ADVERTISEMENT

"லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது அவசியம்" - சிம்பு  

06:36 AM Aug 20, 2020 | santhosh

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

எஸ்.பி.பி. உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண், அவர் உடல்நிலை சீராக உள்ளதாக விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி இன்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில் நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

"உயிரிலும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்துவரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது. இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர். இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டுதல் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும்.

எஸ் பி பி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவர் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம். லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும். நம் 'பாடும் நிலா' எழுந்து வரவேண்டி நம் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, நாளை 20-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ் பி பி அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்" என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT