ADVERTISEMENT

ஆறு பெண்களைத் திருமணம் செய்த வாலிபர் கைது! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

03:36 PM Dec 01, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பாஸ்கர்(40). இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கரோனா ஊரடங்கு காலமான 2020 ஜூலை 15-ந்தேதி திருமண தரகர் இன்பராஜ் ஏற்பாட்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கமாக கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்த சில மாதங்களில் வின்சென்ட் பாஸ்கர் நகையை விற்றுள்ளார். இதுகுறித்து கேட்டபோது, தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இது குறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு வின்சென்ட் பாஸ்கரை தேடிவந்த நிலையில் போலீசார் திசையன்விளை அருகில் உள்ள சுவேசபுரத்தில் வைத்து அவரை கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும், 6-வதாக பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கோவில்பட்டியில் உள்ள தனது 4-வது மனைவி வீட்டில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சுவிசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிளாரன்ஸ் என்ற பெண் தனக்கு தாயாகவும் , தாமரைச் செல்வி என்ற பெண் சித்தியாகவும் நடிக்க வைத்து புரோக்கர் கூறும் இடத்தில் பெண்களைப் பார்த்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் தனிப்படையினர் பாஸ்கர், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினா் பிளாரன்ஸ் (58), சுவிசேஷபுரம், தாமரைச் செல்வி (56) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று நெல்லையில் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திருமண தரகர் இன்பராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரும் ஒவ்வொரு திருமணத்தின்போது, வெவ்வேறு பெயர்களை கூறியும், ஊர்களை மாற்றிச் சொல்லியும் ஏமாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT