ADVERTISEMENT

"என்னணே லேடி கெட்டப்ல எடுத்துட்டீங்க... அதை நீக்கிருங்கனு விஜய் சொன்னார்" - 'ப்ரியமானவளே' பட நினைவுகளை பகிர்ந்த செல்வபாரதி! 

06:44 PM Nov 27, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

வசனகார்த்தாவும் இயக்குநருமான செல்வபாரதி, நக்கீரனுடனான முந்தைய சந்திப்பில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த சந்திப்பில் விஜய்யை வைத்து அவர் இயக்கிய 'நினைத்தேன் வந்தாய்' மற்றும் 'ப்ரியமானவளே' திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

"நான் தனியாக படம் பண்ணலாம் என்று நினைத்து சுந்தர் சி-யிடம் இருந்து தனியாக வந்திருந்தேன். அந்த சமயத்தில் ஒருநாள் தாணு சார் அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது விஸ்வநாதன் என்ற மேனேஜர் வந்து செல்வபாரதி நீங்கதானே என்றார். நான் ஆம் என்றவுடன் உங்களை இயக்குநர் ராகவேந்திரா சார் அழைத்துவரச் சொன்னார் என்றார். உடனே அவர் அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு ராகவேந்திரா சார், அல்லு அரவிந்த் சார் என பெரிய பெரிய ஆட்களாக இருந்தனர். இங்கு எதற்கு நம்மை அழைத்தார்கள் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளத்தை அள்ளித்தா படத்தின் ரைட்டர் நீங்கதான... நான் படம் பார்த்தேன்... நல்லா இருந்தது என்றார். மேலும், நான் பெல்லி சந்தடி என்று தெலுங்கில் ஒரு படம் பண்ணிருக்கேன். அதை நீங்கள் தமிழில் பண்ணனும் என்றும் கேட்டுக்கொண்டார். நான் டயலாக் எழுத கேட்கிறார் என்று நினைத்து எழுதிறலாம் சார் என்றேன். அவர் உடனே இடைமறித்து, நீங்கள் டைரக்ட் பண்ணனும் என்றார். நானும் சரி என்று கூறிவிட்டேன்.

முதல் படமே ரீமேக் பண்ண வேண்டாம். உன்னை ரீமேக் டைரக்டர் என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று என் நண்பர்கள் எச்சரித்தனர். எனக்கும் ரொம்ப குழப்பமாகிவிட்டது. இருந்தாலும், அவ்வளவு பெரிய ஆளிடம் சரி பண்ணுகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டோம். இனி போய் நான் பண்ணலனு சொன்னால் நல்லா இருக்காது என்று நினைத்து அந்த முடிவில் உறுதியாக இருந்துவிட்டேன். பின், கார்த்திக் சாரிடம் சென்று அந்தக் கதையை கூறினேன். அவர் ஒரு சம்பளம் கேட்டார். தயாரிப்பாளர் அதைவிட குறைவாகக் கூறினார். இதற்கிடையே பிரபு சாரை வைத்து படம் பண்ணவும் வாய்ப்பு வந்தது. சம்பள விவகாரம் காரணமாக படம் இழுத்துக்கொண்டே சென்றது. வேறொரு வேலை காரணமாக சாலிகிராமம் வழியாக நானும் என் நண்பரும் சென்று கொண்டிருந்தோம். அப்போது எஸ்.ஏ.சி. சார் அலுவலகத்தை கடக்கையில், விஜய் சாரை கேட்டுப் பார்ப்போமா என்று என் நண்பனிடம் கேட்டேன். அவரும் கேட்டுத்தான் பார்ப்போமே என்றார்.

நான் மணிவண்ணன் சாரோட இணை இயக்குநர், சுந்தர் சி-யோட இந்த இந்த படத்தில் எல்லாம் ரைட்டரா வொர்க் பண்ணிருக்கேன். இப்போ தனியா படம் பண்ண ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு என்று எஸ்.ஏ.சியிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அவர், என்ன படம்... யார் தயாரிப்பாளர் என்று கேட்டார். பெல்லி சந்தடி தமிழ் ரீமேக்... ராகவேந்திரா சார் தயாரிப்பு என்று கூறியவுடன் அவருக்கு ஆச்சர்யம். நான் படம் பார்க்க வேண்டும் என்றார். உடனே அவர் படம் பார்க்க ஏற்பாடு செய்தோம். எஸ்.ஏ.சி, விஜய், அவருடைய அம்மா என மூன்று பேரும் படம் பார்த்தார்கள். அவர்களுக்கு படம் பிடித்திருந்ததால், விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அந்த சமயத்தில்தான் பூவே உனக்காக படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றிருந்தது. விஜய் என்னுடைய படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.

அப்படியே படத்தின் வேலைகள் தொடங்கின. நான் அவரை தம்பி என்றுதான் அழைப்பேன். ஒரு இயக்குநர் அவரை தம்பி என்று அழைப்பது அதுதான் முதல்முறையாம். முதல்முறை கூப்பிட்டதும் ரொம்ப ஷாக் ஆகிட்டார். அதன் பிறகு, அவரும் அண்ணன் என்று என்னை அழைக்க ஆரம்பித்தார். மாண்டலின் வச்சு ஒரு போட்டோஷூட் எடுத்தோம். அந்த ஸ்டில் பல வருடங்களுக்கு ரொம்ப பிரபலமாக இருந்தது. வண்ணநிலவே பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கு தினமும் அவரை நடிக்கச் சொல்லி படமாக்கினேன். எதுக்குணே இதை தினமும் எடுக்குறீங்க என்று அவரே ஒருநாள் கேட்டுவிட்டார். நான் இதை கொஞ்சம் வித்தியாசமாக எடிட் செய்யலாம் என்று நினைத்துள்ளேன் என அவருக்கு சொல்ல, அவரும் தொடர்ந்து நடித்துக்கொடுத்தார். படம் வெளியானபோது நல்ல வரவேற்பு கிடைத்தது.

பின், ப்ரியமானவளே படத்தில் மீண்டும் இணைந்தோம். அதுவும் தெலுங்கு ரீமேக் படம்தான். அந்தப் படத்தின் கதையை நம்முடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று எங்கள் இருவருக்குமே குழப்பம் இருந்தது. அதையெல்லாம் சரி செய்ய படத்தில் வசனத்தை மாற்றி எழுதினோம். படத்தில் சிம்ரனுக்கு லாங்குவேஜ் பிரச்சனை இருந்தது. சில காட்சிகள் 30 டேக் வரைக்கும் போனது. ஆனால், ரொம்ப பொறுமையாக இருந்து நடித்துக்கொடுத்தார் விஜய். பிரியமானவளே படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்த நேரத்தில் டெலிவரிக்காக விஜய்யின் மனைவி லண்டன் சென்றிருந்தார். விஜய்யும் உடன் சென்றார். குழந்தை பிறந்ததும் நான் வந்துவிடுவேன். அதன் பிறகு, திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறிவிட்டுதான் விஜய் சென்றார். ஆனால், குழந்தை பிறக்க தாமதமாகியது. விஜய் என்னிடம் விஷயத்தை கூற, நான் ஷூட்டிங்கை தொடங்கி மற்றவர்கள் காட்சியை எடுக்கிறேன். நீங்கள் குழந்தை பிறக்கவும் வாருங்கள் என்றேன். அவர் சரி என்றுவிட்டார். ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டது. இரண்டாவது முறையாக மீண்டும் குழந்தை பிறக்கும் நாள் தள்ளிப்போனது. நான் அப்போதும் எந்த பிரச்சனையுமில்லை... குழந்தை பிறக்கவுமே வாருங்கள் என்றேன். மூன்றாவது முறையாகவும் குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனவுடன் என்னிடம் சொல்லாமலேயே விஜய் கிளம்பிவந்துவிட்டார். இங்கு அவர் படப்பிடிப்பில் இருந்த நேரத்தில்தான் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக லண்டனில் இருந்து செய்தி வந்தது. வேறெந்த நடிகராக இருந்தாலும் நிச்சயம் இப்படி வந்திருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் படத்தில் நடித்தார் விஜய்.

படத்தில் ஒரு காட்சிக்காக பெண் வேடமணிய வேண்டும் என்று விஜய்யிடம் தொடக்கத்தில் இருந்தே சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆனால், ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள் என்று கூறி அவர் மறுத்துக்கொண்டே இருந்தார். பையன் பிறந்த மகிழ்ச்சியில் இருந்தவரிடம் சென்று கேட்டதும் எப்படியெல்லாம் வேணுமோ எடுத்துக்கோங்க என்றுவிட்டார். நான் இதுதான் சமயம் என்று நினைத்து லேடி கெட்டப்பில் அவர் வரும் காட்சியை எடுத்துவிட்டேன். மறுநாள், என்னணே லேடி கெட்டப்ல எடுத்துட்டிங்க... இதுலாம் வேண்டாம்ணே... நீக்கிருங்க என்றார். பின், அவரிடம் எடுத்துச் சொல்லி மனதை மாற்றினேன்".

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT