ADVERTISEMENT

இளைஞர் மீது மோதிய வாகனம் எது?-மேல்சட்டை இன்றி உறவினர்கள் சாலை மறியல்

03:36 PM Jan 29, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு சேர்வைகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ரமேஷ். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 22 ந் தேதி அதிகாலை வீட்டின் அருகே சாலை ஓரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வடகாடு போலீசார் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின் ரமேஷின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதோடு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலிசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தைக் கைவிட்டு உறவினர்கள் சடலத்தை அடக்கம் செய்தனர். தொடர்ந்து வடகாடு போலீசார் அதிகாலை நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்களை கண்டறியும் பொருட்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ஆய்வும் விசாரணையும் நடந்து வருகிறது. விபத்து நடந்து 8 நாட்கள் ஆகியும் தற்போது வரை விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டுபிடிக்கப்படவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை பல கிராமங்களில் இருந்தும் 8 ம் நாள் சடங்கில் கலந்துகொள்ள வந்த ரமேஷின் உறவினர்கள் வழக்கமான கிராம வழக்கப்படி துக்க நிகழ்வில் மேல் சட்டை அணியாமல் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு கலந்து கொள்வது வழக்கம். அதேபோல வந்த உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி அப்படியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலால் புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் உத்தரவில் ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விரைவில் விபத்து ஏற்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்படும் ஓட்டுநர் கைது செய்யப்படுவார் என்று உறுதி கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக எட்டாம் நாள் சடங்குகள் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT