்காது.
 

மக்கள் மத்தியில் விருதுகளுக்கான படம் என்றால் வேற மாதிரியான ஒரு பிம்பம் இருக்கு. விருதுக்காக திரையிடும்போது விமர்சகர்கள் பாராட்டுகிற சில படங்கள் திரையரங்க பார்வையாளர்களால் நிராகரிக்கப்படுகின்றன. இந்த ரசனை முரணுக்கு என்ன காரணம்?

ஒரு ஆய்வுக் கட்டுரையை எடுத்துக்கொண்டால் அது தினத்தந்தி படிப்பவர்களுக்கோ, சாதாரண இலக்கியம் படிக்கிறவர்களுக்கோ புரியாது, ஆனால் அதை புரிந்து கொண்டு விமர்சனம் செய்கிற ஆட்களும் மேல் மட்டத்தில் இருக்கிறார்கள். அதுபோல சினிமாவில் எக்ஸ்பரிமென்டல் படம் எடுக்குற இயக்குனர்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் எக்ஸ்பரிமன்டல் படங்களுக்கு தனித்துறையே இருக்கு. நாம் சாதாரணமாக டீ குடிக்கிறோம், ஜப்பானில் டீ குடிப்பதையே விழாவாக நடத்துறாங்க.  ஒவ்வொரு நாட்டிற்கும் ரசனைகள் வெவ்வேறாக இருக்கிறது. ஐரோப்பாவில் விருது வாங்குற படத்த நான்கு தடவ பார்த்தாலும் எனக்கு புரியாம போயிருக்கு. அதுமாதிரி படங்கள பார்த்துட்டு நானும் வித்தியாசமா படம் பண்றனு புரியாத விஷயங்கள திணிச்சு ஒரு படத்த பண்ணுனா, அத பாக்குறவங்களுக்கு ஒன்னும் புரியாம இதுக்கெல்லாம் எப்படி விருது கொடுத்தாங்கனு நினைப்பாங்க. இதுதான் 20 வருடங்கள் முன்னாடிவரைக்கும் அந்த சில படங்களுக்கு நடந்திருக்கு. இப்பல்லாம் விருதுக்கான படங்களும்  வணிகத்துக்கான படங்களும் ஒன்னாகிவிட்டது. கொரியன் படங்கள் நிறைய விருது வாங்குது. ஆனால், அது ரொம்ப வேகமான படமாக இருக்கும். பொறுமையென்பது வாழ்க்கையிலும் இல்லை, சினிமாவிலும் இல்லை.
 

டூலெட் பொறுத்தவரைக்கும் இது வாழ்க்கைக்கு நெருக்கமான ஒரு கதை. இதில் என் அறிவை காட்டுறனு எந்த சோதனையும் பண்ணல. ஒரு கதையை ரொம்ப அழகாவும், நேர்மையாகவும், நதி ஓடுகிற மாதிரி இயல்பாகவும், நவின முறையிலும் சொல்லி இருக்கேன். வணிக சினிமாவிற்கு முக்கியமான பண்பு என்னவென்றால், அது பார்வையாளரை ஊக்கப்படுத்தணும். அந்த ஊக்கம் இந்தப் படத்தில் இயல்பாகவே இருக்கு.
 

உலகின் 100-க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டு நிறைய கொண்டாடப்பட்டது. அந்த மக்கள் எந்த விஷயத்தில் டூலெட் படத்தோட ஒத்துப்போறாங்க?

குழந்தை பற்றிய விஷயத்துல ஒத்துப்போறாங்க, கணவன் மனைவி உறவு விஷயத்துல ஒத்துப்போய்டுவாங்க, எல்லாத்துக்கும் மேல வீடு என்பது உலகத்தில் இருக்க எல்லா மனிதர்களுக்குமான பிரச்சனை. அதை பற்றிய படம் எனும்போது எல்லோரும் அதோட ஒத்துப்போறாங்க. அதுமட்டும் இல்லாம எல்லோரும் படத்த பற்றி பொதுவா சொன்ன ஒரு விஷயம் “இந்தப் படம் எந்த சமரசமும் செய்யாமல் அசலா இருக்கு” என்பதுதான். ஈரான் நாட்டு இயக்குனர் 'அஸ்கர் ஃபெர்கதி' இந்த படத்தை பற்றி “இட்ஸ் ஆர்கனிக்”னு சொன்னாரு. சினிமாவிற்காக எதுவும் திணிக்கப்படாமல் இயல்பாய் வளர்ந்து முடிகிற படம் இது.
 

tolet


பொதுவாக இதுபோல எக்ஸ்பிரிமண்டல் படங்களில் இசை தவிர்க்கப்படுவதற்கான காரணம் என்ன?

இசை கொண்டுவந்தாலே அது ஒருவகையான சமரசமா தோனுச்சு, அதனால லைவ் ரெக்கார்டிங் பண்ணிருக்கோம், சப்தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கோம். இசை என்பது, படம் பார்க்கும்போது அந்தக் கதைக்கான மனநிலையை உருவாக்குது.  நான் எழுதும்போதே எந்த இடத்தில மியூசிக் வரனும்னு எழுதுவேன். இந்தக் கதையை எழுதி முடிச்சபிறகு பார்த்தால் எங்கயுமே மியூசிக் தேவைப்படல. அதனால் நான் படத்தை எடுக்கும்போது லைவ் மியூசிக் போட்டு எடுத்தேன். அதனால் நடிக்குறவுங்க சுலபமா காட்சியோட மன நிலைக்கு வந்துட்டாங்க.  படம் எடுத்தப்பிறகு அந்த இசையை உருவிட்டேன்.
 

உலக சினிமாக்கள் நிறைய பார்த்திருக்கிங்க. அதன் பாதிப்பு எதுவுமே இல்லாமல் உங்களுடைய சாயலை மெயின்டைன் பண்றது எவ்வளவு கஷ்டமா இருக்கு?

ஒரு முறை, இரண்டு முறை பார்த்தா இன்ஸ்பயர் அகும். பல தடவை பார்க்கும்போது அது உங்களுக்குள்ள போய் செரிச்சிடும். அது எந்த வகையான பாதிப்பையும் உண்டாக்காது.
 

நீங்களே ஒளிப்பதிவு பண்றிங்க, நீங்களே இயக்குறிங்க. உலக சினிமாக்களில் காட்சி அமைப்பை பற்றி விவரிச்சியிருக்கீங்க.  அந்த வகையில் திரைமொழியாய் இந்தப் படம் எந்தமாதிரி அனுபவம் கொடுக்கும்?

வாழ்க்கையை சினிமாவாக பண்றது இங்க அதிகமா இல்ல. ஈரான்ல நிறைய பண்ணிட்டாங்க. இது சினிமாவா? இல்ல வாழ்க்கையா? இவ்வளவு எதார்த்தமா, இவ்வளவு உண்மையா இருக்கே எனும் உண்ர்வை கொடுக்கிறப் படம் பண்ணனும்னு நினைக்கிறேன்.  ஒரு படத்தை இடையில் நறுக்கினால் அது பாதையைவிட்டு வெளியேபோய்விடும். அதேபோல் சின்ன சின்ன காட்சிகளாய் இருக்கிற படத்தை ஒன்று சேர்க்கும்போது கடிகாரம்போல் தானாக ஓட வேண்டும். இல்லைனா அது படமே கிடையாது.
 

டூலெட் படம் பற்றின ஆச்சரியமான செய்தி என்னவென்றால் மக்களே தானாக முன் படத்துக்கான போஸ்டர் வரைஞ்சி ஒட்டுறாங்க. இது எப்படி நடந்தது?

திடீர்னு ஒருநாள், நான் முகநூலை திறக்கும்போது மதியழகன்னு ஒருத்தர் போஸ்ட் போட்டிருக்காரு. டூலெட் படத்துக்கு போஸ்டர் வரையப்போறோம். யாருவேனாலும் கலந்துக்கலாம். என்னால ஒரு டீ மட்டும் கொடுக்க முடியும்னு சொல்லியிருக்காரு. அவர் எனக்கு யாருனே தெரியாது. அவர் அத செஞ்சதுக்கு அப்புறம் எங்கெங்கயோ வரையுறாங்க. இது எப்படி நடந்துச்சினு எனக்கு உண்மையாவே தெரியல.  ஒரு மூளை வளர்ச்சி குன்றியக் குழந்தையும் போஸ்டர் வரைஞ்சிருக்கு அதுல ஒரு மூளைய போட்டு அதுக்குள்ள ஒரு வீடு வரைஞ்சி  ‘டூலெட்’னு எழுதியிருக்கு. அதை பார்த்ததும் எனக்கு உடம்பு சிலிர்த்திடுச்சு.
 

டூலெட் படம் உங்களுக்கு கத்துக்கொடுத்தது என்ன தமிழ் சினிமாவில் இதுமாதிரி  ‘இன்டிபென்டன்ட்’ படங்கள் வர்றதுக்கு என்ன செய்யலாம்?

டூலெட் எனக்கு கற்றுக்கொடுத்தது எப்பவும் ஒரு விஷயத்த நேர்மையா அணுகுங்க. நேர்மையா உங்களுக்கு தோன்றத செய்யுங்க என்பதுதான். மேலும் ‘இன்டிபென்டன்ட்’ சினிமாதான் எதிர்கால சினிமானு நினைக்குற இந்த நவீன காலத்தில் நீங்க நினைச்சத படமாக்க எது தடையா இருக்கு? ஒன்னு நடிகர்களின் இமேஜ், அப்புறம் பஜ்ஜெட். இது இரண்டையுமே உடைச்சுடுங்க. பெரிய நடிகர்கள் இல்லாம குறைஞ்ச பஜ்ஜெட்ல படம் பண்ணலாம்.
 

டூலெட் படம் ரிலீஸ் ஆகப்போகுது. இந்த நேரத்தில் படம் பார்க்கவர ஆடியன்ஸுக்கு என்ன சொல்ல நினைக்குறீங்க?

உலக சினிமாவும், வணிக சினிமாவும் எந்த இடத்தில் பிரியுதுனு நான் பார்த்ததில் நேர்மையான அனுகுமுறை வேண்டும்னு கத்துக்கிட்டேன். அது இந்தப் படத்தில் கண்டிப்பா இருக்கும்.  இது ஒரு கலை படம், உலகம் முழுக்க விருது வாங்கியிருக்கு, கண்டிப்பா போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க. இது ஒரு சுவாரசியமான படம். உலகம் முழுக்க ரசிக்கப்பட்ட ஒரு படம் உள்ளூர்ல உள்ளூர் பிரச்சனையை பேசுறத பார்க்கும்போது இன்னும் சுவாரசியமா இருக்கும். வீடு தேடுவதில் என்ன சுவாரசியம்னு கேட்டால், வீடு தேடுற பிரச்சனை அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்குது, குடும்ப உறவுகளில் அது எந்த மாதிரி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் கதை. சுவாரசியத்தை கொடுக்க உங்களுக்கு குத்து டான்ஸ் சரியா இருக்கலாம், எனக்கு அது சரியில்ல. நான் வாழ்க்கையிலிருந்து சுவாரசியத்தை சொல்றேன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த ஹீரோவுக்கு இத்தனை முகங்களா?

Published on 28/04/2020 | Edited on 28/04/2020


 

vattara valaku



தமிழில் ஒரு உலக சினிமாவான 'டுலெட்' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன்பே உலகின் பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்று தமிழ் திரையுலகுக்குப் பெருமை சேர்த்தது. 'டுலெட்' படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் செழியன். இவர் 'பரதேசி', 'ஜோக்கர்' உள்ளிட்ட சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். 'டுலெட்' படத்தின் கதைநாயகனாக நடித்தவர் சந்தோஷ் நம்பிராஜன்.


செழியனை போலவே சந்தோஷ் நம்பிராஜனும் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர்தான். 'பரதேசி' படத்தில் செழியனின் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். 'கருப்பம்பட்டி', 'கத்துக்குட்டி' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். 'டுலெட்' படத்தில் இவர் நடித்ததற்கு செழியன்தான் காரணமென்றாலும் அதன் பிறகு தன் ஆர்வத்தை நடிப்பின் பக்கம் வளர்த்துக்கொண்ட சந்தோஷ், அடுத்ததாக 'வட்டார வழக்கு' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மதுரை வட்டாரத்தில் மண்ணின் வேர்களோடு படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

  agandan



ஒளிப்பதிவாளர், நடிகர் என்பதை தாண்டி இன்னும் சில முகங்களும் இவருக்கு இருக்கிறது. யூ-ட்யூபில், 'சந்தோஷ் நம்பிராஜன்' என்ற தனது சேனலில், நடிப்புப் பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சினிமா தொடர்பான பிற அறிவுரைகளையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து சினிமா முயற்சியில் இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்படுகிறார். இது மட்டுமல்லாமல் 'நம்பிராஜன் இன்டர்நேஷ்னல் சினிமாஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'சிங்கப்பூர் தீபாவளி', 'சிங்கப்பூர் பொங்கல்' ஆகிய தனியிசை பாடல்களை தயாரித்து வெளியிட்டார். அந்தப் பாடல்கள் இணைய தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பகிரப்பட்டன. நம்பிராஜன் என்பது இவரது தந்தை கவிஞர் விக்ரமாதித்யனின் இயற்பெயர்.


தற்போது தனது அடுத்த முயற்சியாக, நம்பிராஜன் இன்டர்நேஷ்னல் சினிமாஸ் நிறுவனத்தின் மூலம் முழுக்க முழுக்க மொபைல் ஃபோனிலேயே 'அகண்டன்’ என்ற ஒரு முழுநீள திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். ஐ-ஃபோன்-11ப்ரோவில் படமாக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கும் அவர், தனது இந்த ஐடியாவுக்கு வழி காட்டியதாக 'கான்டேஜியன்' பட புகழ் இயக்குனர் ஸ்டீவன் சோடர்பர்க்குக்கு நன்றி கூறுகிறார்.           

 

 

Next Story

"என்னை கெட்ட வார்த்தையில் திட்டிய ஒளிப்பதிவாளர்" - ஹீரோ பகிர்ந்த ஷாக் நினைவு  

Published on 03/03/2019 | Edited on 03/03/2019

உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கொண்டாடப்பட்ட 'டுலெட்' திரைப்படம் சென்றவாரம் தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின்  விமர்சனக் கூட்டம் 'கூகை' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'டுலெட்' நாயகன் சந்தோஷ் ஸ்ரீராம், தான் செழியனிடம் உதவியாளராக சேர்ந்த கதையை கலகலப்பாக பகிர்ந்துகொண்டார். சந்தோஷ். அடிப்படையில் ஒளிப்பதிவாளர் ஆவார். 'கருப்பம்பட்டி', 'கத்துக்குட்டி' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். 'டுலெட்' படத்தின் இயக்குனர் செழியன், 'கல்லூரி', 'பரதேசி' உள்ளிட்ட பல சிறந்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்தான் சந்தோஷ். அவர் பேசியது...

 

tolet santhosh sriram



"நான் ஆரம்பத்தில் சிலரிடம் பணியாற்றினேன். ஆனால், எதுவும் சரியாக அமையலை. தமிழ் சினிமாவில் பொதுவாகவே பெரும்பாலானோர் தங்கள் உதவியாளராக புதிதாக சேர்பவர்களுக்கு எதுவும் கத்துக்கொடுக்க மாட்டாங்க. எல்லா விஷயங்களையும் கொஞ்சம் அடைச்சே வைப்பாங்க. ஒரு சீனை எப்படி எடுக்கணும் என்பதையோ, என்ன மாதிரி புக்ஸ் படிக்கணும் என்பதையோ கூட சொல்ல மாட்டாங்க. அப்படித்தான் ஒருத்தர்கிட்ட நான் வேல பாத்தேன். கூடுதலா அவர் என்னை பயங்கர டார்ச்சர் பண்ணார். சரியென்று அவர்கிட்ட இருந்து விலகி செழியன் சார்கிட்ட சேர முயற்சி பண்ணினப்போ, செழியன் சார். 'நீதான் இப்போ அங்க வேலை பாக்குறியே, ஏன் விலகுற?'னு கேட்டார். நான் சொன்னேன், 'அவர் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறார் சார்'னு. "அப்படி என்ன டார்ச்சர் பண்ணுறார்?" என்று கேட்டார். "என்னை கெட்ட வார்த்தையில் திட்டுறார் சார்"னு சொன்னேன். உடனே அண்ணன் சொன்னார், "அப்போ நீ முதல்ல அந்த ஆளை அடிச்சிட்டு வா, நான் உன்ன சேத்துக்குறேன்" என்று. "என்னது அடிக்கிறதா? அதெல்லாம் ரொம்ப கஷ்டம்"னு சொன்னேன். "அப்படின்னா அட்லீஸ்ட் போன் பண்ணி அவரை திட்டிட்டு வா. நீ ஒரு மனிதன், ஒரு சக மனிதன் உன்னை எப்படி கெட்ட வார்த்தையில் திட்டலாம்?"னு சொல்லி சுயமரியாதை கற்றுக்கொடுத்து, பின்னர் என்னை வேலைக்கு சேர்த்து அங்கீகாரமும் கொடுத்தார். பாத்துக்கங்க, செழியன் சார் கேட்ட குவாலிஃபிகேஷனை. ஆனா, நான் அந்த ஒளிப்பதிவாளர அடிக்கலை. சார் போன் பண்ணப்ப எடுக்கவேயில்லை".

 

director chezhian



இவ்வாறு தன் அனுபவத்தை கலகலப்பாகப் பகிர்ந்துகொண்ட சந்தோஷ், தான் ஒவ்வொரு முறை வேலையில்லாமல் இருந்த போதும் செழியன் திடீரென அழைத்து ஒரு வேலை கொடுத்ததாகவும், அப்படித்தான் 'பரதேசி' படத்தின் மேக்கிங் வீடியோ, பின்னர் இந்த டுலெட் நடிப்பு வாய்ப்பு ஆகியவை கிடைத்ததாகவும் தெரிவித்தார். "சினிமாவில் பொதுவாக, மாலை ஆறு மணி ஆனால் வேறு மனிதர்களாகி விடுவார்கள். ஆனால், எங்க சார் 'கல்லூரி' ஷூட்டிங் தினமும் ஏழு மணிக்கு முடிஞ்சபின்னாடி லேப்டாப் எடுத்து வச்சு எங்களுக்கு ஒளிப்பதிவு குறித்து கற்றுக்கொடுப்பார்" என்று கூறி நெகிழ்ந்தார்.