ADVERTISEMENT

நியூஸ் ரீடர் டூ நியூஸ் மேக்கர்... யார் இந்த ஸ்ரீரெட்டி?

03:13 PM Jul 13, 2018 | vasanthbalakrishnan

தென் இந்திய சினிமாவில் நடிக்க வந்த போது என்னிடம் தவறான எண்ணத்துடன் முயற்சித்தார்கள் என்று பாலிவுட் கதாநாயகி ராதிகா ஆப்தே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவரைப்போன்று தமிழ், மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பல நடிகைகள் தங்களிடமும் பலர் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்கள் என்று அவ்வப்போது பேட்டிகளில் கூறியுள்ளனர். நடிகைகளுக்கு திரைப்படத்தில் வாய்ப்பளிக்க சிலரிடம் இறங்கிப் போகவேண்டிய நிலை இருப்பதாக அவ்வப்போது பேசப்படும்.

ADVERTISEMENT



கடந்த ஆண்டு 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் ட்விட்டரில் பல வீடியோக்கள் வெளிவந்து தமிழ் திரையுலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அது அடங்கி முடிந்ததும் வந்ததுதான் தெலுங்கு ஸ்ரீலீக்ஸ். இதை வெளியிட்டு தெலுங்கு திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் இவர். இவரின் குற்றச்சாட்டு, 'எனக்கு பட வாய்ப்புகள் தருவதாகக் கூறிவிட்டு, என்னைப் பலர் தவறாகப் பயன்படுத்திக்கொண்டனர்' என்பதே. பலர் அவரிடம் கொச்சையாக பேசியது, பிரைவேட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என்று எல்லாவற்றையும் ட்விட்டரில் பதிவிட்டார். அதில் தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களும், சில முக்கியஸ்தர்களின் மகன்களும் கூட இருந்தனர்.தெலுங்கு சினிமா வட்டாரமே கதிகலங்க, இவரை நடிகர் சங்கத்தில் இருந்து தூக்கினர். அதை எதிர்த்து இவர் செய்த அரைநிர்வாணப் போராட்டமும் வைரலாகப் பரவியது.

ADVERTISEMENT



கடந்த இரண்டு மாதங்களாக இவர் இதுபோன்ற பதிவுகளை தெலுங்கு சினிமா பிரபலன்களைக் குறிப்பிட்டு பதிவிட்ட இவர், தற்போது தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார். ஆம், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குனர் முருகதாஸையும், நடிகர் ஸ்ரீகாந்த் பெயரையும் சேர்த்து அவர்கள் தன்னிடம் நடந்ததுகொண்ட விதத்தை விளக்கியிருந்தார். இவர் சொல்வதெல்லாம் உண்மையா அல்லது விளம்பரத்துக்காக இதையெல்லாம் செய்கிறாரா என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இவர் குறிப்பிட்ட நடிகர்களில் நானி, இவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இவர் குறிப்பிடாத பவன் கல்யாண் இவருக்கு அறிவுரை கூறியிருந்தார். ஆரம்பத்தில் இவரைக் கண்டித்த தெலுங்கு சினிமா, பின்பு கண்டுகொள்ளவில்லை. தமிழ் சினிமா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இனிதான் தெரியவரும். இன்று இவர் நடிகர் ராகவா லாரன்ஸையும் தன் லிஸ்ட்டில் சேர்த்துள்ளார். இவரது பின்னணி என்ன?



ஸ்ரீ ரெட்டி, சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். முதன் முதலில் இவர் செய்தி வாசிப்பாளராகத்தான் தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார். 1987ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி விஜயவாடாவில் பிறந்தவர். தெலுங்கு சினிமாவில் குறைந்த பட்ஜெட் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவந்துள்ளார். அரவிந்த் 2 என்ற படம்தான் அதில் ஓரளவிற்கு தெரிந்தது. இதுவரை இவர் வெளியிட்ட பதிவுகள் அனைத்திலும் 'நீங்களும் எனக்கு பட வாய்ப்பு தருவதாக சொன்னீர்கள்' என்றுதான் முடித்துள்ளார். அதனால், 'வாய்ப்பு தருகிறேனென்று சொன்னதால் விருப்பப்பட்டு செய்துவிட்டு இப்பொழுது ஏன் அனைத்தையும் வெளியிட வேண்டும்' என்றும் சிலர் இவரை விமர்சிக்கிறார்கள்.


தமிழ் சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராக இவர் குற்றம் சாட்டி வருகிறார். ஏற்கனவே நடிகர் சங்க செயலாளர் விஷால், 'யார் மீது வேண்டுமானாலும் இப்பொழுதெல்லாம் எளிதாக அவதூறு பரப்ப முடிகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவை வெறும் அவதூறா அல்லது நட்சத்திரங்களின் உண்மை நிறங்களா, இவற்றை தமிழ் சினிமா உலகம் கண்டிக்குமா அல்லது கண்டுகொள்ளாமல் விடுமா என்பது இனிதான் தெரியவரும்.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT