ADVERTISEMENT

“சங்கத்திலிருந்து பாரதிராஜாவை நீக்க வேண்டும்...” -தயாரிப்பாளர்கள் மனு

12:28 PM Aug 07, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

அண்மையில் இயக்குனர் பாரதிராஜா புதிதாக தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். இது தமிழ் திரையுலகில் பலருக்கு அதிர்ச்சியளித்தது. தற்போது இதற்கு பலரிடம் இருந்தும் எதிர்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தாணு, முரளி, கே.ராஜன், கமீலா நாசர் உள்ளிட்ட பலர் நேற்று காலை ஒன்று கூடி பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்த சந்திப்பில் பேசிய தாணு, “இப்படிப்பட்ட சூழலில் பாரதிராஜா இந்த மாதிரி தவறை சத்தியமாக செய்யவில்லை. ஏனென்றால் அவர் மனம்விட்டு என்னிடம் பேசியிருக்கிறார். ஒரு 4 பேர் சேர்ந்து கொண்டு பாரதிராஜாவை சூழ்நிலை கைதி மாதிரி ஆக்கிவிட்டார்கள். உண்மையில் தனிப்பட்ட முறையில் மனவேதனையில்தான் இருந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும். பல பேர் பல விதமாக என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அவரிடம் பேசும் போது, அனைவரிடமும் கலந்து பேசி பண்ணுகிறேன் என்று சொல்லித்தான் அறிக்கை விடுத்தார். அடுத்த 2 நாட்களில் ஒரு கும்பல் அவரை சந்தித்து பேசி கையெழுத்து வாங்கி அறிக்கை கொடுத்துவிட்டது. இந்தவொரு பதட்டத்தில் தான் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து மனு ஒன்றை பத்திரப்பதிவு துறை அலுவலருக்கு அனுப்பினர். அந்த மனுவில், “பாரதிராஜாவும் சிலரும் சேர்ந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்து பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தனி அதிகாரி சங்கத்தின் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.

தனி அதிகாரி சிறப்பாக செயல்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பாரதிராஜா உள்பட சில தயாரிப்பாளர்கள் புதிய சங்கத்தை உருவாக்கி இருப்பது சங்க விதியின்படி சங்கத்துக்கு விரோதமான நடவடிக்கை. எனவே பாரதிராஜாவையும் அவருக்கு துணையாக உள்ளவர்களையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பதிவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT