Skip to main content

“வடிவேலு நிச்சயம் அழுதிருப்பார் அவரும் மனிதர் தானே” - சரத்குமார்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
sarathkumar about vadivelu in vijayakanth Memorial mee

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் கமல், சத்யராஜ், சரத்குமார் எனத் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரும் விஜயகாந்த்தின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், “விஜயகாந்தின் சில விஷயங்களை நாம் கொண்டாட வேண்டும். அவருடைய குணம், பழகுகின்ற விதம், வள்ளல் பண்பு, இதுபோன்று அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவருடைய புலன் விசாரணை படத்தில் நான் வில்லனாக நடித்தேன். அப்போது ஒரு காட்சியில் எனக்கு அடிப்பட்டுவிட்டது. 3 நாள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள். ஆனால் உடனே படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன். என்னை பார்த்ததும் விஜயகாந்திற்கு அதிர்ச்சி. ஏன் இப்படி பண்றீங்க என என்னிடம் கடிந்து கொண்டார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு, ‘இந்த படத்தில் உங்களுக்கு தான் பெரிய பேரு. அதுக்கப்புறம் தான் மத்தவங்க’ என்றார். அப்படி சொன்ன பெருந்தன்மை வேறொரு எந்த கதாநாயகனுக்கும் இருக்காது. கேப்டன் பிரபாகரன் முடிந்தப்போ கூட மன்சூர் அலிகானுக்குத் தான் இந்த படத்தில் முதல் பேரு என்றார்.  

அவர் கோவம் உள்ளவர் என எல்லாருக்கும் தெரியும். கோவம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அப்படிப்பட்ட குணம் படைத்தவர் தான் அவர். கோவத்தை உடனே மறந்துவிடுவார். இவன் இப்படி பேசிட்டான், இவன ஏதாவது பண்ணனும் என்று நினைத்ததே கிடையாது. வடிவேலு வரவில்லையே என என்னிடம் கேள்வி கேட்டபோது, வடிவேலு வீட்டில் உட்கார்ந்து விஜயகாந்தை நினைத்து அழுதிருக்கலாம். அவரும் மனிதர்தான். வர முடியலேயே, வந்தால் ஏதாவது திட்டுவாங்களோ என நினைத்திருக்கலாம். ஆனால் மறப்போம், மன்னிப்போம் என்ற குணம் படைத்த விஜயகாந்த் அவர்கள், இதையெல்லாம் பெரிதாக எடுத்திருக்க மாட்டார். வடிவேலு நிச்சயமா அழுதிருப்பார் என்றேன். 

தமிழ் சமுதாயத்தில் காலம் உள்ள வரை விஜயகாந்த் வாழ்ந்து கொண்டிருப்பார். வள்ளல்களை நாடு மறப்பதில்லை. தமிழ் சமுதாயமும் மறப்பதில்லை. அதனால் அவர் விட்டுச் சென்ற சமுதாய பணிகளை நாம் செய்வோம்” என்றார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sivakarthikeyan donates nadigar sangam building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து நேற்று (22.04.2024) சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்” எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.