
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்திற்கு லேசான கரோனா அறிகுறி தென்பட்டுள்ளதை அடுத்து, நேற்று இரவு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரம் மட்டுமல்லாமல் மிகப்பெரிய அளுமையாக இருந்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் உடல்நலம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷை ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் நடிகர் விஷாலும் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்திருக்கிறார்.