ADVERTISEMENT

உங்கள் குடும்பத்தாரே உங்களுக்கு உலை வைக்கும் விசித்திரத்தை பார்க்கிறோம்: விஜயகாந்த்துக்கு வாகை சந்திரசேகர் கண்டனம்

12:00 PM Apr 25, 2018 | rajavel


தங்கள் பேட்டி உங்கள் வாயால் கூறப்பட்டதா? அல்லது வேறு ஒருவருடைய காழ்புணர்ச்சியின் வெறி உங்கள் வாயிலாக வெளிப்பட்டதா? என நடிகர் விஜயகாந்த்துக்கு நடிகர் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

தலைவர் கலைஞரை பார்க்கவிடாமல் என்னைத் தடுத்தார் மு.க.ஸ்டாலின் என்ற அபாண்டமான பழியை, பச்சை பொய்யை ஆங்கில நாளிதழில் (24/04/2018) பேட்டி அளித்துள்ளார். நடிகர் விஜயகாந்த் இந்த பேட்டி உங்கள் வாயால் கூறப்பட்டதா ? அல்லது வேறு ஒருவருடைய காழ்புணர்ச்சியின் வெறி உங்கள் வாயிலாக வெளிப்பட்டதா ? விஜயகாந்த் அவர்களே உங்கள் இயலாமையைப் பயன்படுத்தி தளபதி மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை வெறுப்பை நெருப்பாய் கக்கியது யார்?

கலைஞரை பார்க்கவிடாமல் மு.க.ஸ்டாலின் தடுத்தார் என நா கூசாமல் பேசி உள்ளீர்களே! கோபாலபுரத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் நேரில் கண்ட காட்சியை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். உங்களோடு நானும் இருந்த நாட்களை நினைவிற்கு கொண்டு வருகிறேன். தலைவர் கலைஞரை சந்திக்க எத்தனையோ பேர் காத்திருந்தாலும் நீங்கள் வந்திருப்பதை அறிந்ததும் மு.க.ஸ்டாலின் உடனே தலைவரிடம் சென்று "விஜி வந்திருக்கிறார்" என்று எத்தனையோ தலைவர்கள், அறிஞர் பெருமக்கள் போன்றோரை தாண்டி உங்களை தலைவர் கலைஞரிடம் பேச வைத்து, வாசல் வரை வந்து, உங்களை வழி அனுப்பி வைத்த காட்சியை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

விஜயகாந்த் அவர்களே "என்னுடைய மனசாட்சி ஸ்டாலினை எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை" என்று கூறியுள்ளீர்கள். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியில் நீங்கள் படுகுழியில் தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜென்மமாய் இருக்கிறீர்கள். விஜயகாந்த் அவர்களே, மு.க.ஸ்டாலின் எப்போதும் உங்களை விரும்பியதும் இல்லை, வெறுத்ததும் இல்லை. அவரின் பொதுவாழ்வின் அரசியல் பயணத்தில் புலிகளையும் புல்லுருவிகளையும் கடந்து செல்கிறார். அரவுகளையும் கயிற்றரவுகளையும் கடந்து செல்லும் மக்கள் தொண்டர் எங்கள் மு.க.ஸ்டாலின்.

கவரிமானை காட்டுப்பூனைக்கு பிடித்தால் என்ன? பிடிக்காவிட்டாலும் தான் என்ன ? காவிரிப்பிரச்சனை தொடர்பாக தி.மு.க கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? என்ற கேள்விக்கு விஜயகாந்த் "ஸ்டாலினை துதிபாடுவதை தவிர வேறு எதுவும் அங்கே நடக்க போவதில்லை. அவர் என்ன கருணாநிதியா ? ஸ்டாலின் வேண்டுமானால் தன்னை கருணாநிதி என்று நினைத்துக் கொள்ளலாம் ஆனால் அது உண்மை அல்ல" என்று உளறிக்கொட்டியுள்ளார்.

தலைவர் கலைஞரை மாபெரும் தலைவர்கள், தமிழ் பேரறிஞர்கள் பாராட்டி புகழ்ந்து பேசியதை ஏற்றுக்கொண்டதை போல விஜயகாந்தின் பாராட்டுதலையும் புகழ்ச்சியையும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் எங்கள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புகழ்ச்சி என்பது பிடிக்காத ஒன்று. நண்பர் விஜயகாந்த் அவர்களின் சினிமா பாணியில் சொல்ல வேண்டுமென்றால் மு.க.ஸ்டாலினுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை புகழ்ச்சி. மேலும் பேட்டியில் "அவர் என்ன கருணாநிதியா ?" "ஸ்டாலின் வேண்டுமானால் கருணாநிதி என்று தன்னை நினைத்துக்கொள்ளலாம்" என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். மு.க.ஸ்டாலின் அவர்களை தி.மு.காரர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள், எதிர்க்கட்சி நண்பர்கள், ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் கலைஞருக்கு பிறகுமு.க.ஸ்டாலின்தான், அதுவும் நாகரிக அரசியல் தலைவர் என ஏற்றுக் கொண்டார்கள். தலைவர் கலைஞரே "இந்த இயக்கத்தை எதிர்காலத்தில் வழிநடத்திச் செல்லும் ஆற்றலும் தகுதியும் படைத்தவர் மு.க.ஸ்டாலின்தான்" என மக்கள் மன்றத்தில் முழக்கமிட்டுள்ளார். "அப்பனைப் போலவே மகனும் எடுத்த காரியத்தை முடிப்பதில் அடம்பிடிக்கிறான்" என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பேரறிஞர் அண்ணாவால் பாரட்டப்பட்டவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். வரலாறு தெரியாமல் உளறாதீர்கள்.

கழிப்பறையில் வசிக்கும் கரப்பான் பூச்சிக்கும் அழிவில்லை

சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைக்கும் அழிவில்லை.

எங்கள் மு.க.ஸ்டாலின் பீனிக்ஸ் பறவை !

சாக்கடை மூக்கை பொத்துகிறது, சந்தனத்தின் மணத்தை பார்த்து !

விஜயகாந்த் அவர்களே ! நீங்கள் ஆரம்ப காலங்களில் மேடையில் பேசும்போது கலைஞரின் வைர வரிகளான "வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என பேசி கைதட்டல் பெறுவீர்கள்.


கலைஞருக்கே பிடித்த வரிகளை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன் "மனசாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடும்".

விஜயகாந்த் அவர்களே !

மனசாட்சியை தூங்கவிட்டு விடாதீர்கள்

நீங்கள் உடல்நலமும் ! மனநலமும் பெற வேண்டும் !

ஒருவரிடம் குறை இருந்தால், அதை பெரிதுபடுத்தி அவரின் எதிரிகள் ஊருக்கெல்லாம் பறைசாற்றி தாங்கள் பயனடைவார்கள். விஜயகாந்த் அவர்களே உங்கள் இயலாமையை உங்கள் குடும்பத்தாரே பயன்படுத்தி உங்களுக்கே உலை வைக்கும் விசித்திரத்தை பார்க்கிறோம். இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இப்போதும் உங்களுக்கு உண்டு என்று நம்புகிறோம்.

சினிமாவில் கதாநாயகனுக்கு மார்க்கெட் போனால் மார்க்கெட்டில் உள்ள கதாநாயகியும், இசை அமைப்பாளரையும், இயக்குநரையும் இணைத்து மீண்டும் வெற்றி பெறுவது சினிமா பாணி...

அதைப்போலவே, அரசியலில் மார்க்கெட் போகாமல் இருக்க மக்களின் மனதில் நிலைத்திருக்கும் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி இழந்த அரசியல் மார்க்கெட்டை பிடிக்க நினைக்காதீர்கள். சினிமா வேறு அரசியல் வேறு. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT