ADVERTISEMENT

ஆகாவும் ஓகோவும் உடம்படுமெய்யால் தோன்றுகிறதா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 34

06:09 PM Mar 13, 2019 | poetmagudeswaran

உங்களுக்குக் கணக்கு மிகவும் பிடிக்கும், புதிர்களின்மீது ஈடுபாடு என்றால் தமிழ்மொழியின் புணர்ச்சி இலக்கணம் மிகவும் ஈர்க்கும். மிகச்சிறந்த துப்பறியும் படங்களின் இலக்கணமாக ஒன்றைச் செய்வார்கள். உண்மையைப் பார்வையாளர்களுக்குத் தெரிவித்துவிட்டு கதையின் பாத்திரங்கள் அவ்வுண்மையைத் தேடும்படி அமைப்பார்கள். “அட அங்கே கிடக்கிறது பார்… அதனைப் பார்க்காமல் வேறெங்கேயோ தேடிக்கொண்டிருக்கிறானே…” என்ற பதைபதைப்பைப் பார்வையாளர்களுக்கு ஊட்டுவார்கள். தமிழின் புணர்ச்சி இலக்கணமும் ஏறத்தாழ அத்தகையதுதான்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உங்களுக்குத் தெரிந்த மொழியில், உங்கள் பயன்பாட்டில் இருக்கும் சொற்றொடர்களில் என்னென்ன சேர்க்கைப் புதிர்கள் இருக்கின்றன என்பனவற்றை விளக்கும் பகுதிதான் புணர்ச்சி இலக்கணம். இனிய கற்பிப்பு முறைகளை அறியாமல் புணர்ச்சி இலக்கணத்தை வேப்பங்காயாக்கி வைத்திருக்கிறது இன்றைய கல்விமுறை.

ஒரு சொல் எப்படி முடியும், ஒரு சொல் எப்படித் தொடங்கும் என்பதுதான் புணர்ச்சி இலக்கணத்தில் முதலில் அறியவேண்டிய பகுதி.

நாம் எழுத்து என்று எழுதிக்கொண்டிருப்பவை ஒலியின் வரிவடிவம் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். அ என்னும் எழுத்து வடிவம் அ என்னும் ஒலிப்பு முறையின் வரிக்குறிப்பு. எழுத்து என்பது ஒலிகளை முறைப்படுத்திய தொகுப்பு. புணர்ச்சி இலக்கணம் என்பது ஒரு சொல்லின் எழுத்துகள் எவ்வாறு சேரும், சேரும்பொழுது என்னாகும் என்பதனை விளக்கும் பகுதி. அவ்வளவுதான்.

ஒரு சொல்லின் இறுதியோசை எப்படி இருக்கும்? உயிரெழுத்தாக இருக்கும் அல்லது மெய்யெழுத்தாக இருக்கும். அன்பு, விழா, பனி, இலை போன்ற சொற்களின் ஈற்றோசைகள் உயிரோசையில் முடிகின்றன.

அன்பு என்பதில் பு என்பது ப்+உ என்னும் ஒலிகளின் சேர்க்கை. பு என்பதில் உள்ள உ என்னும் ஓசையே ஈற்று உயிரோசை. அதாவது உ என்னும் உயிரெழுத்தில் முடியும் சொல் அன்பு. ஆ என்னும் உயிரெழுத்தில் முடியும் சொல் விழா. இ என்னும் உயிரெழுத்தில் முடியும் சொல் பனி. அவ்வாறே மரம், நிழல், காய், கண், கால் போன்ற சொற்கள் மெய்யெழுத்துகளில் முடிகின்றன.

ஒரு சொல்லின் ஈற்றெழுத்து இவ்வாறு இருப்பதைப்போலவே ஒரு சொல்லின் முதலெழுத்துகளும் எவ்வாறு தொடங்குகின்றன என்று பார்க்க வேண்டும். ஒரு சொல் உயிரெழுத்திலோ உயிர்மெய்யெழுத்திலோ தொடங்கும். அம்மா என்பது உயிரெழுத்தில் தொடங்கும் சொல். பருத்தி என்பது உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல். இதில் ப என்பது ப்+அ என்ற உயிர்மெய்தானே? இச்சொல்லின் முதல் எழுத்தாவது ப் என்னும் வல்லின மெய் என்பதனை ஒப்புக்கொள்வீர்கள்.

புணர்ச்சி இலக்கணம் என்பது இரண்டு சொற்களின் சேர்க்கை. இரு சொற்களின் சேர்க்கை என்பது முதற்சொல்லின் ஈற்றெழுத்துக்கும் இரண்டாம் சொல்லின் முதலெழுத்துக்கும் இடையே நடக்கும் வினை. ஒரு சொல்லின் முதலெழுத்து உயிராகவோ மெய்யாகவோ இருக்கையில் இரண்டாம் சொல்லின் முதலெழுத்து உயிராகவோ மெய்யாகவோ இருந்தால் என்னாகும் என்பதனை விளக்கும் இயல்தான் புணர்ச்சி இலக்கணம்.

உயிரும் உயிரும் சேர்வது, உயிரும் மெய்யும் சேர்வது, மெய்யும் உயிரும் சேர்வது, மெய்யும் மெய்யும் சேர்வது – இவ்வாறு ஈற்றெழுத்தும் முதலெழுத்தும் கொண்ட சொற்கள் எவ்வாறு சேர்கின்றன? புணர்ச்சி இலக்கணம் இதனைத் தெளிவாக விளக்குகிறது.

எடுத்துக்காட்டாக, உயிரும் உயிரும் சேர்வதை எடுத்துக்கொள்வோம். உயிரும் உயிரும் சேருமா? சேராது. உயிரும் மெய்யும்தான் சேரும். உயிரும் உயிரும் சேரவேண்டுமானால் இடையில் ஓர் உடம்பு வேண்டும். நம் மொழியின் உடம்பாக இருப்பவை மெய்யெழுத்துகள். அதனால்தான் உயிரும் உயிரும் சேரவேண்டுமானால் உடம்படுமெய் வேண்டும்.

விழா + எதற்கு = விழா + வ் + எதற்கு = விழாவெதற்கு?

பனி + இரவு = பனி + ய் + இரவு = பனியிரவு

இச்சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

விழா என்ற ஆ என்ற உயிரில் முடிகிறது. எதற்கு என்ற சொல் எ என்ற உயிரில் தொடங்குகிறது. இவை சேர்வதற்கு வ் என்ற உடம்படுமெய் தோன்றிற்று.

பனியிரவில் ய் என்ற உடம்படுமெய் தோன்றிற்று. ய், வ் ஆகிய மெய்கள் உயிரீறும் உயிர்முதலும் சேர்வதற்கு உடம்படு மெய்கள் ஆவன.

இலக்கணம் கூறுகின்ற ய், வ் என்னும் உடம்படுமெய்களோடு பேச்சு மொழியிலும் நாம் சில உடம்படு மெய்களை உருவாக்கிப் பயன்படுத்துகிறோம். இதனை என் தொடர்ச்சியான ஆய்வுகளைக்கொண்டு உறுதி செய்கிறேன்.

நம் மொழியின் மெய்யொலியில் தலையாயது க் என்பதுதான். அதனால்தான் மெய்யெழுத்து வரிசையில் க் என்பது முதலாவதாக இருக்கிறது. நம் மொழியில் ககரத்தில் தொடங்கும் சொற்கள்தாம் மிகுதியாகவும் இருக்கின்றன. அகராதியைப் புரட்டினால் ககரத்தில்தான் நூற்றுக்கணக்கான பக்கங்கள் இருக்கும். தமிழ்மொழியைக் ககரமொழி என்றே கூறலாம்.

வல்லின மெய்யான க் என்னும் மெய்க்கு மூவகை ஒலிகளைக் கற்பிக்கலாம். அக்கா என்பதில் உள்ள ககரம் அழுத்தமான வல்லினம். தங்கை என்பதில் உள்ள ககரம் மென்மையான வல்லினம். கரும்பு, கிணறு, கொடை போன்றவற்றில் தோன்றுவது இடைநிலை வல்லினம். இம்மூவொலிகளில் தங்கை என்பதில் உள்ள மென்மையான க் என்னும் மெய்யை நாம் உடம்படுமெய்யாகவே பேச்சுமொழியில் பயன்படுத்துகிறோம். எப்படி?

ஒன்றை வியந்து நிற்கையில் நம்மை அறியாமல் ஆ என்று வாய்பிளப்போம். ஆ என்றும் சொல்வோம். ஆ என்பதனைத் தொடர்ந்து சொல்வது ஆஆ என்றாகும். புணர்ச்சி இலக்கணப்படி ஆ என்ற உயிர் ஆ என்னும் இன்னோர் உயிருடன் சேர்கையில் ‘ஆவா’ என்று ஆகவேண்டும். ஆனால், நாம் ஆகா என்று சொல்கிறோம். அந்த ‘ஆகா’வில் இருப்பது க் என்னும் உடம்படுமெய். ஆ + க் + ஆ = ஆகா. ஓகோ என்பதிலும் க் என்னும் உடம்படுமெய் பயில்கிறது. ஓ + க் + ஓ = ஓகோ. ஐய+ஓ என்னும் உணர்ச்சித் தொடரில் க் பயின்று ஐயகோ ஆகிறது.

நம்முடைய தலையாய மெய்யெழுத்தான ககரம் நம்முடைய உணர்ச்சிச் சொற்களுக்கு உடம்படுமெய்யாவதை அறியாமல் ஆஹா, ஓஹோ என்று வேற்றெழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவது கொடுமை.

முந்தைய பகுதி:

தோல்வி எப்படி வந்தது? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 33

அடுத்த பகுதி:


தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள் தெரியுமா ? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 35

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT