ADVERTISEMENT

தி கேரளா ஸ்டோரி படம் தொடர்பாக மாணவர்களுக்கிடையே மோதல் - கல்லூரியில் பரபரப்பு

04:10 PM May 16, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இப்போது வரை ரூ.150 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் டீசர் வெளியான பின்பு தொடர் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தி கேரளா ஸ்டோரி படம் தொடர்பாக மாணவர்களுக்கிடையே மோதல் நடந்துள்ளது. மாணவர்களின் வாட்ஸ் அப் குழுவில் இப்படம் நன்றாக இருப்பதாக ஒரு மாணவர் பதிவிட, படிப்பை தவிர வேறு எதையும் பதிவிட வேண்டாம் என மற்றொரு மாணவன் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு குழுக்களாகப் பிரிந்து அவர்களுக்குள் அடித்துக் கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விடுதிக்குள் வந்து மாணவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அதில் ஒரு மாணவர், கடந்த சில ஆண்டுகளாக கல்லூரியின் வளாகத்திற்குள் மத அடிப்படையில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்துள்ளதாகச் சொல்லியுள்ளாராம்.

5 மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 4 மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1 மாணவருக்கு தலையில் அடிபட்டுள்ளதால் இன்னும் சிகிச்சையில் உள்ளார். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகவுள்ளார். வெளியாட்களின் ஈடுபாட்டைக் கண்டறிய கல்லூரி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. மேலும் தவறு செய்யும் மாணவர்கள் மீது கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினார். இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அக்கல்லூரியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT