ADVERTISEMENT

மருத்துவமனையில் குழந்தையை விலை பேசிய பெண்! 

05:32 PM Dec 27, 2023 | tarivazhagan

விழுப்புரம் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ளது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில், விழுப்புரம் ஜனகராஜ் நகரில் வசிக்கும் பொன்னுசாமி என்பவரின் மனைவி ஹேமலதா(25) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது.

ADVERTISEMENT

ஹேமலதாவை 22 வயது பெண் ஒருவர் நேற்று வந்து சந்தித்து, தான் ஒரு டாக்டர் என்று கூறிக்கொண்டு குழந்தையை பரிசோதிப்பது போல் செய்துள்ளார். பிறகு குழந்தையின் மீது போர்த்த துணியை எடுக்கச் சொல்லியுள்ளார். ஹேமலதா துணி எடுக்கத் திரும்பியபோது, அந்த பெண் குழந்தையுடன் மாயமானார். இதனால், ஹேமலதா அதிர்ச்சியடைந்து அழுதவாறே, அங்கிருந்தவர்களிடம் தன் குழந்தையையும், அந்த பெண்ணையும் பற்றி விசாரித்துக்கொண்டே மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றினார். பிறகு ஓரிடத்தில் தன் குழந்தையுடன் அந்தப் பெண் இருப்பதை அறிந்து, அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தன் குழந்தையை தருமாறு ஹேமலதா கேட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஆனால் அந்தப் பெண், தனக்கு குழந்தை வேண்டும் என்றும் அதற்காக ஐந்து லட்சம் வரை தருகிறேன் என்றும் பேசியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஹேமலதா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்படவே அங்கிருந்தவர்கள் கூடி விசாரித்துள்ளனர். பிறகு அந்தப் பெண்ணிடமிருந்து குழந்தையை பெற்று ஹேமலதாவிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், விக்கிரவாண்டி போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்தத் தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீஸார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்தப் பெண் செஞ்சி அருகில் உள்ள ஈயங்குனம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி கோடீஸ்வரி என்பது தெரியவந்தது. அதேசமயம், விசாரணை செய்த மகளிர் போலீசாரிடம் கோடீஸ்வரி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை பார்த்ததும் இந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT