barathiraja

இயக்குனர் பாரதிராஜா நேற்று சென்னையிலிருந்து தன்னுடைய சொந்த ஊரான தேனிக்கு காரில் சென்றிருந்தார். அங்கு அவருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் நெகடிவ் என்று ரிஸல்ட் வந்தது. இருந்தபோதிலும் 14 நாட்களுக்குப் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகின. அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

Advertisment

Advertisment

இந்நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பாரதிராஜா. அதில், “நடந்தது என்னவென்றால், என் சகோதரி தேனியில் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக முறைப்படி அதற்கான அனுமதியுடன் சீட்டு ஒன்று வாங்கி நான் பல மாவட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன். இங்கு வந்து சகோதரியைப் பார்த்தேன். அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார்.

பல மாவட்டங்களைக் கடந்து வந்த காரணத்தால், தேனி நகராட்சி சுகாதாரத்துறை அமைப்பிடம் தொலைபேசியில் பேசி "நான் பல மாவட்டங்களக் கடந்து வந்துள்ளேன். தயவு செய்து என்னைச் சோதித்துக் கொள்ளுங்கள்" என்றேன். அவர்களும் வந்து முறையான சோதனைகள் எல்லாம் எடுத்தார்கள். இதுவரை மூன்று முறை சோதனை எடுத்துள்ளேன்.

சென்னையில் ஒரு முறை, வழியில் ஆண்டிப்பட்டியில் ஒரு முறை, தேனியில் ஒரு முறை. மூன்றுமே நெகட்டிவ். அப்படியிருந்தாலும் முறையாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக, நெகட்டிவ் தான் சார் செல்லலாம் என்றார்கள். என்னுடன் உதவியாளர்கள் இருவர் வந்தார்கள். அவர்களுக்கும் பரிசோதனை முடிந்தது. மகிழ்ச்சியாகத் தேனியில் இருக்கிறோம்.

எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. நாங்கள் மக்கள் நலன் கருதி, எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டோம். இது தான் நடந்த உண்மை. இதைப் பெரிதுபடுத்தி, பெரிய செய்தியாகச் சொல்லி மக்களைக் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் மகிழ்ச்சியாக என் உதவியாளர்களுடன் இணைந்து, அடுத்த படத்துக்கான களத்தைத் தேர்வு செய்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு எவ்விதமான இடர்பாடும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.