ADVERTISEMENT

கிடைத்தது எளிது, ஆனால் தக்கவைத்தது பெரிது! திமுகவுக்கு 'உதயசூரியன்' கிடைத்த கதை... சின்னங்களின் கதை #2

04:10 PM Mar 30, 2019 | Anonymous (not verified)

தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்துமோதல்களைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. திமுக தொடங்கி 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1953ஆம் ஆண்டு கலைஞரால் திமுகவில் இணைக்கப்பட்டவர் எம்ஜிஆர். கலை, இலக்கியம் வழியாக இயக்கம் தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் வேகமாக செல்வாக்குப் பெற்றது. 1951 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வளரும் நிலையில் இருந்த திமுக அந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதே சமயம் தனது தேர்தல் நிலைப்பாடை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதுவே திமுகவின் முதல் தேர்தல் அறிக்கை என கருதப்படுகிறது. இந்தியாவிலேயே அதுதான் முதல் தேர்தல் அறிக்கை என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கையில், “திராவிடர்களின் கருத்தை அறியாமலும், திராவிடர்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் ஒரே கட்சியின் சர்வாதிகார முறையில் தயாரிக்கப்பட்ட அரசியல் சட்டத்தை கண்டிக்கும் வகையில் தேர்தலில் திமுக தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால், ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய திராவிட இனமொழி வழி மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடநாடு கோரிக்கையை ஏற்கும் கட்சிகளை திமுக ஆதரிக்கும்” என்று கூறப்பட்டிருந்தது.

அந்தத் தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற 15 வேட்பாளர்கள் வெற்றிபெற்றாலும் அவர்களில் பலர் திமுகவுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே, 1957ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதா வேண்டாமா என்று திமுக மாநாட்டு வாசலிலேயே வாக்குப்பெட்டிகள் வைத்து தொண்டர்களின் கருத்து அறியப்பட்டது. பெரும்பான்மையோர் விருப்பத்தின் அடிப்படையில் திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது. அந்த முதல் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு நிறைய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. 112 இடங்களில் போட்டியிட்ட திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றது. இவற்றில் சேவல் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் பலர் வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து திமுக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. தனது சின்னமாக உதயசூரியனை தேர்வு செய்தது. அப்போதிருந்து அந்த சின்னத்திற்கு இரண்டு முறை சோதனை வந்தது. ஆனால், அந்த சோதனைகளைக் கடந்து இன்றுவரை சுமார் 52 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்தை தக்கவைத்திருக்கிறது.

1962 தேர்தலில் 50 இடங்களில் வென்ற திமுக, 1967 தேர்தலில் பெரும்பான்மை பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால், 1969 ஆம் ஆண்டு அண்ணா மறைவைத் தொடர்ந்து பெரும்பான்மை திமுக எம்எல்ஏக்களின் ஆதரவோடு கலைஞர் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதல்வரான பிறகு 1971 ஆம் ஆண்டு திமுக 184 இடங்களைக் கைப்பற்றி அரசு அமைத்தது. திமுகவின் இந்த வளர்ச்சி மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸுக்கும் தமிழகத்தில் இருந்த தமிழகத்தில் இருந்த திமுக எதிர்ப்பாளர்களுக்கும் பிடிக்கவில்லை. பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை அமல்படுத்துவதில் கலைஞர் காட்டிய வேகம் அவர்களுடைய வெறுப்பிற்கு ஒரு காரணமாக இருந்தது.

அவர்கள் திமுகவில் இருந்த எம்ஜிஆரை மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை மூலமாக மிரட்டினர். அன்னிய செலாவணி விவகாரத்தில் சிக்கிய எம்ஜிஆர் திமுக மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுவெளியில் பேசத் தொடங்கினார். இதையடுத்து அவர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அந்தப் பிளவைத் தொடர்ந்து திமுகவின் சின்னமான உதயசூரியனை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எம்ஜிஆருடன் பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் மட்டுமே வெளியேறி இருந்தனர். அவர் ஒருவரைத் தவிர எம்எல்ஏக்கள் யாரும் வெளியேறவில்லை. எனவே, திமுகவின் சின்னமாக உதயசூரியன் தொடர்ந்தது.

இந்நிலையில் இந்திரா கொண்டுவந்த நெருக்கடிநிலையை திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்தது. எனவே, 1976 ஜனவரி மாதம் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுகவின் முக்கிய தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு மிசா சட்டத்தின்கீழ் விசாரணையே இல்லாமல் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். நெருக்கடி நிலைக் காலத்தில் மாநிலக் கட்சிகளுக்கு தடைவிதிக்கும் ஒரு நோக்கம் இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதிமுக என்ற பெயரை எம்ஜிஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார். ஆனால், திமுக தனது பெயரை மாற்ற மறுத்துவிட்டது. 1977 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தலில் திமுக 47 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் திமுக தனது வாக்குவங்கியை தக்கவைத்து மாநிலக் கட்சி என்ற அந்தஸ்த்தையும் சின்னத்தையும் நிரந்தரப்படுத்தியது.

1980 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக அதிமுகவை படுதோல்வி அடையச் செய்தது. அதைத்தொடர்ந்து வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் பிடிவாதத்தால் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டு உள்ளடி வேலைகளால் தோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு, எம்ஜியார் சாகும்வரை இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்தார். அவருடைய மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு ஆண்டு ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தை காங்கிரஸ் ஆட்சி செய்தது. அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால், திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றினாலும் கலைஞர் பெண்களுக்கு சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் என்று ஏராளமான திட்டங்களை அறிவித்தார். ஆனால், திமுக ஆட்சி ஆளுநரின் அறிக்கையே இல்லாமல் கலைக்கப்பட்டது. தமிழகத்தில் வைத்து ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் விடுதலைப் புலிகள் கொன்றனர். அந்தப் பழியை காங்கிரஸும் அதிமுகவும் திமுகமீது போட்டதால் தமிழகமே ரத்தக்களறியானது. திமுகவினரின் சொத்துகள் சூறையாடப்பட்டன. அந்தத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. ஆனாலும் தனது வாக்குவங்கியை தக்கவைத்து சின்னத்தை பாதுகாத்துக்கொண்டது.

அந்தத் தேர்தலைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு திமுக இன்னொரு பிளவைச் சந்தித்தது. கலைஞருக்கு எதிராக வைகோ தலைமையில் திமுகவின் 8 மாவட்டச் செயலாளர்களும், ஏராளமான பொதுக்குழு மற்றும் இளம் நிர்வாகிகளும் போர்க்கொடி உயர்த்தினர். தாங்கள்தான் உண்மையான திமுக என்று திமுகவை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டனர். திமுகவின் சின்னத்தை முடக்கவும் முயற்சி செய்தனர். ஆனால், திமுகவின் சட்டத்திட்டங்களும் விதிகளும் மிகத் தெளிவாக இருந்ததால் எதிர் அணியின் வேண்டுகோளை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. திமுகவும் அதன் சின்னமும் இரண்டாவது முறையாக தக்கவைக்கப்பட்டது. தங்கள் முயற்சி தோற்றதால் வைகோவும் அவருடைய ஆதரவாளர்களும் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். வைகோவுக்குப் பிறகு, திமுகவில் கட்சியைப் பிளக்கும் அளவுக்கு பெரிய சம்பவங்கள் நிகழவில்லை. எனவே, இன்றுவரை திமுகவின் சின்னமாக உதயசூரியனே நீடிக்கிறது.

(அடுத்து அதிமுக சின்னம் குறித்து பார்க்கலாம்)

அடுத்த பகுதி

அதிமுகவின் தோற்றமும் இரட்டை இலையும்! சின்னங்களின் கதை #3


முந்தைய பகுதி

முடக்கப்பட்ட காங்கிரஸின் சின்னங்கள்! சின்னங்களின் கதை #1

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT