ADVERTISEMENT

காதலுக்கு போர்க்கொடி பிடித்த சங்க இலக்கிய வில்லன்கள்! - ஜோசப் குமார்

10:20 AM Aug 18, 2021 | george@nakkheeran.in

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ADVERTISEMENT

ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்

ADVERTISEMENT

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை.

-என்னும் தமிழ்ப் பழம் பாடலில் சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களை வரிசைப்படுத்திக் கூறுகிறது. மேலும் ‘நல்ல’ என்ற சிறப்புச் சொல்லைச் சேர்த்துக் ‘குறுந்தொகை’ நூலுக்குப் பெருமை சேர்க்கின்றது.

அகநானூறை, நற்றிணை போன்ற அக இலக்கியங்களோடு ஒப்பிடும் போது குறுந்தொகை; கவிதைகளின் அடி எண்ணிக்கைகளில் மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தினாற்றான் இந்நூல் குறுந்தொகை என்னும் பெயர் பெற்றது. இரண்டு ஒன்பது வரிக் கவிதைகளைத் தவிர (கடம்பனூர் சாண்டில்யன் என்ற புலவரின் 307வது கவிதையில் பொன்மணியார் என்ற பெண்பாற் புலவரின் 391 வது கவிதையும்) பிற கவிதைகள் அனைத்தும் எட்டு வரிக்குக் குறைவாகவும் உள்ளன. எண்ணிக்கையில் குறைந்த அடிகள் உடையனவாய் இருக்கின்றன. ஒரு கவிதை செய்யப்படும்போது அதனை யாத்த புலவரின் பெயரோடு சேர்த்தே சொல்லப்படும். ஆனால் இந்த குறுந்தொகை நூலுக்கு முகமாயும் முகவரியும் இயங்கும்

யாயும் ஞாயும் யாரா கியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே”

-என்ற புகழ்பெற்ற குறுந்தொகைக் கவிதையின் ஆசிரியர் பெயரைத் தமிழ்ச் சமூகம் தொலைத்துவிட்ட நிலையில், பின்னர் வந்த உரையாசிரியர்கள் பலரும் இப்புலவரின் கவிதை வரியையே இவருக்குப் பெயராகச் சூட்டினர். இக்கவிதையின் ஆசிரியர் “செம்புலப் பெயல்நீரார்” என்றே இன்றும் அழைக்கப்படுகிறார்.

கபிலரின் 115 வது கவிதையான ”பெருநன் றாற்றிற் பேணாரு முளரே ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு...” என்பதுதான் ஆண் பெண் இருபாலரின் இல்லற வாழ்க்கையில் ஒரு தலைவன் ஆற்ற வேண்டிய கடமை ஒன்றைப் பற்றிப் பேசுகிறது. ஒரு தோழி தலைவியின் உள்ளக்கிடக்கையைக் கண்டு உணர்ந்தவள். தலைவன் இல்லாது அவளால் வாழமுடியாது என்பதைப் புரிந்தவள். ஆழமாகச் சிந்திக்கும் போதுதான் இக்கவிதை தான் இப்பூவுலகின் முதல் பதிவுத் திருமணமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது! மணவினை ஆற்றும் சான்றோர் நிலையில் இருந்துகொண்டு, தோழி தான் எவ்வளவு செம்மையான அறிவுரையொன்றை தலைவனுக்கு வழங்குகிறாள்! சிறந்த இல்லறத்தின் அழகு முதுமையில் தான் வெளிப்படும். நோய் மலிந்தும் உடல் நலிந்தும் இரு பாலரின் புற அழகுகளை எல்லாம் காலம் களவாடிச் சென்றுவிட்ட அந்த நிலையில்தான் கணவன் மனைவி இருவரிடையேயும் புரிதலும் மனம் ஒன்றுதலும் நெகிழ்தலும் மிகவும் அதிகமாகத் தேவைப் படும்.

வேண்டுதல் நிறைவேறிய பின்னர் பலியூட்டு கொடுத்ததையும் தான் “தெய்வக் குற்றத்தை”த் தவிர்க்க கையில் காப்பு நூல் கட்டுதலையும், புள் நிமித்தம் பார்த்ததையும், பிற “அருள்வாக்கு’களைக் கேட்டதையும் பொருளற்றதாகவே நான் பார்க்கிறேன்” சங்ககாலத் தமிழர்கள் தமது அகவாழ்வில் எத்தகு முற்போக்கான கருத்துக்களின் துணையைத் தேடியிருக்கின்றனர்?

தேடிப்பெற்று வாழ்ந்திருக்கின்றனர் என்பதை நாம் உணரும்போதுதான் நமக்கு பிரமிப்பாக இருக்கின்றது!

சிலப்பதிகாரக் காப்பியத்தில்தான் கண்ணகியின் தோழி தேவந்தி. கண்ணகியிடம் (“...... சூலிக்குக் கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்; புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்...”). சோம குண்டம் சூலி குண்டம் துறை மூழ்கி காமவேள் கோட்டம் தொழுதால் பிரிந்த கணவன் திரும்பி வருவான் என்று சொல்ல, கண்ணகி ஒற்றைச் சொல்லில் தேவந்தியின் ஆலோசனையை “பீடன்று” என்று மறுத்திடும் நிகழ்வு (சிலம்பு: கனாத் திறமுறத்த காதை: 54-64) இங்கு ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது.

ஒரு தலைவன், தலைவியைப் பிரிந்த காலை, அவள் உடல் மெலிந்தாள். நோய்க்கு ஆளானாள். அவள் இறந்து படுவாளோ என்று எண்ணி, தோழி கவலையுற்றாள். தலைவன் தலைவி இருவரது மணக் கூட்டம் நடைபெற வேண்டுமே என்று தவித்த தோழியின் நிலையைக் கண்ட தலைவி, புரிதல் மூலம் என் தலைவன் எனக்களித்துள்ள துன்பத்தைக் வெளிக்காட்ட முடியாத இந்நிலையில், என் பொருட்டாக என் தோழி படுகின்ற துன்பமும் வேதனையும் தான் எனக்கு மிக அதிகமாக கொடுமை செய்வதாக உள்ளன” என்று புலம்புகின்றாள். இது தலைவி தோழி இருவரது இடையிலான நட்பு எத்தனை சீரீயது, செழுமியது என்பதை உணர்த்துகிறது (கூவன் மைந்தன் என்ற புலவரின் 224-வது குறுந்தொகைக் கவிதை).

தோழியைப் பற்றிக் குறிப்பிடும் அகக்கவிதைகள் அனைத்தும், தோழி-தலைவி இருவரிடையேயான ஒத்த மனநிலையைத் தான் குறிப்பிடுகின்றன. தலைவி காதல் வயப்படுதலையும், தோழி அவளுக்கு ஆதரவாகச் செயல்படுதலையும் தலைவியின் சார்பில் தலைவனுக்குத் தூது போவதையும், களவில் திளைக்கும் தலைவனிடம், அவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதையும், இரவுக்குறியில், தலைவனைச் சந்திக்க தலைவி செல்லும் வேளையிலெல்லாம், அவளுக்குத் துணை நிற்பதையும் நாம் பல கவிதைகளில் பார்க்கிறோம்.

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணன் என்ற புலவரின் 297வது கவிதையில், தலைவியைத் தலைவனுக்கு மணம் செய்விக்க, அவளது சுற்றத்தார் இசையார் என்பதை உணர்ந்த தோழி, தலைவியிடம் “புணர்ந்து உடன்போதல் பொருள்” என்று கூறுகின்றாள். இதன் பொருள், “தலைவனோடு சேர்ந்து போதலே செய்யத்தக்க செயலாகும்” என்பதாகும்.

ஆனால், தலைவனின் தோழனாக் காட்டப்படும் பாங்கன் என்பான் தலைவனின் காதலுக்கு உடன்பட்டுசெயல்படுவதாக எந்தக் கவிதையும் படம் பிடிக்கவில்லை. குறுந்தொகையில், பல கவிதை களுக்கான துறைக் குறிப்புக்கள் பாங்கன் தலைவனின் காதலோடு முரண்படுவதாகக் காட்டப்பட்டுள்ளன. அவ்வகையில் சங்ககாலத்தில் இருந்த பெரும்பாலானபாங்கர்கள், காதலுக்கு வில்லன்களாகவே திகழ்ந்துள்ளனர்.

ஆனால், பாங்கனின் எதிர்ப்பு இக்கவிதை யில் நேரடியாகச் சுட்டப்படாமல், மறைமுகமாகக் காட்டப்பட்டுள்ளன.

“ஒருசிறைப் பெரியனர்” என்ற புலவரின் 272 வது கவிதையில், தலைவன், பெறுதற்கு அலியனாக தலைவியின் சிறப்பை “நாறிருங் கூந்தல், கொடிச்சி தோளே” என்று பாங்கனிடம் கூறுகின் றான். ஆனால், அதுலும் பாங்கன், முன்னால் தலைவனிடம் அவனது காதலுறவு அவனுடைய தகுதிக்கு இழிவைத் தரும் என்று (துறை: “கழறிய” பாங்கற்குக் கிழவன் உரைத்தது) கூறியதற்கான பதிலுரையாக அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நக்கீரனின் 280 வது கவிதையும் எயிற்றியனாரின் 286 வது கவிதையும், தங்களது துறைக் குறிப்பில், தலைவனின் காதலோடு பாங்கன் உடன்படாமையைத் தான் காட்டுகின்ன. காதலுக்கு எதிர் நிலையிலேயே அவர்கள் மனநிலை அமைந்திருப்பதை உணர்த்துகிறது.

நக்கீரரின் கவிதை, “கழற்று எதி−மறை” என்ற துறை தழுவியதென்று, உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்ற னர். இதேபோல, எயிற்றியனாரின் கவிதையின் துறை விளக்கத்தில் காண்பது போல், பாங்கனால் தலைவியை மறந்து விடுமாறு அறிவுறுத்தப் பெற்ற தலைவன், தலைவியோடு தனக்குள்ள உறவினைக் கூறும் செய்தியை அறியமுடிகிறது. தலைவிபால் தலைவன் கொண்ட காதல் பொருந்தாதது என்று கூறிய பாங்கனிடம், தலைவன், கையற்ற ஊமையன் ஒருவனின் பாதுகாப்பில் உள்ள வெண்ணெய், ஞாயிறு காயும் வேளையில், தானாக உருகி ஓடுவதைப் போல, இக்காம நோய் படர்ந்த என் உடம்பும் உருகி அழிந்துவிடுமே!” என்று புலம்புவதாக வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவரின் 58-வது குறுந்தொகைக் கவிதை சொல்லுகின்றது.

தோழியின் மனப்பரப்பு ஏன் பாங்கனிடம் அமையப்பெறாது போயிற்று? களவு மணம் முறையற்றது .கற்பு மணமே மேலானது என்ற கொள்கை வழி நிற்பவனாய் இருந்திருப்பானோ?

களவு பற்றிக் கூறும் அகக்கவிதைகள் எத்துணை உளவோ, அத்துணை அளவிற், தலைவன் பரத்தையர்பால் உடன்டுபாடு கொண்டு, தலைவியைச் சில காலம் பிரிவதாக பல கவிதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைவன்பால் கொண்ட நெடிய நட்பின் விளைவாய், அவன் திருமணத்திற்குப் பின்னர் இவ்வாறு செயல்படக் கூடியவன் என்பதை உணர்ந்திருந்த காரணத்தி னால், பாங்கன் தலைவனது காதலோடு உடன்படாமற் போயிருப்பானோ? சங்ககாலத் தமிழரின் சமூகச் சூழல் குறித்த மேலும் பல தரவுகளை நாம் ஆய்ந்து நிறுவினால், இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கலாம். ஆயினும், இத்துணைக் கேள்விகளையும் புறந்தள்ளிவிட்டு இம் முரண்பாடுகளெல்லாம், கவிதைகளுக்குத் துறைக்குறிப்பு எழுதப் போந்த பின்னால், உரையாசிரியர்கள் சிலரின் சிந்தனைகளின் காரணமாகவே காணப்பெறுகின்றன என்று தீர்மானிப்பது சாலப் பொருத்தமாக இருக்கும்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையான மணம் உண்டா என்ற கேள்விக்கும் இறையனாரின் இரண்டாவது கவிதையும், தொல்காப்பியரது பத்தொன்பதாவது கவிதையும், நயம்படு பதிலைத் தருகின்றன. தலைவியின் கூந்தல் அழகை, முல்லை அருந்தும் மெல்லிய ஆகி அறல் என விரிந்த உறல் இன் சாயல் ஒலி இருங் கூந்தல் தேறும் (அகம், 191,) என்றும் “தேம்பாய் ஓதி திருநுதுல் நீவி” (அகம் 240) என்றும் விவரிக்கின்றன.

இதனையொட்டியேரூ இறையனாரின் குறுந்தொகைக் கவிதை (குறு. 2)

“மயிலியல் செறி யியற்று

அரிவை கூந்தலின் நறியவும் உள

நீ அறியும் பூவே!

(பொருள்: மயிலினது சாயலையும் நெருங்கிய பற்களையும் உடையவளான இவ்வரிவையின் கூந்தலைப் போல நீ அறியும் மலர்களுள் நறுமணம் கொண்ட மலர்களும் உளவோ?”) என்ற வரிகள் மூலம் தலைவியின் கூந்தலுக்கு இயற்கையான மணமுண்டு என்று இயம்புகிறது. இதேபோல தொல்காப்பியரின் கவிதை தலைவியின் கூந்தற் சிறப்பை “மௌவல் நாறும் பல் இருங்கூந்தல்” (தலைவியின் கூந்தல் இயல்பாகவே முல்லை மணத்தை உடையதாய் இருந்தது) என்று சொல்கின்றது. அழகியல் கொண்ட காதலர்க்கு இது உயர்ந்த சுவை கூட்டியாய் இருந்திருக்கும் என்பதை நாம் அறுதியிட்டுக் கூறமுடியும்.

குறுந்தொகைக் கவிதைகளின் திணைக் குறிப்பும் இத்தொகையினைத் தொகுத்த சான்றோரோ அல்லது அவருக்குப் பின்னால் வந்த ஆன்றோர் ஒருவராலோ அமைக்கப்பட்டிருக்கும் வேண்டும்.

குறுந்தொகையின் பல கவிதைகளில் இத்துறைக் குறிப்பும், துறை விளக்கக் குறிப்புக்களும், கவிதைகளுக்குப் பொருத்தமில்லாதவையாய் இருப்பது கண்கூடு. எடுத்துக்காட்டாக அள்ளுர் நன்முல்லையார்..என்ற பெண்பாற் புலவரின் (குறு. 157) கவிதை ஒரு உளவியல் முடிச்சைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

குக்கூ என்றது கோழிவ் அதன்எதிர்;

துட்கென்; றன்றுஎன் தூயநெஞ்சம்

தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே!

(பொருள்: கோழி குக்கூவெனக் கூவியது.அவ்வேளை என்தோளைத் தழுவியிருந்த என் காதலரை என்னிடமிருந்து பிரிக்கும் வாளைப்போல பொழுதும் விடிந்ததையும் கண்டு என் நெஞ்சம் அச்சமடைந்தது).

இக்கவிதையின் துறைக் குறிப்பாக, “பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது” என்ற தரவு காணப்படுகின்றது. அண்மைக்கால உரையாசிரியர் ஒருவர் பெண்களுக்கு திங்கள் தோறும் உடல்ரீதியாக நிகழக்கூடிய ஒன்றை மிக விரிவாக விளக்கியிருப்பது நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

அவர் கூறுகிறார் “பூப்புப் புறப்பட்ட நாளும் மற்றை நாளும் கருத்தங்கின் அது வயிற்றில் அழிதலும் மூன்றாம் நாள் தங்கின் அது இல்வாழ்க்கை தாதலும் பற்றி முந்நாளும் கூட்டமின்று என்பார்;” எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இக்கவிதைக்கான துறைக் குறிப்பு கவிதைக்குச் சற்றும் பொருத்தமில்லாதாகவே இருப்பது புலப்படுகிறது.

அகநானூற்றைப் போலவே குறுந்தொகையிலும் பரத்தையரின் குரல் ஒலிப்பதைக் கேட்கமுடிகிறது. எல்லா தலைவன் தலைவியரும் இறுதிவரை மனப்பிணக்கின்றி வாழ்ந்து விடுவதில்லை.

சிலரது வாழ்வில் தலைவனின் பரத்தமை நாட்டத்தால் சிக்கல்கள் உருவாகின்றன. குறுந்தொகைக் கவிதைகள் பலவற்றில் தலைவிக்குத் தவறிழைத்த தலைவன் மனம் மாறி மீண்டும் தலைவியை நாடி வருவதையும் சின்னாட்கள் கழிந்த பின்னர் தலைவி அவனை ஏற்றுக்கொள்வதையும் பார்க்கிறோம். ஆனால்இவையனைத்திற்கும் மேலாக பரத்தையின் பார்வையை கவிதைகளில் பதிவு செய்திருப்பதுதான் அகக்கவிஞர்களின் விரிந்துபட்ட சிந்தனைக்கு சான்றாகும்.

ஔவையாரின் 80-வது கவிதை ஒரு பரத்தை தான் தலைவனை பிரிந்துள்ள நிலையில் “முடிந்தால் தலைவி அவளது கொழுநனை என்னிடமிருந்து மீண்டும் பிடிக்கட்டுமே” என்று கேலியும் கேள்வியும் கலந்த மொழியில் பேசுவதாக அமைக்கப் பட்டுள்ளது. இக்கவிதையில் பரத்தை தலைவனை: விருந்து” என்று குறிப்பிடுவது இலக்கிய நயம்மிக்க சொல்லாடாகும்.

மாங்குடி மருதனாரின் 164 வது கவிதை, தலைவன் பரத்தை உறவை ஓரு அழகிய உவமை மூலம் விவரிக்கின்றது. கரையோரம் நிற்கின்ற ஒரு மாமரத்தின் பழுத்த கனியை யாரும் பாராமலோ பறிக்க முனையாமலோ இருந்துவிட்டால் அது தானாக நழுவி வாளை மீனின் வாயைச் சென்றடையும்.

அதுபோல தலைவியும் புறத்தே நிகழ்வதை அறியாது தனது கணவன் பரத்தையை நாடிச் செல்ல கருவியாய் இருந்துவிட்டாள் என்ற உளவியல் உண்மையை பரத்தையின் குரலில் எளிதாக விளக்குகிறது.

சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் பரத்தையரோடு இற்பரத்தையரும் வாழ்ந்திருந்தனர். கீழ்க்குணம் மிக்க தலைவன் ஒருவன் தலைவியைப் பிரிந்து முதலில் ஓரு இற்பரத்தையுடன் சில காலமும் பின்னர் பரத்தை ஒருத்தியுடனும் வாழ்ந்து வந்தான். ஔவையாரின் 364வது கவிதை ஓரு இற்பரத்தை பரத்தை ஆகிய இருவருக்கிடையே முறையற்ற பூசலைப் பற்றியும் சொற்போரைப் பற்றியும் விவரிக்கின்றது. அகநானூற்றின் 336வது கவிதையும் 276வது கவிதையும் இதேபோன்று பரத்தையர் இருவருக்கிடையேயான சூளுரையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

இரவு முழுவதும் தலைவி ஒருத்தி தலைவனுடன் சூடி மகிழ்ந்திருந்த வேளையில் ஒரு சேவலின் கூவலில் விடியலின் வருகையை உணர்த்திய, சேவல்பால் மிகுந்த சினமுற்று அதற்கு சாபமிடுவதாக மதுரைக் கண்ணனார் தனது 107 வது கவிதையில் நயம்பட உரைக்கின்றார். (“நன்னிருள் யாமத்து இல்லெலி பாரிக்கும் பிள்ளை வெருகிற்கு அல்கிரையாகிக் கடுநவைப்படுக!”) சேவலுக்கு சாபம் கொடுத்த இந்தத் தலைவியையும் விஞ்சும் வகையில் தலைவியின் அன்னைக்கே சாபம் கொடுத்த ஒரு தோழியை பரணரின் 292 வது கவிதை படம்பிடித்துக் காட்டுகின்றது.

தலைவி வீட்டில் நிகழ்ந்த விழா ஒன்றினுக்குத் தலைவனும் வந்தான். அவனைக் கண்டு அதிர்ச்சியுற்ற தாய், விழாவின் விருந்துக்குப் பின்னர் மகளை இற்சிறைப் படுத்தினாள். இதனால் தலைவி பெரிதும் துயருற்றாள். தலைவி படும் துயரைக் காணப்பெறா தோழி “ஒரு பெண் புனலோடு சென்ற கனியொன்றை எடுத்து உண்டாள். அதனைக் குற்றமெனச் சொன்னான் நன்னன் என்ற மன்னன். அவள் தின்ற ஒரு காய்க்கு ஈடாக ஏராளமான யானைகளையும் அவள் நிறையாற் செய்த பொற்பாவை ஒன்றையும் கொடுக்க அவளது உறவினர் முன்வந்தனர். ஆனால் நன்னன் அவற்றை மறுத்து பெண்ணைக் கொலை செய்து மாறாப் பழியைத் தேடிக் கொண்டான். இப்போது மகளை இற்சிறைப்படுத்தியிருக்கும் இந்தத் தாயர் நன்னனினும் அதிகப் பழிக்கு ஆளாவாளாக!” என்று கூறுகின்றாள். தலைவியும் தோழியும் தாயின்பால் மிகுந்த சினமும் வெறுப்பும் கொண்டிருந்தனர் என்று திறனாய்வு செய்யாமல் அந்த அளவிற்கு தலைவி தலைவன்பால் காதல் கொண்டிருந்தாள் என்பதையும் அதனையுணர்ந்த தோழி, தலைவிக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டாள் என்பதையுமே நாம் காணவேண்டும்.

குடவாயிற் கீரத்தனாரின் 60-வது அகநானூற் றுக் கவிதை ஒரு தோழி, தலைவியை அவளது தாய் இற்செறிந்த நிலையில் “அறனில்யாய்” என்று குறிப்பிடும் காட்சியோடு நாம் இதனை ஒப்புநோக்கலாம்.

களவு மடிந்து பரத்தமை மீண்டு தலைவியும் தலைவனும் நல்லறம் நடத்திவரும் வேளையில் அவளது செவிலித்தாய் அவர்களது வீட்டிற்கு வந்து, தலைவியின் இல்லறப் பாங்கைக் கண்டு வியந்து, நற்றாயிடம் விரைந்து சென்று தான் கண்டவற்றைக் கூறுகிறாள் “முற்றிய தயிரைப் பிசைந்த தன் விரல்களை ஆடையிலேயே துடைத்து பின் அதனைத் துவையாதேயே மீண்டும் உடுத்திககொண்ட போதும் தலைவன் பார்வையாலேயே அவள் சமைத்த உணவைப் பாராட்டி உண்பவனாயினன்!” (குறு 167).

“தலைவன் பணி நிமித்தம் வேற்றூர் சென்றா லும் அங்கே தங்காமல் பணி முடிந்தவுடன் வீட்டிற்கு திரும்பி விடுகின்றானாம்!” (குறு. 242) என்று ஒரு செவிலித்தாய் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கும் வேளையில் தாயின் மனம் எவ்வளவு குதூகலித் திருக்கும்!

பிறிதொரு கவிதையில் தலைவி - தலைவன் இருவரது களவு நாட்களில் அவர்களுக்குப் பெரிதும் துணை நின்ற தோழி தலைவனைக் காண வருகிறாள். வந்தவள் தலைவியின் மார்பகங்களிடையே தலைவன் தலை வைத்து துயில் கொள்ளுவதைக் காண்கிறாள்.

இத்தகு இன்பத்தை களவு நாட்களில் தலைவன் பெறாது அவ்விழப்பை எவ்வாறு பொறுத்திருந்த னனோ என்ற நினைப்பும் அவள் மனதில் எழுவதை நெடும்பல்லியத்தை என்ற புலவர் அழகாகப் பாடியுள்ளார்.

தனது வியப்பை தலைவியுடன் பகிர்ந்து கொண்ட தோழி “நீ நின் களவு நாட்களில் உன் காதலில் எப்படி உறுதியாக இருந்தாய்? தலைவன் பிரிந்து சென்ற நாட்களிலெல்லாம் அவன் மீண்டும் வருவானோ மாட்டானோ என்ற அச்சம் உன் மனதில் துளிர்க்கவில்லையா?” என்று கேட்கிறாள். அதற்குத் தலைவி “நம் இல்லிற்கு அயன் மனையிலிருந்து ஒரு பெண் - அவள் தலைவனின் ஊரைச் சோ;ந்தவள்- “தலைவன் வரவுக்குரிய ஏற்பாடுகளோடு உறுதியாக வருவான்” என்று என்னிடம் கூற, நான் ஆற்றியிருந்தேன். அவள் மறுமையிலும் அமிழ்தம் உண்ணட்டும்” என்று விளக்கம் தருவதை 201வது குறுந்தொகைக் கவிதையில் பார்க்க முடிகிறது. இவ்வளவு செறிவான கவிதையை எழுதிய புலவரின் பெயர் நமக்குக் கிடைக்காமற் போய்விட்டது ஒரு இலக்கிய நாட்டமே.

“தலைவன் என் நெஞ்சினின்றும் பிரிவாதலின் நான் அவன் மீண்டும் வரும் நாள் வரை ஆற்றியிருந்தேன்” என்று இன்னொரு தலைவி (செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தான் என்ற புலவர் எழுதிய 228வது கவிதை. இவர் அரசுச் செய்திகளை நாட்டு மக்கட்கு அறிவிக்கும் பணியினைச் செய்து வந்ததால் இப்பெயர் பெற்றார்). தோழியிடம் கூறுவது இன்று இல்லறம் விழையும் இளையோர்க்கு நல்ல பாடம்.

தலைவியின் களவைப் பற்றி அறிந்த அவளது அன்னை அவளை இற்செறித்தாள். அதாவது வீட்டுச் சிறையில் வைத்தாள். இதனை அறிந்த தலைவனும் மனம் வாடினான். இந்நிலையில் அவன் புலம்பிய ஒரு கூற்றை பரணர் தனது கவிதையில் (குறு: 199)

அழகுபடத் தருகிறார். “என் மனதை உருக்குகின்ற இந்த காதல்நோய் இன்றைய உலக வாழ்வோடு முடிந்துவிடும் ஒன்றல்ல. இக்காதல் மறுமையிலும் தொடரும் தன்மையது. இந்தப் பிறவியில் தலைவியை நான் அடையாவிட்டாலும் அடுத்த பிறவியில் அவளை அடைவது உறுதி” என்ற அவனது புலம்பலை “இறுமுறை என ஒன்று இன்றி மறுமை உலகத்து மண்ணுதல் பெறினே!”

என்ற அடிகள் மூலம் பரணர் உணர்த்துவது ஆண் பெண் இருபாலரின் காதலுணர்வுக்கு இணையற்ற ஒரு விளக்கவுரை.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT