Daughter in law arrested in Mother in law case

Advertisment

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகில் உள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சிந்தாமணி(65). இவரது இளைய மகன் வேல்முருகன்(37). இவருக்கும் இவரது சகோதரியின் மகள் சங்கீதா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா, தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு வேல்முருகன் தனது உறவினர்கள் சிலரை அழைத்துச் சென்று சங்கீதாவிடம் சமாதானம் பேசி தன்னுடன் வாழ்வதற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதன் பிற்கு சங்கீதா வீட்டில் அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை சங்கீதாவின் பாட்டியும் வேல்முருகனின் தாயாருமான சிந்தாமணி கண்டித்து வந்துள்ளார். இதனால் மாமியார் மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தனக்கும் கணவர் வேல்முருகனுக்கும் இடையே மாமியார் சிந்தாமணியால் சண்டை வருகிறது என அவர் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு சிந்தாமணி வீட்டுக்குள் சென்று டீ சாப்பிடுவதற்காக பால் பாக்கெட் எடுத்துள்ளார். அப்போது சங்கீதா ஏற்கனவே தயார் நிலையில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாமியார் சிந்தாமணி மீது ஊற்றி தீ வைத்து விட்டு கதவை வெளிப்பக்கம் பூட்டி விட்டார். சிந்தாமணி போட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர். அங்கே சிந்தாமணி உடலில் தீப்பற்றிய நிலையில் துடித்துள்ளார். உடனடியாக தீயை அனைத்து சிந்தாமணியை தீக்காயங்களுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையல் சிந்தாமணி சிதம்பரம் மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் மருமகள் சங்கீதா தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக வழக்குப் பதிவு செய்த சேத்தியாத்தோப்பு போலீசார் சங்கீதாவை கைது செய்துள்ளனர்.