ADVERTISEMENT

மத உணர்வுகளுக்கு எதிரானதா ஃபர்ஹானா? - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

03:53 PM May 11, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை (12.05.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. இப்படம் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் கூறி வந்தது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "எங்கள் நிறுவனம் மிகுந்த சமுக பொறுப்புகளை கொண்டே என்றும் செயல்பட்டு வருகிறது. மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது.

ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல. நம்முடைய தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சொர்க்க பூமி, கலைப் படைப்புகளை மிகவும் மதிக்கும் மண். தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை புரிதல் குழப்பத்தினால் அதன் வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்பதும், சர்ச்சைகளுக்கு ஆளாக்குவதும் முறையானதல்ல.

இந்தியா போலவே, குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும், மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்தப் படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம், எந்தவித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இதுவே ஃபர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT