ADVERTISEMENT

நடிகை திவ்யா வழக்கு - அர்னவிற்கு நிபந்தனை ஜாமீன்

05:14 PM Oct 28, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை திவ்யா ஸ்ரீதர் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து திவ்யா "தான் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கணவர் அர்னவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், கணவர் அடித்ததில் எப்போது வேண்டுமானாலும் கரு கலையும் அபாயம் இருப்பதாகவும்" ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் ஒரு வீடியோ வெளியிட்டு அர்னவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். பின்பு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து அர்னவ், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். பின்பு செய்தியாளர்களிடம், "தான் திவ்யாவை அடித்து துன்புறுத்தவில்லை, அதற்கான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக இருக்கிறது. தன்னுடைய குழந்தையைக் கருக்கலைப்பு செய்யும் எண்ணத்துடன் திவ்யா செயல்படுகிறார்" எனக் கூறியிருந்தார். பின்பு சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அர்னவ் மீது திவ்யா புகார் கொடுத்திருந்தார். மேலும் "அர்னவ், அவருடன் சீரியலில் நடித்து வரும் அன்ஷித்தா என்ற நடிகையுடன் நெருங்கிப் பழகி வருகிறார். இதற்கு எல்லாம் அந்த நடிகை தான் காரணம்" என குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து பேட்டி கொடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடிகை திவ்யா அளித்தப் புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் அர்னவ் மீது 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் அர்னவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு அர்னவின் வக்கீல்கள், அர்னவிற்கு ஜாமீன் வேண்டுமென பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, திவ்யா தரப்பும் அர்னவ் தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அர்னவின் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அர்னவ் தரப்பில் அவரது வக்கீல்கள் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த மனு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஸ்டாலின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அர்னவ் தரப்பில், இது குடும்ப வழக்கு அதனால் குடும்ப வழக்காக மட்டுமே பார்க்க வேண்டும். குற்ற வழக்காக பார்க்கக்கூடாது என்ற வாதங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. பின்பு நீதிபதி, அர்னவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT