Skip to main content

மைதானத்திலேயே சுருண்டு விழுந்த ரஸல்... ரசிகர்கள் அதிர்ச்சி...

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் ரஸல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன இவர், ஐபிஎல் போன்ற மற்றொரு தொடரான கரீபியன் கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார்.

 

russell injured in carribean premier league

 

 

இந்த தொடரில் ஜமைக்கா தல்லாவாஹ்ஸ் - செயின்ட் லூசியா சூக்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஜமைக்கா அணிக்காக விளையாடிய ரஸல் 14 ஆவது ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். வேகப் பந்துவீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோன் ஷார்ட் வீசிய அந்த ஓவரில் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட அவர், மூன்றாவது பந்தை அடித்து விளையாட முயன்றார். அப்போது பந்து அவர் தலையில் பலமாக அடித்தது.

ஹெல்மெட் அணிந்திருந்த போதும் பந்து அடித்ததும் வலிதாங்க முடியாமல் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார் ரஸல். எழுந்து நடக்க கூட சிரமப்பட்ட அவரை உடனடியாக ஸ்ட்ரச்சர் மூலமாக தூக்கி சென்றனர். பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதிரடி வீரரான ரஸல் பந்து தாக்கி மைதானத்திலேயே சரிந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. 

 

 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி செய்த சாதனை

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Virat Kohli achieved feat after five years

 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்த டெஸ்ட் போட்டியில், மூன்றாம் நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, 1 - 0 என்ற புள்ளியில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.

 

இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் (ஜூலை 20)  தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணிக்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினார்கள்.

 

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். இதில் ரோகித் சர்மா 80 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முந்தைய டெஸ்ட் தொடரில், இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து இரு டெஸ்ட் தொடர்களிலும் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்துத் தந்த இந்திய தொடக்க ஜோடி என்ற பெருமையை ரோகித் ஷர்மாவும், யஷஸ்வியும் பெற்றுள்ளனர்.

 

இதையடுத்து வந்த சுப்மன் கில் 12 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் களம் இறங்கினார்கள். மிகவும் எச்சரிக்கையாக ஆடிய விராட் கோலி தனது 21வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்தார். தொடர்ந்து ஆடிய விராட் கோலி தனது சதத்தை நிறைவு செய்வதற்குள் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை எடுத்தது. விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

 

இந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, விராட் கோலி 180 பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 29வது சதத்தை பூர்த்தி செய்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் அவர் அடித்த முதல் சதம் இதுதான். மேலும், இது விராட் கோலியின் 500வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி சதம் அடித்த அதே ஓவரில் ஜடேஜாவும் 106 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

 

இந்திய அணியின் மொத்த ஸ்கோர் 341 ரன்களாக உயர்ந்த நிலையில், விராட் கோலி 206 பந்துகளுக்கு 121 ரன்கள் எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரரான அல்ஜாரி ஜோசப்பால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து அஜிங்க்யா ரஹானே களம் இறங்கினார். இவர் 8 ரன்கள் எடுத்த நிலையில், ஷனான் காப்ரியல் பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து இஷான் கிஷண் களம் இறங்கினார். தொடர்ந்து ஆடிய ஜடேஜா, 152 பந்துகளுக்கு 61 ரன்கள் எடுத்த நிலையில், கெமர் ரோச்சால் அவுட் ஆனார்.

 

இதையடுத்து, அஸ்வின் களம் இறங்கினார். 25 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷண், ஜேசன் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து வந்த ஜெயதேவ் உனத்கட் 7 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆகி களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த முஹமது சிராஜ் 11 பந்துகளைச் சந்தித்த நிலையில் ஜொமெல் வாரிக்கன் வீசிய பந்தில் அவுட் ஆனார். இறுதியாக விளையாடிய அஸ்வின் அரை சதத்தை கடந்து 56 ரன்கள் எடுத்திருந்த போது, கெமர் ரோச் பந்தில் அவுட் ஆனார்.

 

இறுதியாக இந்திய அணி 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகேஷ் குமார் 1 பந்து மட்டுமே சந்தித்த நிலையில், ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் மற்றும் ஜொமெல் வாரிக்கன் தலா 3 விக்கெட்டுக்களை எடுத்தனர்.

 

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் கேப்டன் கிரேக் பிராத்வைட் மற்றும் டேஜெனரைன் சந்தர்பால் களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 71 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, 33 ரன்கள் எடுத்திருந்த சந்தர்பால், அஸ்வின் வீசிய பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து வந்த கிரிக் மெக்கென்சி 14 ரன்களுடனும், கிரேக் பிராத்வைட் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் குவித்துள்ளது.