ADVERTISEMENT

‘என் அம்மாவுக்குப் பிறகு தான் எல்லாமே...’ - போலீசாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்

04:39 PM Jul 18, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் அடுத்த தொரப்பாடி கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சங்கர் (37). இவர் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு அமர்ந்து உடைந்த கண்ணாடித் துண்டை கழுத்தில் வைத்துக் கொண்டு நீண்ட நேரமாகத் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் போதை ஆசாமி சங்கர் "காவல்துறையினர் தன்னை நெருங்கினால் நான் கழுத்தில் குத்திக் கொண்டு இங்கேயே இறந்து விடுவேன்" எனத் தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இது குறித்து சங்கரிடம் கேட்டபோது, “நான் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சென்று கொண்டிருக்கும்போது என்னை ஒரு பேருந்து ஓட்டுநர் மோதுவது போல் வந்தார். அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு என்னை அவர் தாக்கியதால் அவரை நான் தாக்க முற்பட்டேன். அதற்குள் அங்கு வந்த இரண்டு காவல்துறையினர் என்னை அவதூறாகப் பேசி தாக்கி விட்டனர். என்னைப் பற்றியும் எனது அம்மாவைப் பற்றியும் அவதூறாகப் பேசும் அதிகாரம் யார் அவர்களுக்கு கொடுத்தது? நானும் மனிதன் தான், மிருகம் அல்ல. நான் அவர்களை கொலை செய்தால் என்னை விட்டு விடுவீர்களா? எனவே என்னை அவதூறாகப் பேசி தாக்கிய காவல்துறையினர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரைக்கும் நான் விடமாட்டேன். என்னை யாராவது நெருங்க முயற்சித்தால் கழுத்தில் வைத்துள்ள கண்ணாடி துண்டால் கழுத்தை அறுத்து இங்கேயே இறந்து விடுவேன்” எனக் கூறினார்.

இதனை அடுத்து ஒருபுறம் காவல்துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த சங்கரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது சாதூரியமாகச் செயல்பட்ட சத்துவாச்சாரி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் நாராயணன், பின்பக்கமாக வந்து தற்கொலை மிரட்டல் விட்ட சங்கர் மீது பாய்ந்து கீழே விழுந்து கையில் வைத்திருந்த கண்ணாடித் துண்டை பிடுங்கி அதிரடியாக காப்பாற்றினார். இதனை அடுத்து சக காவலர்கள் போதை ஆசாமி சங்கரின் கையை இறுகப் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே இரவில் தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியாலும், அவரைப் பாய்ந்து பிடித்த காவல்துறையினரின் அதிரடி செயல்பாட்டாலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT