ADVERTISEMENT

"கலைஞரின் பொற்கால தமிழகத்தை மீட்டெடுத்து..." மு.க.ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர் தாணு வாழ்த்து!

04:36 PM May 03, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைத் திமுக கைப்பற்றியதையடுத்து, தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து, முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் தயாரிப்பாளர் தாணு, ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அரைநூற்றாண்டு பொதுவாழ்வில் கலைஞரின் பாடசாலையில் பயின்று சிறந்த மாணவராகத் தேர்ச்சிபெற்று கடந்த காலங்களில் கட்சித் தலைமையோ, ஆட்சித் தலைமையோ கேட்டுப் பெறாமல் கலைஞர் ஆசியுடன் மக்கள் தந்த மாநகர மேயர், துணை முதல்வர், உள்ளாட்சியில் நல்லாட்சி தந்து ஏற்ற பொறுப்புகளில் எல்லாம் மிகச் சிறப்பான நிர்வாகம் தந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் பாராட்டைப் பெற்றீர்கள்.

மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாக நமக்கு நாமே, ஒன்றிணைவோம் வா திட்டங்கள் மூலம் நம் தாய் மண்ணில் உங்கள் பாதங்கள் தடம் பதிக்காத இடமே இல்லை எனும் அளவில் பயணம் செய்து மக்களின் மனங்களை வசப்படுத்தி, அதீத அன்பால் சாத்தியப்படுத்தி விட்டீர்கள். மாநிலம் தழுவிய கிராமசபைக் கூட்டங்களை நடத்தி மக்களிடம் மனுக்களைப் பெற்று அதன் தீர்வுக்காக தனி அமைச்சகமும் உயர் அதிகாரிகளையும் நியமிக்க இருப்பதைக் காண உலகமே உங்களை உற்றுநோக்கிக் காத்திருக்கிறது. கலைஞருக்குப் பிறகு கழகத்துக்கு தலைமையேற்று கட்சியைக் கட்டமைத்து, ஒருங்கிணைத்து திறம்பட நடத்தி பெருந்தொற்று காலத்திலும் மேற்கொண்ட பயணங்களால் தமிழக மக்கள் மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள். கலைஞரை போன்று கலைத்துறையிலும் தனிக் கவனம் செலுத்தி அந்தத் துறையை மிகச் சிறப்பாக செயல்பட வழி வகுத்துத் தாருங்கள்.

கூட்டணி அமைப்பதிலும் கட்சித் தலைவர்களை சந்திக்கும் போதும் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழும் போதும் கடுஞ்சொற்கள் பயன்படுத்தியதாக யாரிடமிருந்தும் எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இதுவே உங்கள் ஆளுமையின் ஆழத்தை மிக அழகாக அற்புதமாக அரங்கேற்றி வருகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை நெடிய பயணத்தில் கண்ட நீங்கள், ஆட்சிப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் துறை சார்ந்த நிர்ணயத்துவத்தை பயன்படுத்தி உங்கள் தலைமை சிறக்க கடந்த காலத்தில் நீங்கள் செயல்பட்டதை அறிந்தவர்கள் இன்றும் பாராட்டி மகிழ்கின்றனர்.

உங்களின் கடின உழைப்பு மனம் கவரும் வியூகங்கள் திமுகவுக்கு தனி பெரும்பான்மையும் கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மையையும் பெற்று தமிழக மக்களின் லட்சியப் பிம்பமாக, தமிழக இளைஞர்களின் சுடரொளியாக வெளிச்சம் பாய்ச்சி, கலைஞரின் பொற்கால தமிழகத்தை மீட்டெடுத்து வருங்கால தலைமுறைக்கான தலைவர் என்ற முத்திரை பதிக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT