Skip to main content

கர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா ? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29 

Published on 18/12/2018 | Edited on 18/12/2018
soller uzhavu

 

பொருள் தருகின்ற சொற்களையே நாம் பேசுகிறோமா ? நாம் பேச்சில் பயன்படுத்தும் பல சொற்கள் அவற்றிற்குரிய பொருள்களைத் தருபவைதாம் என்றாலும் இடையிடையே உரிய பொருளைத் தர இயலாத ஒலிக்கூட்டுகளையும் எழுப்புகிறோம்.

 

“கதவைப் ‘படார்’னு சாத்தாதே…”

 

“பொத்து’னு விழுந்துட்டான்..”

 

“என்ன திடீர்னு இந்தப் பக்கம் ?”

 

“எதுக்கு மசமசன்னு நிக்கிறே…. போயி ஆக வேண்டிய வேலையைப் பாரு…”

 

“மழை கிழை பெஞ்சுதா ?”

 

மேற்காணும் பேச்சுத் தொடர்களைப் பாருங்கள். படார் என்ற ஒலிக்குறிப்பு. திடீர் என்ற விரைவுக்குறிப்பு. (திடீர் நகர் என்று பெயரே வைத்துவிட்டார்கள்). மசமச என்று உணர்த்தும் குறிப்பு. மழையோடு கிழை என்ற பொருளில்லாத ஒன்று. இவற்றைச் சொல் எனலாமா ? இவை ஏன் பேச்சில் இடம்பெறுகின்றன ? இவற்றை எவ்வாறு பொருள்கொள்வது ? இவற்றைப் பேச்சில் பயன்படுத்துவதோடு எழுதவும் தயங்குவதில்லையே. ஏன் ? 

 

இவற்றை ஏதோ ஒன்றை உணர்த்த விரும்பிய ஒலிக்குறிப்புகளாகக் கருத வேண்டும். மொழியின் தோற்றுவாயும் இத்தகைய ஒலிக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஓர் ஒலிக்குறிப்பானது திரளானவர்களால் ஏற்கப்பட்டு நிலைத்தபோது ஒரு சொல் தோன்றியது. மொழியின் இவ்வியல்புகளைத் தேவநேயப் பாவாணரின் துணைகொண்டு விளக்குவது பொருத்தமாக இருக்கும்.

 

சொல்லினைக் கிளவி என்று சொல்வார்கள். சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்கிறது, நினைவில் வைத்திருந்து பேசுகிறது என்பதால்தான் கிளி என்ற பெயரும் வந்தது. கிளத்தல் என்றால் ஒலியெழுப்பி ஒன்றைக் கூறுவது. கிளத்துவதால் கிளி. நெஞ்சொடு கிளத்தல் என்பது திருக்குறளில் ஓர் அதிகாரம். சொல்லாகத் தகுந்த, ஏதேனும் ஒன்றை உணர்த்தவல்ல ஒழுங்கான ஒலிப்புகள் அனைத்தும் கிளவி எனப்படும்.  

 

கிளவி நிலையில் நாம் பற்பல ஒலிகளை எழுப்புகிறோம். கத்துவதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

 

சொல் போன்ற ஒலிக்குறிப்பினை, கிளவியினை ஒருமுறை சொல்வது. படார், மடார், படீர், திடீர், குபீர் ஆகியவற்றைப் பேச்சுத் தொடரில் ஒருமுறை வருமாறு பயன்படுத்துவோம். இவற்றை ‘ஒற்றைக் கிளவி’ என்று கொள்ள வேண்டும்.

 

அடுத்து வருவது இரட்டைக் கிளவி. சலசல, பளபள, மசமச, குடுகுடு, வெடவெட, கரகர என்று பலவாறான ஒலிகளில் கிளத்துகிறோம். இரண்டோ இரண்டுக்கு மேற்பட்ட முறையோ அத்தகைய பொருளற்ற தொடர்கள் தொடர்ந்து வரும். இரட்டைக் கிளவிகளை நமக்கு நன்றாகத் தெரியும்.

 

ஒற்றைக் கிளவியாகவோ இரட்டைக் கிளவியாகவோ பேசுவதோடு முடிந்ததா ? வேறு ஏதேனும் வகையில் பொருளற்ற ஒலிக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறோமா ?

 

எதுகைக் கிளவியாக ஒன்றைச் சொல்கிறோம்.

 

“சட்டுபுட்டுன்னு உடனே கிளம்பு”   

 

“கரடி கர்ருபுர்ருன்னு கத்துது…”

 

இத்தொடர்களில் ஓர் ஒலிக்குறிப்புக்கு எதுகையாக இன்னொன்று தொடர்ந்து வருவதைக் காணலாம். எதுகை என்பது ஒரு சொல்லின் முதலெழுத்தைத் தவிர்த்த பிற அனைத்து எழுத்துகளும் ஒன்றாகி வருதல். மானே தேனே, மயிலே குயிலே, வந்தான் தந்தான்… ஆகியவை எதுகைகள். சட்டு புட்டு, கர்ரு புர்ரு ஆகிய ஒலிக்குறிப்புகள் எதுகைத்தன்மையால் ஆகியிருப்பதைக் காணலாம்.

 

எதுகைக் கிளவியின் இன்னொரு வடிவமாகத்தான் “மழை கிழை உண்டா… காசு கீசு கொடுத்தியா… காத்து கீத்து வீசுதா ?” என்று கூறப்படுவதையும் பார்க்க வேண்டும். இதில் முதற்சொல் பொருளுடைய சொல்லாகவும் அடுத்து வருவது பொருளற்ற கிளவியாகவும் இவ்விரண்டும் எதுகைத் தன்மையோடும் இருப்பதைக் காணலாம். எவ்வொரு சொல்லுக்கும் குறிலுக்குக் கி என்றும் நெடிலுக்குக் கீ என்றும் இக்கிளவிகள் தொடங்குவதையும் கவனிக்க வேண்டும். மழை கிழை, காசு கீசு, காத்து கீத்து, படிப்பு கிடிப்பு, அறிவு கிறிவு. 

 

எதுகைக் கிளவி எழுந்தால் மோனைக் கிளவியும் எழுமே. ஆம். முதலெழுத்துகள் ஒன்றாய் வரும் ஒலிக்குறிப்புகளையும் எழுப்புகிறோம்.

“கிண்கிணீர்னு மணியடிச்சுது…”

"வெக்குவேகுன்னு ஓடி வந்தான்…”

 

மேற்கண்ட தொடர்களில் “கிண் கிணீர், வெக்கு வேகு” என்று முதலெழுத்து ஒற்றுமையுள்ள மோனைக் கிளவிகள் அமைந்திருக்கின்றன.

 

இத்தகைய ஒலிக்குறிப்புகளும் கிளவிகளும் ஒரு சொல் தோற்றுவாயின் ஆதி வழியை நமக்குக் காண்பிக்கின்றன. தொல்மனிதன் கிளவியாக்கிய அம்முறையின் எச்சம் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும்கூட இன்றுவரை நம்மிடமும் தொடர்ந்து வருகிறது. அத்தகைய தொடர்களைப் பேசுவது மட்டுமின்றி எழுத்திலும் ஆள்கிறோம். அவ்வாறு அக்கிளவிகள் எழுத்தில் இடம்பெறுவதை யாரும் குறைத்து மதிப்பிடுவதுமில்லை.

 

முந்தைய பகுதி:

 

ஒருநாளா ? ஒரு நாளா ? ஒருமுறையா ? ஒரு முறையா ? கவிஞர். மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 28