karthi speech in vijayakanth memorial meet

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் கமல், சத்யராஜ், சரத்குமார் எனத் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரும் விஜயகாந்த்தின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

நிகழ்ச்சியில் கார்த்தி பேசுகையில், “கேப்டனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சந்திக்கத்தான் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அவருடன் பணியாற்றியவர்கள், பழகியவர்கள், அவரின் குணாதிசயங்கள் பற்றி சொல்லும்போது, மலைப்பா இருக்கு. சரித்திரத்திலும் வரலாற்றிலும் தான் இப்படி மக்கள் இருப்பார்கள் என நினைத்திருப்போம். ஆனால் அப்படி உண்மையாகவே நம்மிடம் வாழ்ந்த ஒருத்தர் கேப்டன். அதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. நடிகர்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்துக்க வேண்டும் என அவர் வாழ்ந்தது நமக்கு ஒரு முன்னுதாரணம். ஒவ்வொரு விஷயமும் பண்ணும் போதும் அவரை மனதில் நினைத்துக்கொண்டு பண்ண வேண்டும் என ஆசைப்படுறேன்.

Advertisment

ஒரு மனிதன் முற்றும் அன்போடு, எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல், பணத்து மேல் எந்த ஆசையும் இல்லாமல், நல்லவனாவே இருந்தா இந்த சமுதாயம் மதிக்குமா என்று கேட்டால், மதிக்காது என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அப்படி ஒருத்தர் இருந்தால் மக்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்று வாழ்ந்து காமிச்சிட்டு போயிருக்கார்.

தராதரம் பார்க்காமல் கேப்டன் பழகியிருக்கார். சின்ன ஆட்களிலிருந்து பெரியவர்கள் வரையும் வெறும் நல்லது மட்டுமே சொல்கிறார்கள். அவர் ஒரு தடவை காயப்பட்டிருக்கார். அதனால் யாருமே அப்படி காயப்படக்கூடாது என நினைப்பது எவ்ளோ பெரிய மனசு. அவருடைய நினைவை எல்லாரும் சேர்ந்து கொண்டாடிக்கிட்டு இருக்கோம் என்பது ஒரு பாக்கியம். அவர் இறக்கும் போது நடிகர் சங்க நிர்வாகிகள் நாங்க ஊரில் இல்லாமல் போனது மிகப் பெரிய வருத்தம். இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும் போதுகொஞ்சமாவது அந்த வருத்தத்தை போக்க வேண்டும் என நினைத்துக் கொள்கிறேன்.

Advertisment

அவருடைய மகன்கள் இரண்டு பேரும் வந்திருக்காங்க. அப்பாவின் ஆசி உங்களை எங்கயோ கொண்டு போய் வைக்கும். நீங்க ரெண்டு பேரும் மிகப்பெரிய இடத்தில் சீக்கிரம் வர வேண்டும். மக்கள் ஆசி உங்களுக்கு இருக்கு. இது என் ஆசை. நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன்” என்றார்.