/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/r434_0.jpg)
கடலூர் மாவட்டம், நெய்வேலி இந்திராநகரில், சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில் சென்னையிலிருந்து அக்பர் பாஷா என்பவர் அதிவேகமாக காரை ஓட்டிக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, கார் அவரது முழு கட்டுப்பாட்டையும் இழந்து, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர்களைத் தூக்கி எறிந்து விட்டு, சாலையோரமிருந்த பழக்கடை, பூக்கடை வைத்திருந்த நபர்கள் மீது பயங்கரமாக மோதி நின்றது.
இதில் சம்பவ இடத்திலேயே நெய்வேலி மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வனிதா மற்றும் முத்தம்மாள் துடிதுடித்து இறந்தனர். மேலும் கார் மோதியதில் ஜான்சி என்ற சிறுமி உட்பட ராணி, தங்கம், சின்னசாமி, குமரேசன் ஆகிய ஐந்து நபர்களும், தலை, கை கால்களில் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக நெய்வேலி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்த கார் டிரைவர் அக்பர் பாஷா உட்பட ஐந்து நபர்களையும் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கார் விபத்தில் உயிரிழந்த வனிதா, முத்தம்மாள் இருவரின் சடலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொடூர விபத்து குறித்து நெய்வேலி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது. அதில் அதி பயங்கரமாக வரும் காரானது, சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு பேர்களைத் தூக்கி வீசிவிட்டு செல்லும் காட்சி நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது. இச்சம்பவத்தால் நெய்வேலி பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)