College student drowned in Cauvery river.

Advertisment

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சத்திய நாயக்கன் பாளையம், திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் காந்தி (55). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள், மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகன் மேகராஜ் (19). இவர் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காந்தி தனது உறவினர் வீட்டு கிடா விருந்துக்காக இளைய மகன் மேகராஜைஅழைத்துக்கொண்டு ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே உள்ள சங்கிலிகருப்பண்ண சாமி கோவிலுக்கு சென்றுள்ளார். கிடா விருந்தில் கலந்து கொண்டு விட்டு மேகராஜ் மற்றும் உறவினர்கள் 10 பேர் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலுக்கு முன்பாக உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.

மேகராஜ் மற்றும் உறவினர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மேகராஜ் நீரில் மூழ்கத்தொடங்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது. சிறிது நேரத்தில் மேகராஜ் நீரில் மூழ்கினார். உறவினர்கள் மேகராஜ் நீரில் மூழ்கியதைக் கண்டு கூச்சலிட்டனர். உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய மேகராஜை தேடினர். பின்னர் சிறிது நேரத்தில் மேகராஜைத்தண்ணீரில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக அவரை கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே மேகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

Advertisment

இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில்மூழ்கி 3 வாலிபர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.