ADVERTISEMENT

அந்த மஞ்ச சேலையையும் கொண்டாட்ட டான்ஸையும் இனி பாக்க முடியாதா?

06:36 PM Jan 28, 2020 | santhoshkumar

வித்தியாசமான குரல், கடல் வாசனை வீசும் வரிகளுடன் கானா பாடல், கொண்டாட்டமாக ஆடும் கூட்டம், முறைப்புடன் மைக்கை பிடிக்கும் பையன், எந்த உணர்வையும் காட்டாமல் பாட்டுப் பாடும் மஞ்ச சட்டை - கருப்புக் கண்ணாடி பாடகர், நடுவில் முகம் கொள்ளாத சிரிப்புடன் வெட்டி வெட்டி ஆடும் மஞ்சள் சேலை மாளவிகா... இப்படி ஒரு பாடல் அனுபவம் அதுவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கிடைத்ததில்லை. இளையராஜாவின் பாடலால்தான் பல படங்களுக்கு வாழ்க்கை கிடைத்தது என்று சினிமா சீனியர்கள் சொல்வதை கேட்க முடியும். அதேபோலத்தான் இந்த ‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’ பாடல், 'சித்திரம் பேசுதடி' என்னும் மிஷ்கினின் முதல் படத்திற்கு மிகப்பெரிய புரோமோஷனாக இருந்தது. தற்போதைய காலகட்டத்தில் வைரல் ஹிட், ட்ரெண்டிங் சாங் போன்ற வார்த்தைகளால் ஹிட்டான பாடல்கள் குறிப்பிடப்படுகின்றன. அப்போதெல்லாம் ஒரு பாடல் ஹிட் என்றால் நீங்கள் கேட்ட பாடல், எஃப்எம்களில், டிவிக்களில் அடிக்கடி வரும், எந்தவொரு குடும்ப விழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்வுகளில் ஸ்பீக்கரில் ஒலிக்கும். அவைதான் பட்டிதொட்டி எங்கும் ஹிட் என்று குறிப்பிடப்படும். அப்படி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகி, அது இடம்பிடித்திருக்கும் படமான 'சித்திரம் பேசுதடி' படத்திற்கு கவனம் பெற்றுக் கொடுத்தது 'வாளமீனுக்கும்...'.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சித்திரம் பேசுதடி தனது முதல் படமென்பதால் அந்தப் படத்தில் சில கமர்சியல் அம்சங்களை சேர்த்திருந்தார் மிஷ்கின். அப்படி சேர்க்கப்பட்டதுதான் அந்தப் பாடலென்று பின்னர் பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு குத்து பாடலை வெவ்வேறு விதமாக அணுகுவார்கள். பெரியவர்களுக்குப் பெரும்பாலும் குத்துப்பாடல்கள் பிடிப்பதில்லை. ஆனால், இந்தப் பாட்டை அனைத்து வயதினரும் ஒரே மாதிரி, ஒரு கொண்டாட்டமாகத்தான் அணுகினார்கள். காரணம், மிஷ்கின் குத்து பாடல் என்று வெறும் கவர்ச்சியை மட்டும் திணிக்காமல், நல்ல பீட்டை வைத்து அதை ஒப்பேற்றும் பாடல் வரிகள் வைக்காமல் குத்து பாடலுக்கும் ஒரு அழகியல் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக பாடல் வரி, டான்ஸ், காட்சியமைப்பு என்று அனைத்தையுமே வித்தியாசமாகக் கையாண்டிருப்பார். அதுவரை தேவா இசையில் பல கானா பாடல்களை தமிழகம் கேட்டிருந்தாலும் அவை அனைத்துமே சினிமாவுக்காக மெருகேற்றப்பட்டவையாக இருந்தன. இந்தப் பாடல், கிட்டத்தட்ட நிஜ வாழ்க்கை கானாவாக இருந்தது. 'கானா உலகநாதன்', அசல் வரிகளை தந்து பாடியிருந்தார். அவருக்கு ஒரு பாத்திரமும் இருந்தது.


மிஷ்கினின் இரண்டாவது படம் அஞ்சாதே. முதல் படத்திற்கு ஒரு பாடல் புரோமோஷனாக அமைந்தது, வெற்றியும் பெற்றது. இப்போது 'சித்திரம் பேசுதடி' என்னும் படத்தை எடுத்த இயக்குனரின் இரண்டாவது படம் வெளியாகியிருக்கிறது என்று ஒரு கூட்டமும், அந்த மஞ்ச சேலை பாட்டு வைத்த இயக்குனர் படம் என்று ஒரு கூட்டமும் 'அஞ்சாதே' படத்தை பார்த்தது. இப்படி வந்த இரு தரப்பினரையும் மிஷ்கின் மோசம் செய்யவில்லை. படம் தமிழ் சினிமாவில் அதிகம் பார்த்திராத ஒரு அழகிய மெலோ டிராமா ஆக்‌ஷன் படம். நல்ல குத்து பாடலை எதிர்பார்த்தவர்களுக்கு முந்தைய படத்தைவிட மேலும் ஒரு குத்து பாடலை ஆஃபராக சேர்த்திருந்தார் இயக்குனர். கத்தால கண்ணால... கண்ணதாசன் காரக்குடி என இரு குத்து பாடல்கள், இரண்டும் பட்டிதொட்டி ஹிட். 'கத்தால கண்ணால' பாடல் 'வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலை நினைவுப்படுத்துவதுபோல மஞ்சள் சேலைப் பெண் நடனமாடும் குத்துப் பாடல். 'கண்ணதாசன் காரக்குடி' பாடல் ஒரு பார் செட்டப்பில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஆடுவதுபோல இருக்கும். இயக்குனர் மிஷ்கின் இந்தப் பாடலின் மூலம் பாடகராகவும் அறிமுகமானார். பாரில் ஆடிப் பாடி நண்பர்கள் மகிழ்வதுபோல இருக்கும் இந்தப் பாடலின் வரிகளில் சோசியலிஸம் முதல் பல தத்துவங்களை மழை சாரல் போல தூவியிருப்பார்கள். இந்தப் படத்திலும் மஞ்சள் சேலைப் பெண் டான்ஸுடன் ஒரு குத்து பாடல் வந்ததும் இது மிஷ்கினின் ட்ரேட் மார்க்காவே மாறியது. அதே வெட்டு நடனம், லுங்கியுடன் கொண்டாட்டமாக ஆடும் ஆண்கள், வித்தியாசமான வரிகள் என தனி ஸ்டைலில் இருந்தது பாடல். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து 'நந்தலாலா' என்றொரு ஆர்ட் ஃபிலிமை எடுத்தார். இதில் எந்த மஞ்சள் சேலை பாடலும் இல்லை. மிஷ்கினின் குத்துப் பாடல் ரசிகர்கள் ஏமாந்துபோனார்கள். இது மட்டுமே காரணமல்ல. ஆனால், நந்தலாலா வெற்றி பெறவில்லை.

நான்காவது படமான 'யுத்தம் செய்' படத்தில் மிஷ்கின் வெட்டி வெட்டி ஆடும் அதே மாதிரியான மஞ்சள் சேலை பாடல் ஒன்றை ரசிகர்களுக்கு ட்ரீட்டாகக் கொடுத்தார். 'கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா' என்னும் அந்தப் பாடலில் இயக்குனர் அமீர் முதன் முதலில் திரையில் அறிமுகமானார், அதுவும் டான்ஸராக. நீத்து சந்திரா, எழுத்தாளர் சாரு நிவேதிதா (பின்னணியில் ஆர்மோனியம் வாசிப்பார்) என இந்தப் பாடல் ஆச்சரியமான அமர்க்களமாக இருந்தது. லுங்கி அணிந்த ஆண்களின் கொண்டாட்டம், மஞ்சள் சேலையில் நீத்து சந்திரா, வெட்டி வெட்டி ஆடும் நடனம் என மிஷ்கின்தனம் நிறைந்த பாடலாக இருந்தது. குத்துப் பாடல்களுக்கு புது அர்த்தத்தை, அழகியலை கொடுத்த மிஷ்கின் இந்தப் பாடலுக்குப் பிறகு தன்னுடைய படங்களில் இனி இது போன்ற மஞ்சள் சேலை பாடல்கள் இருக்காது, அதற்கான அவசியம் இனி இல்லை என்று தான் நினைப்பதாக பேட்டியளித்தார். அதேபோல அவரே அந்த மஞ்சள் சேலை குத்துப் பாடலை தன்னுடைய 'முகமூடி' படத்தின் ஓப்பனிங் சாங்கான 'குடி வாழ்த்து' பாடலில் கலாய்த்திருப்பார். பாரில் டிஸ்கர்ஷனில் இருக்கும் கண்ணாடி அணிந்த இயக்குனர் "ஓப்பன் பண்ணா மஞ்ச சேலை கட்டிக்கிட்டு ஆடுறாராடா" என்பார். 'முகமூடி'க்குப் பின் நான்கு படங்கள் வெளியாகிவிட்டன. 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் பாடலே இல்லை. 'பிசாசு' படத்தில் ஒரே ஒரு பாடல், அதுவும் ஆத்மார்த்தமான மெலடி. 'துப்பறிவாளன்' படத்தில் பாடல்கள் இல்லை. "ஒரு நல்ல படத்துக்கு பாடல் தேவையில்லை. ஆரம்பத்தில் வர்த்தக ரீதியாக தேவைப்பட்டதால் அப்படி பாடல்கள் வைத்தேன். இனி வைக்கமாட்டேன்" என்று கூறி அதை செயல்படுத்திவிட்டார் மிஷ்கின்.

தற்போது இளையராஜாவின் இசையில் 'சைக்கோ' படத்தை இயக்கியுள்ளார். இதிலுள்ள மூன்று பாடல்களும் மெலடியாக ஹிட்தான். ஆனால், ரசிகர்கள் பலர் மிஷ்கினின் படங்களில் வந்த கொண்டாட்டமான மஞ்சள் சேலை அணிந்த பெண் ஆடும் குத்துப் பாடலை மிஸ் பண்ணுகிறார்கள்.

தற்காலத்தில் நல்ல படங்களை இயக்க எண்ணும் இயக்குனர்கள் பலருக்கும் படத்தில் பாடல் இருப்பது என்பது ஒரு பாவச்செயல் போலத்தான் கருதுகிறார்கள். ஆனால், மற்ற நாட்டு படங்களையும் கம்பேர் செய்யும்போது நம் படங்களின் ஸ்பெஷலாக பாடல்கள் இருக்கின்றன. அதற்காக, ஒரு படத்திற்கு சம்மந்தமே இல்லாமல், திடீரென தஞ்சாவூரிலிருந்து ஜம்ப்படித்து நியூயார்க்கில் பாடி ஆடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான். அது படத்தின் ஓட்டத்தையும் கெடுத்து, பார்க்கும் நம்மையும் வெறுப்பாக்கிவிடும். அப்படிப்பட்ட பாடல்கள், படங்களையும் ரசித்தவர்கள்தான் நாம். அதே நேரம் திணிக்கப்படாமல், ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி அதற்கேற்ற நல்ல இசையில் அமைக்கப்படும் பாடல்கள், உண்மையில் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் கிஃப்ட்தான், அது மெலடியாக இருந்தாலும் சரி கொண்டாட்டப் பாடலாக இருந்தாலும் சரி. நம் வாழ்வில் திரையிசை பாடல்கள் ஒரு முக்கிய அங்கமாகியுள்ளன. தற்போது பெரும்பாலான படங்களில் பாடல்களின் எண்ணிக்கை, நீளம் எல்லாம் குறைந்துவிட்டன. மிஷ்கின் போல தனி அழகுடன் பாடல்களை அமைத்த இயக்குனர்கள் இதுபோன்ற முடிவு எடுத்தது ஆரோக்கியமான சினிமாவுக்கு நன்மை என்று சொல்லப்பட்டாலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மிஸ்ஸிங்தான். அந்த மஞ்ச சேலையையும் கொண்டாட்ட டான்ஸையும் இனி பாக்கவே முடியாதா என்று எண்ணுபவர்கள் பலர் இருக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT