ADVERTISEMENT

காந்தாரா படக்குழு மீது புகார் - விளக்கமளித்த இசையமைப்பாளர்

12:35 PM Oct 27, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா'. சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு அண்மையில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சிம்பு, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பாராட்டியிருந்தனர். மேலும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக ‘காந்தாரா’ இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படம் எனப் பாராட்டியிருந்தார்.

இப்படத்தில் இடம்பெறும் 'வராஹ ரூபம்’ பாடல் தங்களின் 'நவரசம்' ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக ‘தய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற மலையாள இசைக்குழு தங்களது சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டியது. மேலும் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் "இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ளதால் ஒன்று போல் தோன்றலாம்" என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே கன்னட நடிகர் சேத்தன் குமார் இப்படத்தைப் பற்றி கூறிய கருத்து தொடர்பாக கர்நாடக இந்து அமைப்பினர் அவர் மீது புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் சேத்தன் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT