Skip to main content

சண்டமாருதம் என்றால் என்ன??? சரிகமபதநி-யின் தமிழ் பொருள் இதுதான்... கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 25

soller uzhavu


 


அண்மையில் ஒருவர் என்னிடம் வினவிய ஐயம் இது. “ஐயா… சண்டமாருதம், பிரசண்டமாருதம் என்கிறார்களே… அவற்றுக்கு என்ன பொருள் ?” நல்ல கேள்விதான். தமிழகத்தின் முதற்பெரும் திரைப்பட நிறுவனமான ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தார் ‘சண்டமாருதம்’ என்ற பெயரில் இதழொன்றையும் நடத்தினார்கள். அவ்விதழின் உதவி ஆசிரியராகச் சென்று சேர்ந்து தொழில்கற்று வளர்ந்தவர்தான் கண்ணதாசன். 


ஒரு சொற்றொடரின் பொருள் நமக்கு உடனே விளக்கமாகவில்லை எனில் அத்தொடர் பிறமொழித்தொடராக இருக்கலாம். சண்டமாருதமும் வடமொழித் தொடர்தான். மாருதம் என்பது காற்று. தென்றல் காற்றினை வடமொழியில் மந்த மாருதம் என்கிறார்கள். நறுமணக்காற்றினை ‘சுகந்த மாருதம்’ என்பார்கள். சண்டமாருதம் என்பது பெருங்காற்று. பிரசண்ட மாருதம் என்பது பலத்த காற்று. சூறாவளி, பெருஞ்சூறாவளி என்று பொருள்கொள்ளலாம்.
 

வடமொழிக்கு நேரான பல தமிழ்ச் சொற்கள் அறியப்படவில்லை. எடுத்துக்காட்டாக, பண்ணின் ஏழு பெயர்களுக்கு உரிய தமிழ்ப்பெயர்களை நாம் அறிந்திருக்க வேண்டும். சரிகமபதநி என்னும் முதலெழுத்தின்படியே அவற்றின் வடமொழிப் பெயர்களை நினைவிற்கொள்ளலாம். சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சம், தைவதம், நிசாதம் என்பவை அவை. அவற்றுக்கு நேரான தமிழ்ச்சொற்கள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவை.
 

எல்லாத் துறைசார்ந்தும் வடமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. பண்களும் அப்பெயர்களும் தமிழ்த்தோற்றுவாயுடையன என்று தமிழறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர். மேற்காணும் பெயர்களில் வடமொழிக்கு நேரான தமிழ்ச்சொற்களை அறிந்தோமே தவிர, அவற்றின் பொருள்களை அறியவில்லை. அதனை அறிதற்கு தமிழின் முதல் மொழிநூலை ஆக்கியளித்த மாகறல் கார்த்திகேய முதலியார் வழிகாட்டுகிறார்.
 

 

soller uzhavu 

சட்ஜம் (குரல்) என்பது மயிலின் ஒலி.

ரிசபம் (துத்தம்) என்பது எருத்தொலி.

காந்தாரம் (கைக்கிளை) என்பது யாட்டொலி.

மத்திமம் (உழை) என்பது கிரவுஞ்சவொலி.

பஞ்சமம் (இளி) என்பது குயிலொலி.

தைவதம் (விளரி) என்பது குதிரையொலி.

நிசாதம் (தாரம்) என்பது யானையொலி.

 
மேற்சொன்ன ஒவ்வொரு ஒலித்தன்மையையும் பண்ணொலியோடு தொடர்புபடுத்திப் பாருங்கள். இடையில் யாட்டொலி, கிரவுஞ்சவொலி என்பன யாவை என்ற ஐயமும் தோன்றலாம். ஆடு என்பதுதான் யாடு எனப்பட்டது. ஆறு, ஆடு போன்றவற்றை முற்காலத்தில் யாடு, யாறு என்று வழங்கினர். ஆட்டொலி என்பதைத்தான் தமிழறிஞர் மாகறல் கார்த்திகேய முதலியார் யாட்டொலி என்று துலக்கமான தமிழில் வழங்குகிறார். கிரவுஞ்சம் என்பது கோழியைக் குறிக்கும். 


மயில், எருது, ஆடு, கோழி, குயில், குதிரை, யானை ஆகியவற்றின் ஒலிப்பு அடிப்படைகள் பண்ணொலிகளாகத் திகழ்கின்றன. தமிழ் மொழிநூல்களில் ஒன்றேயொன்றையேனும் படித்துவிட வேண்டும் என்ற வேட்கை தோன்றினால் மாகறல் கார்த்திகேய முதலியார் எழுதிய “மொழிநூல்” என்னும் நூலைத் தேடிப்பிடித்துப் படித்துவிடுங்கள். நூற்றாண்டுக்கு முந்திய தெள்ளுதமிழ் எத்தகையது என்பதனை அந்நூல் விளக்கும். இணையத்திலேயே ‘பெயர்நிலைத் தாள்கோப்பு’ (pdf) வடிவத்தில் அந்நூல் கிடைக்கிறது. 
 

வடமொழித் தனிச்சொற்கள் இவ்வாறு இருக்கையில் அவற்றின் சொற்றொடர்கள் பல தமிழாக்கப்படமாலும் பொருளுணரப்படாமலும் தேங்கி நிற்கின்றன. மன்மதனைத் தமிழில் எவ்வாறு அழைப்பது என்று ஒருவர் கேட்டார். “ஐங்கணையன்” என்று அழைக்கலாம். ”முத்திரை மோதிரம்” என்று ஒரு சொற்றொடர் இருப்பதாகக் கொள்வோம். அது வடமொழிச் சொற்றொடர். அதனை எவ்வாறு தமிழில் வழங்குவது ? மோதிரத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச்சொல் ‘ஆழி’ என்பது. பொறியாழி என்று முத்திரை மோதிரத்தைக் குறிப்பிடலாம். கணையாழி என்பதும் அதனைக் குறித்த சொல்தான். ’தருமசாஸ்திரம்” அறநூல். “அர்த்தசாஸ்திரம்” பொருள்நூல். ‘சுதந்திரம்’ என்றால் உரிமை என்பது விளங்குகிறது. ‘சர்வசுதந்திரம்’ என்றால் என்ன ? முற்றுரிமை. இப்படிச் சொற்றொடர்கள் பலவும் மொழிக்கலப்பில் பொருளறியாதபடி தேக்கமுற்றுக் கிடக்கின்றன. பாரதியார் சுதேசகீதங்கள் என்று எழுதிய பாடல்களை “நாட்டுப்பாட்டு” என்று முறையாய்த் தமிழாக்கி வெளியிட்டார் பரலி. சு. நெல்லையப்பர். அத்தகைய ஆர்வலர்கள் இன்றைக்கு அரிதாகிவிட்டனர். அதனால் ஏற்பட்ட தேக்கநிலைதான் இது. 

 

முந்தைய பகுதி:


‘ஆச்சி’க்கு இத்தனை அர்த்தமா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 24
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்