ADVERTISEMENT

3 ஆண்டுகளுக்கு முன்பு 6 மாதங்கள் வீல்சேர்; இன்று ஐ.பி.எல்.ஏலத்தில் 4.2 கோடிகள் குவித்த இளம் வீரர்

05:07 PM Dec 21, 2018 | tarivazhagan

நடந்துமுடிந்த ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்திருந்தன. சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்துள்ள மார்டின் குப்தில் ஏலத்தின் முதல் சுற்றில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. பிரபல வீரர்களான பிரெண்டன் மெக்கலம், ஸ்டெய்ன், மோர்னே மோர்கல் ஆகியோர் விலை போகவில்லை. யுவராஜ் சிங் அடிப்படை விலைக்கே எடுக்கப்பட்டார். அதேசமயம் அதிகம் அறிமுகமில்லாத வருண் சக்ரவர்த்தி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் போன்ற உள்நாட்டு இளம் வீரர்கள் ஐ.பி.எல். அணிகளின் கவனத்தை ஈர்த்து கோடிகளை குவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

எப்போதும்போல மற்ற வெளிநாட்டு வீரர்களைவிட வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் ஆதிக்கம் ஏலத்தில் அதிகம் இருந்தது. அதிரடி பேட்ஸ்மேன் சிம்ரான் ஹெட்மேயிர் - 4.2 கோடி, 23 வயதே ஆன இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் - 4.2 கோடி, ஆல்ரவுண்டர் கார்லோஸ் ப்ராத்வாட் – 5 கோடி, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் - 2 கோடி, வேகப்பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ் – 1.1 கோடி என ஐபிஎல் ஏலத்தில் கொடிகட்டிப் பறந்தனர்.

கெய்ல், பிராவோ, ரசல், சுனில் நரைன், போலார்ட் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டி20 போட்டிகளில் அசத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டிகளில் இவர்கள்தான் ஹீரோ. அசால்ட்டாக அடிக்கும் சிக்ஸர்கள், மிரட்டல் பந்துவீச்சு, ஜாலியான சண்டைகள், மற்ற வீரர்களை சீண்டுதல், மைதானத்தில் புது விதமான நடனங்கள் என இவர்கள் டி20 கிரிக்கெட்டின்போது ரசிகர்களை அமர்க்களப்படுத்துவார்கள்.


நிக்கோலஸ் பூரன் என்ற இளம் வீரரை அடிப்படை விலையான 75 லட்சத்தில் இருந்து 4.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது. மேற்கிந்தியத் தீவு அணிக்காக விளையாடும் இவர் டிரினிடாட் பகுதியை சேர்ந்தவர். 2013 ஆம் ஆண்டில் அண்டர் -19 அணியில் இடம் பெற்று பேட்டிங்கில் ஒரு சில சாதனைகளை படைத்து வந்தார். ஆனால் நிக்கோலஸ் விரைவில் ஒரு பெரிய சோதனையை சந்தித்தார். ஜனவரி 2015-ல் ஒரு பெரிய கார் விபத்து ஏற்பட்டு விளையாட முடியாமல் போனது.

தனது பயிற்சியை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. வேறொருவரின் காரை கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டது. அந்த நிலையில் அவரது கணுக்கால் மற்றும் முழங்காலில் காயங்கள் ஏற்பட்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாமல் போகும் நிலையில் இருந்தார். இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்த பின் ஆறு மாதங்கள் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வந்தார். மற்றவரின் உதவி இல்லாமல் நடக்கக்கூட முடியாமல் இருந்தார்.



நிக்கோலஸ் நடைபயிற்சி மேற்கொண்டு, மீண்டும் வலைபயிற்சியில் ஈடுபட்டார். மற்றொரு மேற்கிந்திய தீவுகள் வீரரான போலார்ட் பயிற்சியின்போது தகுந்த ஆலோசனை அளித்ததன் மூலம் நிக்கோலஸ் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை புதுப்பித்து கொண்டார்.

மேற்கிந்தியத் தீவு உள்ளூர் போட்டிகளில் பங்கு பெறாமல் 2016-17 ஆண்டுகளில் வங்கதேச பிரீமியர் லீக்கில் (பிபிஎல்) விளையாடிய காரணத்தால் 2016-ல் மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் வாரியம் அவரை சர்ச்சைக்குரிய வகையில் தடை செய்தது. இதனால் நிக்கோலஸ் 10 மாதங்கள் தடை செய்யப்பட்டார். உலகெங்கிலும் உள்ள மற்ற டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுக்கு இந்த தடை வழங்கியது எனலாம்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் போனது. நிக்கோலஸ் ஒரு இளம் வீரனாக சச்சின் டெண்டுல்கருடன் பழகும் வாய்ப்பை பெற்றார். முன்னாள் இந்திய கீப்பர் கிரண் மோரின் ஆலோசனையையும் பெற்றார். பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம் பெற்றார். இந்த வருடம் சர்வதேச டி20 போட்டிகளில் பேட்டிங் சராசரி 47, ஸ்ட்ரைக் ரேட் 184. விபத்து, தடை ஆகிய சோதனைகளை கடந்து கிரிக்கெட் உலகில் சாதித்துள்ளார். அந்த சாதனைகளே அவருக்கு ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை குவிக்க உதவியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT