ADVERTISEMENT

மோடி வேடம் கலைஞ்சு போச்சு... -தே.மு.தி.க. செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த்

05:10 PM Jul 04, 2018 | Anonymous (not verified)

தே.மு.தி.க.வின் செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகமான கோயம்பேட்டில் இன்று காலை 10.30 க்கு நடைபெற்றது சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மாநில எடப்பாடி அரசை கண்டிக்கும் தீர்மானத்தோடு மத்திய பா.ஜ.க. மோடி அரசுக்கும் கண்டன தீர்மானம் அறிவிக்கப்பட்டது. சென்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. கூட்டணியான பா.ஜ.க. பொன்.ராதாகிருஷ்ணன், பா.ம.க. அன்புமணி ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர். இந்த நிலையில் பா.ஜ.க.வுடன் நட்புடனே தே.மு.தி.க. இருந்தது. விஜயகாந்த்தும் அவரது மனைவி பிரேமலதாவும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததும் இல்லை.


இந்த நிலையில் இன்று நடந்த கட்சி செயற்குழுவில் மத்திய பா.ஜ.க. மோடி அரசு தேர்தலுக்கு முன்பு அறிவித்த கருப்பு பணத்தை மீட்பேன் என்பது நடக்கவில்லை, இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் போடப்படும் என்று அறிவித்ததும் நிறைவேறவில்லை. பண மதிப்பு நடவடிக்கையால் சாதாரன மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கருப்பு பண பதுக்கல் முன்பை விட இப்போது கூடுதலாகி விட்டது என மத்திய மோடி அரசை வெளிப்படையாக கண்டித்துள்ளது இக் கூட்டம்.


இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது,

"எல்லோரும் கட்சி வேலையை பாருங்க. தமிழ்நாட்டுக்கு சட்டமன்ற தேர்தல் தான் முதலில் வரும் அப்புறம் தான் உள்ளாட்சி தேர்தல். போன பாராளுமன்ற தேர்தல் லே நம்மனாலே ரெண்டு பேர் எம்.பி. ஆனாங்க அதுல ஒருத்தரு மத்திய அமைச்ரா கிட்டாரு நாம தோத்துட்டோம் தி.மு.க.வும் மொத்தமா தோத்துருச்சு. யாரால? நம்மனாலே. மோடி ஆட்சி சரியில்லே. மோடியோட வேடமெல்லாம் கலைஞ்சு போச்சு அதை கர்நாடகா தேர்தல்லே அப்புறம் நடந்த இடை தேர்தலேயே பார்த்துட்டோம். அதுக்காக நான் தி.மு.க. லைன் எடுப்பனு நெனைக்காதீங்க. அது நடக்காது தேர்தல் தேதி அறிவிச்ச பிறகு தான் எல்லாம். செப்டம்பர் மாதம் திருப்பூரிலே மாநாடு அதுக்கு தயாராகுங்க. இவ்வாறு அவர் கூறினார்.

செப்டம்பர் மாதம் தே.மு.தி.க. வின் 14 ஆம் ஆண்டு தொடக்க விழா மாநாடு திருப்பூரில் நடக்க இருக்கிறது. அதற்கு முன் சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் அல்லது அமெரிக்கா சென்று வருவார் என்றும் தே.மு.தி.க. வட்டாரம் கூறுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT