ADVERTISEMENT

ஆன்லைன் சூதாட்டத்தால் திருமணம் ரத்து... உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை!

10:45 PM Jan 02, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது கூவாகம் நத்தம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் என்பவரது மகன் 27 வயது குமாரவேலு. இவர் அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் கேபிள் டிவி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் மூலம் ரம்மி சூதாட்டம் விளையாடுவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அந்த சூதாட்ட கும்பல் முதலில் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் பணத்தை போனஸ் என்ற பெயரில் குமாரவேலு வங்கிக் கணக்கிற்கு அனுப்பி சூதாடுவதற்கு ஆசையைத் தூண்டி உள்ளது. அதன் பிறகு இவர் சூதாட்டத்தில் விளையாட ஆரம்பித்துள்ளார். இதனால் அவ்வப்போது பணத்தை இழந்தும் வந்துள்ளார்.

சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீண்டும் பெற்றே தீருவது என்ற பிடிவாத எண்ணத்துடன் உறவினர்கள், நண்பர்கள் என்று பலரிடமும் கடன் பெற்று அந்தப் பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்தநிலையில் குமாரவேலுவின் பெற்றோர் அவர்களதுஉறவினர் பெண் ஒருவரை குமாரவேலுக்கு திருமணம் செய்வதற்காகப் பேசி முடிவு செய்துள்ளனர். திருமணம் செய்யப்போவதை காரணம் காட்டி மேலும் பலரிடம் கடன் பெற்றுள்ளார் குமாரவேலு. அந்தப் பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்தத் தகவல் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே குமாரவேலுவுக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் மனம் உடைந்த குமாரவேலு சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்குச் சேர்த்து உடல்நிலை தேறி வீடு திரும்பியுள்ளார். அதன் பிறகாவது அந்த சூதாட்ட போதையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் குமாரவேலு ஆன்லைன் சூதாட்டத்தில் ரம்மி விளையாடுவதில் தீவிரமாக இருந்துள்ளார்.

இவரது செயலை கண்டு இவருக்கு யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை. இந்தநிலையில் தனது உறவினர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி அதை அடமானம் வைத்து அந்தப் பணத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அதனால் குமாரவேலுக்கு 4 லட்சம் வரை கடன் அதிகரித்தது பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த குமாரவேலு சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை, அவரது பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று திருவெண்ணைநல்லூர் மலட்டாறு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார் குமாரவேல். அவரது சட்டைப்பையில் 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரன் ஆனதால் அதிலிருந்து மீள முடியாமல் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் குமாரவேல். இந்த தகவல் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரவேல் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே தமிழக அரசு இப்படிப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய சரியான முடிவு எடுக்க வேண்டும். இல்லையேல் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT