உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கொண்டாடப்பட்ட 'டுலெட்; திரைப்படம் சென்றவாரம் தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் மீதான விமர்சனக் கூட்டம் கூகை அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டுலெட் படக்குழுவினரோடு திரையுலக பிரபலங்களும், பல எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற ‘காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 ’ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் 'டுலெட்' திரைப்படம் பற்றிய தனதுக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
"சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் ‘செப்பரேஷன்’என்ற ஈரான் திரைப்படத்தைப் பார்த்து ரொம்ப வியந்து போனேன். இவ்வளவு இயல்பான படத்தை எப்படி எடுத்தார்கள் என எனக்குள் தாழ்வு மனப்பான்மை வந்தது. இதற்கு முரணாக, 'செப்பரேஷன்' திரைப்படத்தின் இயக்குனர் ‘அஸ்கர் ஃபர்கதி’ இந்தப் படத்தைப் பார்த்து வியந்து பேசியிருக்கிறார். உலகின் சிறந்தப் படங்களை இயக்கக்கூடிய இயக்குனர் ஒரு தமிழ் திரைப்படத்தைப் பாராட்டுவது சாதாரணமாக நிகழக்கூடியது அல்ல. அதற்காகவே செழியனுக்கு மிகப் பெரியபாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், மிகப் பெரிய படைப்பாளியின் பார்வையும் ஒரு சாதாரணப் பாமர மனிதனின் பார்வையும் சந்திக்கும் புள்ளியில் உருவாகியிருக்கிற படைப்புத்தான் ‘டுலெட்’திரைப்படம். இதுதான் உலக சினிமா.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நான் பளாசோ தியேட்டரில் படம் பார்த்தேன். அங்கு இதற்கு முன் ஆரவாரமான பல படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் டுலெட் படத்தைப் பார்க்கும்போது, செழியன் எதை நினைத்துப் படம் எடுத்தாரோ அதை எல்லோரும் அமைதியாய் உள்வாங்கினார்கள். செழியன் ஒரு ஒளிப்பதிவாளராகவும் இருப்பதால் படத்தின் காட்சிகளுக்குள் பார்வையாளர்களை அழைத்துச்செல்கிறார், படத்தில் வரும் குடும்பத்தோடு இணைத்துவிடுகிறார். அந்தக் குழந்தையை, கணவன் மனைவி பாசத்தை, அவர்களுக்குள்ளான பிரச்சனைகளை, ஏக்கங்களை அனைவரும் புரிந்துகொள்ளும்படி செய்கிறார். இந்தப் படத்தைப் பார்ப்பதே ஒரு புது அனுபவம். எந்தவொரு நாடகத்தன்மையும் இல்லாமல், எந்தவொரு மிகைப்படுத்தலும் இல்லாமல் மிகவும் இயல்பாய் நகர்கிறது இப்படம். சொல்லப்போனால் இயல்பு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை படம் முழுவதும் தெளித்திருக்கிறார் இயக்குனர் செழியன். அவர் என்னிடம் இதுபோன்ற படங்களை எடுக்கவேண்டும் என அடிக்கடி கூறுவார், இப்போது அவரே இதை செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
செழியன் இதற்குமுன் பல உலகத்திரைப்படங்களைப் பார்த்து அதை உள்வாங்கி விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். விமர்சிப்பவர்கள் எல்லாம் வித்வானாக முடியாது என்றுசொல்லுவார்கள். ஆனால் செழியன் விமர்சகர் மட்டுமல்ல சிறந்த வித்வான் என்பதையும் நிரூபித்துவிட்டார். நாங்களெல்லாம் அவரிடம்தான் உலக சினிமாக்களை அறிந்துகொண்டோம். அத்தகைய உலக சினிமாவை அவரே இயக்கி தமிழ் சினிமாவிற்கு உலகத்தை நோக்கிய மிகப் பெரியப் பாய்ச்சலை கொடுத்திருப்பதை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும். தனது எண்ணங்களையும் அறிவையும் மனதிற்குள் வைத்துக்கொண்டு அமைதியாய் இருப்பவர் செழியன். அதுபோல் இந்தப் படமும் மிக இயல்பாய் இருந்துப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. படத்தில் இளங்கோவாக நடித்த சந்தோஷ், மிக கனமான கேரக்டரை மிக அசால்ட்டாக நடித்துள்ளார். எந்தத் தோற்ற மாற்றமும் இல்லாமல் இயல்பாக இளங்கோவை அப்படியே கண்முன் காட்டியிருக்கிறார். அதுபோல் அமுதா கேரக்டரில் நடித்திருக்கும் ஷீலாவைப் போல், ஒரு நல்ல தமிழ் முகத்தை, தமிழ் பேசக்கூடிய, மிக நுணுக்கமாக நடிக்கக்கூடிய கதாநாயகியைத் தமிழ் திரையுலகிற்குக் கொடுத்ததிற்காகப் படக்குழுவினருக்கு நன்றிச் சொல்லவேண்டும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாலு மகேந்திரா இப்பொழுது இருந்திருந்தால் இப்படத்தைப் பற்றி மிக நுட்பமாகவும் பெருமையாகவும் பேசியிருப்பார். இதுபோன்ற படங்களை செழியன் தொடர்ந்து இயக்கவேண்டும். அதுமட்டும் இல்லாமல் நல்ல இசைஞானம் கொண்ட அவர் தனது அடுத்த படத்தையாவது இசையுடன் வெளியிட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்".