publive-image

Advertisment

தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில், கடலூர் மாநகராட்சி, சிதம்பரம், வடலூர், விருத்தாசலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய நகராட்சிகள், புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோயில், அண்ணாமலை நகர், சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பேட்டை, கங்கைகொண்டான் ஆகிய பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

அதன் காரணமாக, அதிமுக, திமுக உட்பட அனைத்துக் கட்சியினரும் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திறந்த ஜீப் மூலம் அந்தந்த பகுதி கவுன்சிலர் வேட்பாளர்கள் வெற்றி பெற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வி.கணேசன், கட்சியினர் புடைசூழநகராட்சி பேரூராட்சிகளில் பரபரப்பாக ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார். புதுப்பேட்டை பேரூராட்சியில் வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் கணேசன், “வாக்காளர்களாகிய நீங்கள் நடைபெறுகின்ற நல்லாட்சியை அறிந்து அதன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நீங்கள் ஆளும் கட்சியான எங்களுக்கு வாக்களித்தால் தொரப்பாடி பேரூராட்சியை தரம் உயர்த்தி அதிக நிதி ஒதுக்கீடு பெற்று தூய்மையான, சிறப்பான, முன்மாதிரியான பேரூராட்சியாக மாற்றிக் காட்டுவோம்.

Advertisment

கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் பேரூராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் சுரண்டப்பட்டன. அதனால் தற்போது அரசு கஜானா காலியாக உள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர்களை பாருங்கள்; உங்கள் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பவர்கள். வாக்காளர்கள் அனைவரும் யாருடைய மிரட்டலுக்கும் நிர்பந்தத்திற்கும் பயப்படக்கூடாது; அஞ்சக்கூடாது. தங்களது குறைகளை அரசின் திட்டங்களை உடனுக்குடன் உங்களுக்கு செய்து கொடுக்கும் திமுக அதன் கூட்டணிக் கட்சிவேட்பாளர்களாகிய இவர்களுக்கு தவறாமல் வாக்களியுங்கள். இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறார். அவரது கரத்தை வலுப்படுத்த உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் மக்களின் தேவைகளை அரசின் திட்டங்களை கிராமப்புற நகர்ப்புற மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்க்க முடியும். எனவே, திமுக அதன் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று பேசினார்.