Skip to main content

“நாங்கள் சாகா வரம் பெற்றவர்கள்!”- கெத்து காட்டும் கே.டி.ராஜேந்திரபாலாஜி! 

குடியுரிமைச் சட்டம் குறித்து முதலமைச்சர் கேள்வி எழுப்பியபோது ஸ்டாலின் ஏன் ஓடவேண்டும்? என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் ஜெயலலிதாவின் 72- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்களை விளக்கியும், மம்சாபுரம் பேரூராட்சியில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. 

sriviliputhur former cm jayalalithaa birthday celebration

விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,“அதிமுகவில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. எம்பி தேர்தலில் தோல்வியுற்றாலும் உள்ளாட்சித் தேர்தலில் பாதிக்குமேல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இரட்டை இலைச் சின்னத்திற்கு இருக்கும் மரியாதை என்றுமே மறையாது. அதிமுகவுக்கு என்றுமே அழிவு காலம் கிடையாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்துதான் போவார்கள். எம்பி தொகுதிகளில் ஜெயித்து விட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சந்தோஷமாக இல்லை. ஏனென்று கேட்டால், ஜெயித்தும் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ktr

பாராளுமன்றத்தில் தமிழர் பிரச்சினை குறித்து திமுக எம்பிக்கள் பேசுவது கிடையாது. தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரியைப் பெற்றுக் கொடுத்தவர் தமிழக முதல்வர் எடப்பாடியார். மார்ச் 1- ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் வரும் முதல்வர், மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைக்கவிருக்கிறார். ஏழை எளிய மக்களைப் பார்த்து நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக இயக்கம். தமிழகத்தில் எப்போதும் அதிமுக அலைதான் வீசும். அண்ணா திமுகவை அழிக்கவே முடியாது. நாங்கள் சாகா வரம் பெற்று வந்தவர்கள். 

sriviliputhur former cm jayalalithaa birthday celebration

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வர வாய்ப்பே கிடையாது. அவருக்கு அந்த யோகம் கிடையாது. ஒரு கட்சி வளர்கிறதா என்பதை ஒரு ஜவுளிக் கடையில் சென்று தெரிந்துகொள்ளலாம். ஜவுளிக் கடைக்குச் சென்று எந்தக் கட்சி வேஷ்டி, சேலைகள் அதிகமாக விற்பனை ஆகின்றது என்பதை தெரிந்து கொண்டாலே, அந்தக் கட்சியின் வளர்ச்சி குறித்து எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். தற்போது ஜவுளிக் கடைகளில் அதிமுக கரை வேட்டிதான் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உழைக்கும் தொண்டர்களுக்கு அதிமுகவில் என்றும் உரிய மரியாதை உண்டு. பெண்களுக்கு திட்டங்களை அள்ளிக் கொடுக்கின்ற ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. 


குடியுரிமைச் சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்களை திமுகவினர் தூண்டிவிடுகின்றனர். சட்டசபை கூட்டத்தொடரில் எடப்பாடியார் அவர்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் ஓடிப் போனவர்தான் ஸ்டாலின். கலவரத்தை தூண்டிவிட்டு ஆட்சிக்கு வரத் துடிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுடைய கனவு ஒருக்காலும் நிறைவேறாது.”என்றார். அதிமுக கொடியில் இடம்பெற்றுள்ள அறிஞர் அண்ணா, அக்கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., அதன்பிறகு, அதிமுக முதலமைச்சர்களாக கோட்டையில் அமர்ந்த வி.என்.ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகிய அனைவரும் இறந்து அமரர்கள் ஆனவர்களே! இந்த இயற்கையின் நியதி கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு தெரியாமல் போனது ஏன்? சாகா வரம் பெற்றவர்கள் என புராணங்கள் அவிழ்த்துவிட்டதை அரசியல் மேடையில் பேசுவதை என்னவென்று சொல்வது?