ADVERTISEMENT

'காக்கும் காக்கிக்கு வீரவணக்கம்...' - ஜிப்ரான் இசையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பாடல்!

04:00 PM Oct 21, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்நாளை மேலும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் வீரவணக்கம் என்ற ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். தலைமை காவல் அலுவலர் சசிகலா மற்றும் வெஸ்லி இப்பாடலுக்கான வரிகளை எழுத, சசிகலாவும் பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடியுள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பாடலை இன்று வெளியிட்டார்.

இப்பாடல் உருவானது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறுகையில், "வீரவணக்கம் பாடல் உருவானதே ஒரு இனிமையான அனுபவம். கரோனோ தொற்று காலத்திற்கு பிறகு, முன்கள பணியாளர்களாக பணியாற்றிய காவல்துறை நண்பர்களை வாழ்த்தும் வகையில் கமிஷனருடன் இணைந்து ஒரு பாடல் செய்தேன். அவர்களின் பணிச்சூழலையும், தியாகங்களையும் கண்டபோது மனம் அதிர்ந்தது. ஒருவர் பணிக்கு திரும்பும்போது மற்றொருவர் கரோனாவினால் மருத்துவமனைக்கு சென்றார். கரோனாவில் மரணித்தவர்கள் பற்றி நமக்கு தெரியும். ஆனால் காவல்துறை பணியில் இருந்தபோதே இறந்தவர்களை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அவர்களை பற்றி கேட்ட ஒவ்வொரு கதையும் என்னை வெகுவாக பாதித்தது. அந்த நேரத்தில் அவர்களுடன் நெருங்கி பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது திருவள்ளூர் காவல்துறை நண்பர் டாக்டர் வருண் குமார் ஐ.பி.எஸ், வீரவணக்க நாளையொட்டி ஒரு பாடல் செய்ய முடியுமா என என்னிடம் கேட்டார். நம்மால் முடிந்த ஒன்றை இவர்களுக்காக செய்ய வேண்டும் என்று நினைத்து உடனே ஒப்புக்கொண்டேன்.

இசை வலிகளை மறக்கடிக்கும். அவர்களின் வலிகளுக்கு, தியாகத்திற்க்கு எனது சிறு அர்ப்பணிப்பு இந்த பாடல். மிக குறைவான காலம் இருந்தாலும், மிகச்சிறப்பாக செய்துள்ளோம். பாடல் வரிகளை தலைமை காவல் அலுவலர் சசிகலா, வெஸ்லி இணைந்து எழுதியுள்ளனர். சில வரிகளை சந்தத்திற்கு ஏற்றவாறு நாங்களே மாற்றி அமைத்தோம். பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும், சசிகலாவும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். திருவள்ளூர் காவல்துறை அதிகாரி டாக்டர் வருண் குமார் ஐ.பி.எஸ் அவர்களின் ஈடுபாடுதான், இப்பாடல் சிறப்பாக உருவாக காரணம். அவருக்கு நன்றி. இன்று வெளியாகியுள்ள இப்பாடலை கேட்டு மகிழுங்கள். நம் உயிருக்காவும் பாதுகாப்புக்காவும் அளப்பரிய பணிகள் செய்யும் காவல்துறையினரை இந்நன்நாளில் போற்றுவோம்" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT