ADVERTISEMENT

அவர்கள் எலி வேட்டைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்... நாம் புலி வேட்டைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்! -ராஜேந்திரபாலாஜி பேச்சு!

08:03 AM Nov 21, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனைக் கூட்டங்களில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ‘மைக்’ பிடித்தபோது- “அ.தி.மு.க. தலைவர்களை யாராவது விமர்சனம் செய்து பேசினால், அந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியேற முடியாத அளவுக்கு செயலில் இறங்கக்கூடிய, வெறித்தனமான தொண்டர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ளனர். எதிர் அணியில் உள்ளவர்கள் எலி வேட்டைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் புலி வேட்டைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்.

விருதுநகர் மாவட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு நாடகம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களும் விருதுநகர் மாவட்டத்திற்கு ஏதாவது ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்களா? விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது. 10 வருடமாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. எப்படி திட்டங்களைக் கொண்டு வர முடியும்? ரயில் ஓடினாலும், விமானம் பறந்தாலும், தன்னால்தான் எல்லாமே நடக்கிறது என்று ஸ்டாலின் கூறுகிறார். தொகுதிக்குள் நாங்கள் ஒரு லைட் போட்டால் கூட, நாங்கள் தான் லைட் போடச் சொன்னோம் என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். அ.தி.மு.க. கஷ்டப்பட்டு செயல்படுத்தி கொண்டு வந்துள்ள திட்டங்களுக்கு உரிமை கொண்டாடுவதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் உழைத்துக் கொண்டு வந்த திட்டங்களைக் கூறுங்கள். நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த திட்டங்களுக்கு நீங்கள் உரிமை கொண்டாடாதீர்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆரை சிலர் அமைச்சர், அமைச்சர் என்றே அழைக்கின்றனர். இதை,பொதுமக்கள் நக்கலாகவும், கிண்டலாகவும் பார்க்கின்றனர்.

கலைஞர் மகன் மு.க.அழகிரி விரைவில் கட்சி ஆரம்பிக்கப் போகிறார். முன்னாள் மத்திய அமைச்சரான அவர், பா.ஜ.க.வில் சேர இருப்பதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் வெளிவருகிறது. இது குறித்து மு.க.அழகிரி கூறும்போது, ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார்.

தி.மு.க.வின் முரசொலி அறக்கட்டளைக்குச் சொந்தமாக 40 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது. மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் நிர்வாகிகளாக இருந்துவருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பொறுப்பில் இருக்கும்போது, எனது மகன் துரை இருக்கக்கூடாதா என்று மு.க.அழகிரி கோபத்தில் இருக்கிறார். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்தும் வருகிறார். இதுநாள் வரை காத்துக் கொண்டிருந்த மு.க.அழகிரி, தற்போது தி.மு.க.வுக்கு எதிராகத் திரும்பியுள்ளார். கலைஞரின் சொத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி, ஸ்டாலின் மீது அழகிரி புகார் கொடுத்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.


தி.மு.க.வில் குடும்பம் குடும்பமாக மட்டுமே இருப்பார்கள். கலைஞர் மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி, பிறகு அவரது மகன்.. இப்படி குடும்பக் கட்சியாகவே தி.மு.க. செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வில் உழைக்கிறவர்கள் உழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுக் கொண்டேதான் இருப்பார்கள்.

தமிழக மக்களை ஏமாற்றி ஒரு லட்சம் கோடி சொத்து சேர்த்து இருப்பதைத் தவிர, வேறு என்ன திட்டங்களை தமிழக மக்களுக்கு தி.மு.க.வினர் கொடுத்துள்ளனர். அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் கட்சி அ.தி.மு.க.தான். நான் ஒன்றும் மிட்டா மிராசுதாரர் குடும்பத்தில் பிறந்தவன் கிடையாது. அடிமட்டத் தொண்டனாக இருந்து, இன்று அமைச்சராக உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். வார்டு செயலாளராகப் பணியாற்றி, தற்போது மாவட்ட கழகச் செயலாளராக.. அமைச்சராக.. உங்கள் முன் நின்று கொண்டிருக்கின்றேன். தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் மேலே வரவே முடியாது.” என்று பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT