ADVERTISEMENT

மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் எப்போது? - அமைச்சர் நேரு பதில்!

10:12 AM Sep 21, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் ‘நகருக்குள் வனம்’ திட்டம் மற்றும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ ஆகிய திட்டங்களை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, திங்களன்று (20.09.2021) தொடங்கிவைத்தார்.

இதையடுத்து பொன்னம்மாபேட்டையில் உள்ள சீலாவரி ஏரியை தூர்வாரும் பணிகளைத் தொடங்கிவைத்தார். அதன்பிறகு அமைச்சர் நேரு, செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பயனற்ற குளங்களைத் தூர்வாரி நிலத்தடி நீரைப் பெருக்குவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் சாக்கடைகளை அள்ளி, மழைநீர் தேங்காத அளவுக்கு செல்லும் பணிகள் தொடர்ந்து 5 நாட்களாக நடக்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு, மாநகராட்சித் தேர்தலுக்கான அரசாணையை முன்னாள் ஆட்சியாளர்கள் வெளியிட்டனர். வார்டுகள் மறுவரையறை செய்யப்படும் என்று தெரிவித்தனர். தற்போது திமுக ஆட்சியில் 6 மாநகராட்சிகள், 29 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதில் வார்டுகள், வாக்காளர்கள் எண்ணிக்கை மாறுபடுவதால் மறுவரையறை செய்யப்படுகிறது. வார்டுகள் மறுவரையறை செய்யும் பணிகளை முடித்த பிறகு மாநகராட்சி, நகராட்சிகளுக்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.

சேலம் மாநகராட்சியில் மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்படும் பணிகள் நடக்கும். சேலம் மாநகராட்சியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. பல இடங்களில் புதிய மார்க்கெட்டுகளை உருவாக்க இருக்கிறோம். அதேபோல், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பகுதிகளிலும் புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.

மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்.எல்.ஏ. ராஜேந்திரன், எம்.பி. பார்த்திபன், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், திமுக நிர்வாகிகள் வீரபாண்டி ராஜா, சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT