ADVERTISEMENT

“விஜயகாந்தின் குணாதிசயங்களை காப்பியடிக்கலாம் தப்பில்லை” - கமல்

11:10 AM Jan 20, 2024 | kavidhasan@nak…

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் கமல், சத்யராஜ், சரத்குமார் என திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரும் விஜயகாந்த்தின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், “விஜயகாந்தை நான் முதலில் சந்தித்தபோது, எப்படி பழகினாரோ அப்படித்தான் பெரிய நட்சத்திரமா மாறிய போதும் பழகினார். விஜயராஜ், விஜயகாந்த் இந்த ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் வைத்துக் கொண்டார். அதற்கான காரணம் நான் அல்ல அவர். அதாவது பல விமர்சனங்களை அவமானங்களை தாங்கி மேலோங்கி வந்தவர். அதற்கான காழ்ப்பை அவர் வைத்துக்கொள்ளாமல், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் யாருக்கும் ஏற்பட கூடாதென்பதில் முனைப்போடு இருந்தார். அது பாராட்ட வேண்டிய விஷயம். அவர் நட்சத்திரம் ஆனது அவர் உழைப்பில் வந்தது என்றாலும் ஆரம்ப, கடைநிலை நடிகர்களுக்கெல்லாம் அவர் ஒரு பொருளாக இருந்திருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தலைவர்களுக்கெல்லாம் வரும் கூட்டம், இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். அதுவே அவர் சேர்த்த சொத்து. அவர் கொடுக்கிறது பல பேருக்கு தெரியாது. 1998 காலத்தில், பத்திரிகையில் சீட்டு கிடைத்தும் படிக்க வசதி இல்லாமல் தவித்த மூன்று மாணவர்களை பற்றிய கட்டுரையை படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அவர்களுக்கான தேவையை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

ADVERTISEMENT

70, 80களில் சமூக அரசியல் கோபங்களையெல்லாம் பிரதிபலிக்கும் ஒரு சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது. அவரிடம் எனக்கு பிடித்த பல நல்ல குணங்களில் ஒன்று அவருடைய நியாயமான கோபம். கிராமத்து ஆள் போல் கோவம் வந்ததென்றால், கேட்க வேண்டியதை கேட்டுவிடுவார். எந்த அரங்கமாக இருந்தாலும் அதற்கு பயப்படமாட்டார். அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கே உதவியாக இருந்துள்ளது. அவரோடு கெஸ்ட் ரோலில் நான் நடித்த போது, அவர் காட்டிய அன்பும் மரியாதையும் இன்றும் ரீங்கரிக்கிறது. அவருக்கு பிடிக்காதவங்களை கூட கூப்பிட்டு பேசிவிடுவார். அதற்கான தைரியம் அவருக்கு உண்டு. அந்த மாதிரியான குணாதிசயங்களை நாம் காப்பியடிக்கலாம் பிரதிபலிக்கலாம் தப்பில்லை. அவர் போல் இல்லை என்று சொல்லுவது வழக்கம். அவர் போல் இருக்க வேண்டும் என்ற முயற்சியாவது செய்வோம்” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT