ADVERTISEMENT

ஆச்சர்ய அதிர்ச்சியை ஏற்படுத்திய கழுகு 2

11:14 AM Jul 27, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொதுவாக நம் தமிழ்ப்படங்களை பொறுத்தவரை ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரது படங்களை இந்தியில் திரையிட வேண்டுமென்றால் நேரடியாகவே வந்து வியாபாரம் பேசிமுடிக்கின்றனர். .மற்றபடி பிற நடிகர்களின் படங்களை இங்குள்ள ஃபிலிம் மீடியேட்டர்கள் மூலம் தான் வாங்கி வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர்களுக்கு அந்த லாபம் முழுதாக சேருவதிவில்லை. தற்போது தமிழக விநியோகஸ்தர்களில் முக்கியமான ஒருவரான சிங்காரவேலன் 'கழுகு 2' படத்தின் மூலம் இந்தி விற்பனையில் ஒரு புதிய பாதையை திறந்துவிட்டுள்ளார். லிங்கா படம் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தொடர் போராட்டத்தின் மூலம் பெற்றுத்தர காரணமாக இருந்தவர்தான் இந்த சிங்காரவேலன். நடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி ஜோடி சேர்ந்து நடித்துவரும் கழுகு 2 படத்தின் இந்தி உரிமையை இங்குள்ளவர்கள் ரூ.15 லட்சத்திற்கு கேட்டனர். அதிலும் இதற்குமுன் கிருஷ்ணா நடித்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதால் இதுவே அதிம் தான் என மீடியேட்டர்கள் கூறினார்களாம். ஆனால் 'கழுகு 2' படத்தின் இந்தி உரிமையை 75 லட்சத்திற்கு வியாபாரம் செய்து தயாரிப்பாளருக்கு சந்தோஷத்தையும் தமிழ் திரைப்பட துறை வியாபார வட்டாரத்தில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார் சிங்காரவேலன். கூடவே இது கிருஷ்ணாவிற்கான பட வாய்ப்புகளையும் அதிகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் 'கழுகு 2' படத்தின் பட்ஜெட்டில், 25% தொகை இந்தி உரிமை மூலமாகவே கிடைத்துவிடும். என்கிற சிங்காரவேலன்,மேலும் இதுகுறித்து பேசுகையில்... "தமிழ் படங்களுக்கான இந்தி உரிமை வியாபாரம் நடிகர்களை மட்டும் வைத்து விலை பேசப்படுவது இல்லை சண்டைக் காட்சிகள், விலங்குகள் இடம்பெறும் காட்சிகள் படத்தில் குறைந்தபட்சம் 20% இருந்தால் அப்படத்தின் விலை அதிகரிக்கிறது. அதனை இங்குள்ள மீடியேட்டர்கள் கூறுவதும் இல்லை.

அதன் பலனை தயாரிப்பாளர்களுக்கு பெற்றுத் தர முயற்சிப்பதும் இல்லை. தென்னிந்தியாவில் தயாராகும் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களின் இந்தி உரிமைகளை அதிகளவில் வாங்கி வரும் மும்பையை சேர்ந்த கோல்டு மைன் நிறுவனத்தின் உரிமையாளர் மணிஷ் ஷாவை நேரடியாக தொடர்பு கொண்டபோதுதான் இந்த விபரங்கள் தனக்கு தெரிய வந்தது. கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை உயிரை பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, 'கழுகு 2' படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் மேற்கு தொடர்ச்சி மலையை வசிப்பிடமாக கொண்டுள்ள புலி, யானை மிருகங்களும் படத்தின் பெரும்பகுதி காட்சிகளில் இடம் பெறுவதுதான் 'கழுகு 2' படத்தின் இந்தி உரிமையை 75 லட்சத்திற்கு வியாபாரமாக்கியுள்ளது. மேலும் இந்தப்படம் இந்த அளவுக்கு வியாபாரம் ஆனதற்கு காரணம் எங்களது திட்டமிட்ட தொலைநோக்கு பார்வைதான். இந்தி பட ரசிகன் தமிழ் படங்களில் என்ன எதிர்பார்க்கிறானோ அதனை 'கழுகு 2' படத்தில் கொண்டு வந்திருக்கிறோம். படப்பிடிப்பு தொடங்கும் முன் இதனை தயாரிப்பாளர்கள் இயக்குனருடன் இணைந்து திட்டமிட்டால் பட்ஜெட் படங்களுக்கான பிரதான வியாபாரத் தளமாக இந்தி உரிமை இருக்கும்” என்கிறார் சிங்காரவேலன். தான் மட்டுமே பலனடைந்தால் போதாது என நினைக்கும் சிங்காரவேலன், இதே கோல்டு மைன் நிறுவனத்தின் உரிமையாளர் மணிஷ் ஷாவுடன் சிறு பட தயாரிப்பாளர்களை சந்திக்க வைக்கும் கூட்டம் ஒன்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT