காவிரிமேலாண்மைவாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய பாஜக அரசையும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசையும் கண்டித்து திமுக தனது கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தொடர் போராட்டம் நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஏப்ரல் 5ந்தேதி தமிழகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது திமுக. அதிமுக, பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், போளுர், ஆரணி, வந்தவாசி, செய்யார் போன்ற நகரங்கள், பேரூராட்சிகளில் 95 சதவிதம் கடைகள் அடைக்கப்பட்டு முழு கடையடைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளன. பேருந்துகள் 10 சதவிதம் மட்டுமே இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி பேருந்துகள் மட்டும் வழக்கம் போல் இயங்கின.

Advertisment

thiruvannamalai protest

காலை 8 மணிக்கு திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து திமுக மா.செவும், முன்னால் அமைச்சருமான எ.வ.வேலு,எம்.எல்.ஏ தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தமுமுக உட்பட பல கட்சிகள் ஊர்வலமாக சென்று திருவண்ணாமலை இரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இரயில் நிலையத்தின் இரண்டு நுழைவாயில்கள் மூடப்பட்டு மாநில காவல்துறை மற்றும் இரயில்வே போலிஸார் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். அவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு ரயில் நிலையத்துக்குள் புகுந்த கட்சியினர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்தனர். இதனால் காட்பாடியில் இருந்து விழுப்புரம் செல்ல வேண்டிய பயணிகள் இரயில் போளுருக்கும் – திருவண்ணாமலைக்கும் இடையே நிறுத்தப்பட்டது.

Advertisment

thiruvannamalai protest1

இரயில் வந்தால் தான் இங்கிருந்து நகருவோம் என முரண்டு பிடித்தனர் திமுகவினர். திருவண்ணாமலை இரயில்வே அதிகாரிகள், இரயிலை இயக்கி அசம்பாதவிதம் ஏதாவது ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது அதனால் இரயிலை இயக்க முடியாது என்றனர். மாநில போலிஸார் என்ன செய்வது எனத்தெரியாமல் முழித்தனர். பின்னர் திருவண்ணாமலை ஏ.டி.எஸ்.பி ரங்கராஜன் சம்பவயிடத்துக்கு வந்து, திமுக பிரமுகர்களிடம் பேசிவிட்டு, ரயில்வே அதிகாரிகளிடம் சென்று நீங்க இரயிலை வரச்சொல்லி தகவல் தந்துடுங்க. இரயிலுக்கு எந்த சேதமும் ஏற்படாது. அவுங்க இரயில் மறியல் போராட்டம் செய்துட்டு கலைந்து போய்டுவாங்க என வாக்குறுதி தந்தார். நீண்ட நேர ஆலோசனைக்கு பின்பு ரயில்வே அதிகாரிகள் இரயிலை இயக்க ஒப்புக்கொண்டனர். அதன்பின்பு 1 மணி நேரம் கழித்து வழியில் நிறுத்தப்பட்ட இரயில் திருவண்ணாமலை ரயில்வே நிலையத்துக்கு வந்தது.

tvmalai

ரயில்வே பாதையில் அமர்ந்திருந்த திமுக உட்பட எதிர்கட்சியினர் இரயில் முன் நின்று 10 நிமிடம் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது இரயில் ஓட்டுநர் ஹாரன் அடிக்க மறியலில் ஈடுப்பட்டவர்கள் கோபமாகிவிட்டனர். அவர்கள் இரயிலை கோபத்தில் தட்டினர். போலிஸார் உடனே அனைவரையும் கைது செய்தனர். அதன்பின் ஒன்னரை மணி நேர தாமதத்துக்கு பின் இரயில் புறப்பட்டு விழுப்புரம் சென்றது.

5 பேருந்துகளில் திமுகவினர் உட்பட எதிர்கட்சியினரை கைது செய்து அழைத்து சென்றனர் போலிஸார். இதில் மகளிர்க்க என தனியாக ஒரு பேருந்தை ஒதுக்கி அதில் அழைத்து சென்றனர். அதற்கு மேல் கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிச்செல்ல பேருந்துகள் இல்லாததால் 300க்கும் அதிகமான இருசக்கர வாகனத்தில் கட்சியினர் கைதாகி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றனர். கைதானவர்களை தனியார் மண்டபத்தில் தங்கவைத்துள்ளது காவல்துறை.

திருவண்ணாமலை நகரில் மட்டும் பெண்கள் உட்பட 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடதக்கது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரம் பேர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.