ADVERTISEMENT

தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள் தெரியுமா ? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 35

12:16 PM Apr 04, 2019 | poetmagudeswaran

எழுத்துகளைப் பற்றிய அறிவினை முழுமையாய்ப் பெற்றிருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ADVERTISEMENT

அ என்பது ஓர் எழுத்து. அதனை எப்படி எழுதுகிறோம் ? முதலில் சிறிதாய்ச் சுழிக்கிறோம். அந்தச் சுழியிலிருந்தே கீழே இழுத்து வந்து முக்கால் சுழியளவுக்கு நிறுத்துகிறோம். அந்த நிறுத்தத்திலிருந்து படுகிடையாய் ஒரு கோட்டினை இழுத்து முடிவில் மேல்கீழ்க் கோடு வரைகிறோம். இத்தனை வினைகளைக்கொண்டே அ என்ற எழுத்து எழுதப்படுகிறது.

ADVERTISEMENT

கா என்னும் நெடிலை எப்படி எழுதுவது ? குறில் க என்ற எழுத்தை எழுதி அதன் அருகில் துணைக்கால் போட வேண்டும். இப்படித்தான் நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தனியெழுத்தினையும் எழுதும் முறை ஒன்றிருக்க அதன் உடன் வரும் துணையெழுத்துகளைப் பற்றி நாம் முழுமையாக அறிந்திருக்கிறோமா ?

என்னிடம் ஐயப்பாடுகளை வினவும் தங்கையொருவர் கை, சை, தை போன்ற ஐகார உயிர்மெய் எழுத்துகளில் வரும் துணையெழுத்துக்கு என்ன பெயர் என்று கேட்டார்.

கா, சா, ஞா போன்ற நெடில்களுக்குப் பயன்படும் துணையெழுத்தின் பெயர் துணைக்கால் என்று தெரியும். ஐகார நெடிலுக்குப் பயன்படுத்தும் அந்தத் துணையெழுத்தின் பெயர் தெரிவதில்லை.

கை, சை, நை, பை போன்ற ஐகார உயிர்மெய் நெடிலில் பயன்படுத்தப்படும் துணையெழுத்துக்கு இணைக்கொம்பு அல்லது சங்கிலிக்கொம்பு என்று பெயர். ஒரு கொம்போடு நில்லாமல் இன்னொரு கொம்பையும் சேர்த்து எழுதுவதால் அப்பெயர் வந்தது. சங்கிலியைப்போல் சுருண்டு கிடப்பதால் அதனைச் சங்கிலிக்கொம்பு என்றும் கூறுவர்.

நல்ல தமிழாசிரியர் வாய்க்கப் பெற்றவர்கள் துணையெழுத்துகளின் பெயர்களை நன்கு அறிந்திருப்பார்கள். தமிழாசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வம்தான் அவ்வெழுத்துகளை எழுதும் வகையை விரிவாய்க் கற்பித்து நம்மை அறிவுடையவர்களாக ஆக்குகிறது. தமிழ் எழுத்து வடிவங்களில் பயன்படுத்தப்படும் எல்லாத் துணையெழுத்துகளைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

எல்லாவகை எழுத்துகளுக்கும் அதன் அகரக் குறில் வடிவமே தலைமை வடிவம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறே உயிரெழுத்துகளுக்கு அ என்ற வடிவமே தலையாயது.


அ என்ற அந்த எழுத்தினை எழுதுவதற்கு இடுகின்ற முதற்சுழியை நாம் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகளிலும் மாற்றிக்கொள்வதில்லை. அந்த முதற்சுழியை இட்டு வெவ்வேறு வடிவங்களில் பிற எழுத்துகளை எழுதிச் செல்கிறோம். பன்னிரண்டு எழுத்துகளிலும் அ என்ற எழுத்தில் முதலில் இடப்படும் முதற்சுழி மாறாதிருப்பதைப் பாருங்கள். அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ. இவற்றில் ஈ என்ற எழுத்துக்குத்தான் தனி வடிவம் வந்தது. முற்காலத்தில் இ என்ற எழுத்தின் முடிவிலேயே ஒரு சுழியைச் சேர்த்து ஈ என்ற எழுத்தாக எழுதினர். அதனைப் போலவே ககர வரிசை எழுத்துகளுக்குக் க என்ற எழுத்தே தலைமை வடிவம். க என்ற எழுத்தினை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதில் சேர்க்கப்படும் ஒட்டுகளும் துணைவடிவங்களுமே ககர வரிசையில் வரும் பிற எழுத்துகளைக் குறிக்கும். இதனை மறவாமல் நினைவில் கொள்ள வேண்டும்.

துணையெழுத்துகள் கால்கள், கொம்புகள், சுழிகள், விலங்குகள், பிறைகள், கீற்றுகள் என்று பல வடிவங்களில் எழுதப்படுகின்றன. நமக்குக் கால்கள் கொம்புகள் சுழிகள் பற்றி ஓரளவுக்குத் தெரியுமே தவிர, அவற்றின் பெயர்கள் தெரிவதில்லை. பழக்கவழக்கத்தின்படி அவ்வெழுத்துகளை எழுதிச் செல்கிறோம்.

கொ என்ற ஒற்றை எழுத்தினைக் குறிக்கும் வகையில் மூன்று எழுத்துகள் எழுதப்படுகின்றன. முதலில் ஓர் ஒற்றைக் கொம்பினை இட்டு அடுத்து க என்னும் உயிர்மெய்யெழுத்தை எழுதி அதன் பின்னர் ஒரு துணைக்கால் வைக்கிறோம். இம்மூன்று தனித்தனி எழுத்துருக்களை எழுதினால்தான் கொ என்ற ஓர் உயிர்மெய் எழுத்து எழுதப்படுவதாகும். அவ்வுருக்களில் க என்ற உயிர்மெய்யினை நன்கு அறிந்துள்ள நமக்குக் கொம்பு பற்றியும் கால் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

கால்கள் – கால்கள் எனப்படும் துணியெழுத்து வகைகளை நாம் எழுதுகையில் மிகுதியாகப் பயன்படுத்துகிறோம். அவை துணைக்கால், கொம்புக்கால், மடக்கு ஏறுகால் என்று மூவகைப்படும்.

கா, ஙா, சா, ஞா ஆகியவற்றில் ஓர் எழுத்தினை அடுத்து அதற்குத் துணையாக வருவதால் துணைக்கால் என்கிறோம். கா என்ற நெடிலை எழுதுவதற்குக் குறில் க எழுத்தை எழுதி அடுத்தொரு துணைக்கால் இட வேண்டும்.

ஊ, ஔ, கௌ ஆகிய எழுத்துகளில் ள என்ற எழுத்து வடிவில் ஒரு துணையெழுத்து இருப்பதைப் பாருங்கள். அதனை நம் எப்போதும் ள என்று சொல்லக்கூடாது. ஒரு கொம்பினை இட்டு அதனோடு துணைக்கால் சேர்த்து எழுதப்படுகிறது. ஆகவே அதற்குக் கொம்புக்கால் என்று பெயர். ஊ என்ற நெடிலிலும் ஔகார உயிர்மெய்களிலும் ள வடிவில் பயில்வது ‘கொம்புக்கால்’ ஆகும்.

ணூ, தூ, நூ, நூ, ஞூ ஆகிய எழுத்துகளைப் பாருங்கள். அவ்வெழுத்தின் குறில் வடிவை எழுதி அதன் கீழாக வந்து மடக்கி மீண்டும் எழுத்தின் அருகில் ஒரு துணைக்கால் இடுகிறோம். அதற்கு ‘மடக்கு ஏறுகீற்றுக் கால்’ என்று பெயர்.

அடுத்து கொம்பு வகைத் துணையெழுத்துகளைப் பார்ப்போம். கெ, செ, செ, தெ, கொ, தொ போன்ற எழுத்துகளில் முதலில் வரும் துணையெழுத்து ‘ஒற்றைக்கொம்பு’ எனப்படும். கே, சே, தே, கோ, போ, மோ போன்ற எழுத்துகளில் முதலில் வரும் துணையெழுத்து ‘இரட்டைக்கொம்பு’ எனப்படும். ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு ஆகியவற்றை அனைவரும் நன்கு தெரிந்திருக்கிறோம். கை, சை, போன்றவற்றில் வருகின்ற ஐகாரக் கொம்புகளை ‘இணைக்கொம்பு, சங்கிலிக்கொம்பு’ என்றும் வழங்கலாம். ஐகாரக் கொம்பு என்றும் சிலர் கூறுவர். ஐகாரக் கொம்பினை இரட்டைக்கொம்பு என்றும் கே, கோ போன்ற நெடிலில் வழங்கும் கொம்பினை மேல்கொம்பு என்றும் சில தமிழாசிரியர்கள் கற்பிக்கின்றனர். வடிவத்தின் அடிப்படையில் அதனையும் தவறென்று கூறுவதற்கில்லை.

அடுத்துள்ளவை கீற்று வகைத் துணையெழுத்துகள். எ என்ற எழுத்தின் கீழ் முடிவில் ஒரு கீற்றினை இழுத்தால் அது ஏ என்று ஆகிவிடும். அதுதான் கீற்று. துணைக்கால் எழுத்தின் கீழே ஒரு கீற்றினை இழுத்தல் ர என்று ஆகிவிடும். இவற்றைச் சாய்நிலையில் ஒரு கீற்றாக இழுப்பதால் சாய்வுக்கீற்று என்று சொல்ல வேண்டும். ஙு, சு, பு போன்ற எழுத்துகளைப் பாருங்கள். குறில்வகை எழுத்தோடு ஒரு கீற்றினை இறங்கு நிலையில் அமைக்கிறோம். இதற்கு ‘இறங்கு கீற்று’ என்று பெயர். து, நு, ஞு, னு போன்ற எழுத்துகளில் அடிப்படை வடிவத்தில் மடக்கி ஏற்றி ஒரு மேல் கீற்று வரைகிறோம். இதற்கு ‘மடக்கு ஏறு கீற்று’ என்று பெயர். கூ என்ற எழுத்தின் முடிவும் ஒரு கீற்றுத்தான். க என்ற எழுத்தினை முதற்கண் எழுதி ஒரு வளைவை அமைத்துப் படுகிடையாகக் கீறுகிறோம். இதற்குப் பின்வளைகீற்று என்று பெயர். கீறல் வகைத் துணையெழுத்துகள் இம்முறைகளில் அமைகின்றன.

கி, தி, ரி போன்ற எழுத்துகளில் மேலிருந்து விழும் கோடுகள் துணையெழுத்து அமைப்பாகின்றன. இதற்கு மேல்விலங்கு என்று பெயர். ஓர் எழுத்தின் மேல் விளிம்பிலிருந்து கொடிபோல் தொங்குவது மேல்விலங்கு. ஓர் எழுத்தின் கீழ் விளிம்பிலிருந்து கொடிபோல் பற்றி ஏறுவது கீழ்விலங்கு. மு, கு, ரு போன்ற எழுத்துகளில் உள்ள முடிவுப் பகுதிகள் அந்தந்த எழுத்துகளின் கீழிருந்து ஏறுகின்றன. ஆதனால் அவற்றுக்குக் கீழ்விலங்கு என்று பெயர். பூ, வூ போன்ற எழுத்துகளில் முதலில் ஒரு இறங்கு கீற்றினைப் போட்டபின் ஒரு கீழ்விலங்கினைப் போட்டுச் சுழித்து முடிக்கிறோம். இதனைக் ‘இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி’ என்று கூற வேண்டும்.

கீ, தீ, ரீ ஆகிய எழுத்துகளில் மேல்விலங்கு போட்டுச் சுழிக்கிறோம். அவை மேல்விலங்குச் சுழிகள். மூ, ரூ போன்ற எழுத்துகளில் கீழ்விலங்கு போட்டுச் சுழிக்கிறோம். அவை கீழ்விலங்குச் சுழிகள். ஆ என்ற எழுத்திற்கு முதலில் அ என்ற எழுதிய பின்னர்க் கீழாக ஒரு சுழிப்பு வருகிறது. அதனைப் பிறைச்சுழி என்பர். வெறுமனே பிறை என்றும் கூறுவர்.

துணையெழுத்துகளின் வகைகளையும் எடுத்துக்காட்டுகளையும் கூறுகிறேன், இப்போது தெற்றென விளங்கும்.

துணைக்கால் – கா சா தா

கொம்புக்கால் – ஊ, கௌ, சௌ

மடக்கு ஏறுகீற்றுக் கால் – ணூ, தூ, நூ


ஒற்றைக்கொம்பு – கெ, நெ, செ

இரட்டைக்கொம்பு – கே, நே, சே

இணைக்கொம்பு/சங்கிலிக்கொம்பு – கை, சை, நை


சாய்வுக்கீற்று – ஏ

இறங்கு கீற்று – பு, சு, வு

மடக்கு ஏறு கீற்று – ணு, து, நு

பின்வளைகீற்று – கூ


மேல்விலங்கு – கி, தி, பி

கீழ்விலங்கு – மு, ரு, கு

இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி – சூ, பூ

மேல்விலங்குச் சுழி – கீ, தீ, ரீ

கீழ்விலங்குச் சுழி – மூ ரூ

பிறைச்சுழி – ஆ


இப்போது தமிழ்த் துணையெழுத்து வடிவங்களின் பெயர்கள் அனைத்தும் நமக்கு அத்துபடியாகிவிட்டன. திருவள்ளூர் என்ற ஊர்ப்பெயரின் ளூ என்ற எழுத்துக்குக் கீழ்விலங்குச் சுழியினை இடுவது சரியா, மடக்கு ஏறு கீற்றுக் கால் இடுவது சரியா என்று ஆராயலாம்.


முந்தைய பகுதி:

ஆகாவும், ஓகோவும் உடம்படுமெய்யால் தோன்றுகிறதா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 34

அடுத்தபகுதி:

எரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT