ADVERTISEMENT

"ரசிகர்களை காக்க வைப்பது எங்கள் நோக்கமல்ல" - போனி கபூர் விளக்கம்!

10:59 AM Mar 29, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும், மீண்டும் படத்தின் படப்பிடிப்பு பணிகளைத் தொடங்கிய படக்குழு, தற்போது இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் போனி கபூர் ‘வலிமை’ படம் குறித்து பேசும்போது... "‘வலிமை’ அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து எங்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரசிகர்களைக் காத்திருக்க வைப்பது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் இன்னும் தயாராகவில்லை என்பதே அதற்கு காரணம். இப்போதுதான் படத்தின் பெரும்பகுதி வேலைகள் நிறைவடைந்துள்ளது. அதனால்தான் மே 1ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் உட்பட ப்ரோமோஷன் பணிகளைத் தொடங்கவுள்ளோம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

நான் இதுவரை தயாரான காட்சிகளைப் பார்த்தவரை, கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் படம் இருப்பதை என்னால் நம்பிக்கையுடன் சொல்லமுடியும். இதில் ஒரு அழுத்தமான குடும்பக் கதையும், அழுத்தமான ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கின்றன. இது அஜித் ரசிகர்களையும் தாண்டி அனைத்து ரசிகர்களையும் கண்டிப்பாக திருப்திப்படுத்தும். பைக் துரத்தல் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் அஜித்தே நடித்துள்ளார். 'நேர்கொண்ட பார்வை' படத்தைப் போல் இந்தப் படத்தையும் வட இந்தியாவிலும் வெளியிடுகிறோம்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT