ADVERTISEMENT

அதிக போதைக்காக மதுவில் தின்னரை கலந்து குடித்ததால் தொழிலாளிகளுக்கு நேர்ந்த விபரீதம்! 

08:15 AM Dec 24, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேட்டூர் அருகே, அதிக போதைக்காக மதுபானத்தில் பெயிண்டில் கலக்க பயன்படுத்தப்படும் தின்னரை கலந்து குடித்த கூலித்தொழிலாளிகள் இருவரும் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள சின்ன தண்டாவைச் சேர்ந்தவர் மாதப்பன் (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய உறவினரான கர்நாடகாவைச் சேர்ந்த பேரன் (வயது 60) என்பவர், டிச. 21- ஆம் தேதி மாதப்பன் வீட்டிற்கு வந்திருந்தார். அன்று இரவு இருவரும் மது குடித்துள்ளனர்.

ஒரு மதுபான பாட்டிலை வாங்கி வந்த அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு புதர் பகுதிக்குச் சென்றனர். ஒரு குவார்ட்டர் மதுவை இரண்டு பேர் பகிர்ந்து குடித்தால் போதை ஏறாது எனக்கருதிய அவர்கள், வீட்டில் பெயிண்டில் கலப்பதற்காக வாங்கி வைத்திருந்த தின்னரை மதுவில் கலந்து குடித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அவர்களுக்கு தாகம் எடுத்துள்ளது. அதனால் அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்கேயே அவர்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளனர். புதர் பகுதிக்குச் சென்றதால் அவர்களை பலரும் கவனிக்கவில்லை. மறுநாள் காலையில்தான் அவர்கள் இருவரும் சடலமாகக் கிடப்பது உறவினர்களுக்கு தெரிய வந்தது. சடலங்களின் அருகில் மது பாட்டிலும், தின்னர் பாட்டிலும், பிளாஸ்டிக் டம்ளர்களும் கிடந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல்நிலைய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரும் அதிக போதைக்கு ஆசைப்பட்டு மதுவில் தின்னரை கலந்து குடித்ததால் அவர்கள் இறந்திருப்பது தெரிய வந்தது. சடலங்களை உடற்கூராய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கொளத்தூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT