ADVERTISEMENT

"இரண்டு பேருக்கும் ஒன்னுதான்" - பிட்ச் விமர்சனங்களுக்கு ரோகித் பதிலடி!

11:43 AM Feb 22, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து படுதோல்வியடைந்தது. இதன்பிறகு முன்னாள் இங்கிலாந்து வீரர்கள், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற பிட்ச் குறித்து விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு கவாஸ்கர் உள்ளிட்ட இந்திய ஜாம்பவான்களும் இங்கிலாந்து மைதானங்களை ஒப்பிட்டு பதிலடி தந்தனர்.

இந்தநிலையில் பிட்ச் தொடர்பான விமர்சனங்களுக்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பதிலளித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையே நடைபெறப்போகும் மூன்றாவது டெஸ்ட் போட்டியையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்தியா அணி எப்போதும் பிட்ச் குறித்து குறை கூறியது கிடையாது“ எனத் தெரிவித்தார்.

ரோகித் சர்மா இதுகுறித்து, "இந்தியாவுக்கு வெளியே பயணிக்கும்போது, பிட்ச்சுகள் குறித்து நாங்கள் ஒருபோதும் புகார் செய்வதில்லை. எந்த மாதிரியான பிட்ச் கிடைக்கிறதோ அதில் விளையாடிவிட்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அனைவரும் இதனைச் செய்ய வேண்டும். குறிப்பாக நமது நிபுணர்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேசவேண்டும், பிட்ச்களைப் பற்றி அல்ல.

பிட்சுகளைப் பற்றி நாங்கள் அதிகமாக யோசிப்பதில்லை. நாங்கள் கிரிக்கெட் மட்டுமே விளையாடுகிறோம். பிட்ச் இரு அணிகளுக்கும் ஒன்றுதான். எனவே அது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பது பற்றி ஏன் இவ்வளவு விவாதம் நடக்கிறது என எனக்குப் புரியவில்லை. இந்தியாவில் பிட்ச்சுகள் பல ஆண்டுகளாக இதுபோன்று தயாரிக்கப்படுகின்றன. எதுவும் மாறிவிட்டது அல்லது எதுவும் மாற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

ஒவ்வொரு அணியும் தங்கள் நாட்டு சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றன. இதுவேண்டாமென்றால் ஐ.சி.சி, பிட்ச்கள் எப்படி இருக்க வேண்டுமென்று விதிமுறைகளை உருவாக்க வேண்டும். பிட்ச்கள் இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது நாங்கள் சிரமப்படுகிறோம். எனவே இதைச் சுற்றி, பிட்சுகளைச் சுற்றி, விவாதம் இருக்கக்கூடாது, ஏனெனில் இரு அணிகளும் அதில் விளையாடுகின்றன. யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT