ADVERTISEMENT

பெரியார்தான் மறைந்துவிட்டாரே! இப்போது அப்படிக் கூறுவது பொருந்துமா? -கி.வீரமணி

08:12 PM Feb 03, 2019 | Anonymous (not verified)


அண்ணா 50 ஆம் ஆண்டு நினைவு நாளில் திக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை: தந்தை பெரியாரின் தலைமாணாக்கராகவும், திராவிடர் இயக்கத்தின் பல்கலைக் கொள்கலனுமான அறிஞர் அண்ணாவின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (3.2.2019).

ADVERTISEMENT

அறிஞர் அண்ணா, அடையாறு (புற்றுநோய்) மருத்துவமனையில் 1969, பிப்ரவரி 3 ஆம் தேதி இரவு உயிர் துறந்தார்.

ADVERTISEMENT

அண்ணாவின் உடல்நலம்பற்றி நாளும் அறிய வசதியாக அடையாறில் உள்ள எங்கள் இல்லத்தில் பல நாள்கள் தங்கியிருந்தார் தந்தை பெரியார். இல்லம் எதிரேதான் மருத்துவமனை. மாடிப்படிகளில் (எங்கள் இல்லத்தில்) ஏறி இறங்கும் வலியையும் பொறுத்துக்கொண்டு அய்யா, அன்னை மணியம்மையாருடன் நாங்கள் நாளும் செல்வோம்; அண்ணாவை கவலையோடு பார்த்துத் திரும்பும் அய்யா, திரும்பியவுடன் சற்று நேரம் அமைதியான, சோகத்தோடு இருப்பார்; சிறிது நேரம் சென்ற பின்னரே வழக்கம்போல் உரையாடுவார்!


அண்ணா மறையும் நேரத்தில், அடையாறு மருத்துவமனையில் நடுநிசியில் அமைச்சர் பெருமக்களுடன் அமர்ந்திருந்தேன். அண்ணா உயிர் நீத்தார் எனும் அழுகுரல் எங்களை அழ வைத்தது; மருத்துவமனை கதவுகள் மூடப்பட்டிருந்தன. எதிரில் என் வீட்டில் ‘முதல் தகவலைத்’ தெரிவிக்க உயரமான இரும்புக் கேட்டினைத் தாண்டிக் குதித்து வந்து, உறங்கிக்கொண்டிருந்த அய்யா, அம்மாவிடம் அழுத குரலோடு அறிவித்தேன். அய்யா கவலையுடன் எழுந்து, அன்னையாருடன் சக்கர நாற்காலி சகிதம் புறப்பட்டார். அப்போது இரவு 2 மணி இருக்கும். அண்ணாவின் உடலை இறுதியாகச் சந்திக்கிறார் தந்தையார். கலைஞர் அய்யாவைக் கட்டிப் பிடித்து, ‘‘அய்யா, உங்கள் தலைமகன் நம்மையெல்லாம் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டாரே அய்யா’’ என்று கதறி அழுகிறார். அய்யா அமைதியாக அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் பார்வையுடன் இருந்து, எனது இல்லம் திரும்புகிறார், அப்பொழுது இரவு 3 மணி!

அய்யா எழுதிய அந்த வாசகம்!

மீண்டும் படுக்கவில்லை, உறங்கவில்லை. எழுதுகிற ‘பேட்’ கொண்டு வரச் சொன்னார்; கொடுக்கிறோம்; அருகில் அம்மா அழுத கண்ணீர் ஊற்றுடன் - புலவர் கோ.இமயவரம்பன் அவர்களும், நானும் கண்ணீர் மல்க நின்று கொண்டிருக்கிறோம். நிசப்தமான இரவு! நீங்காத நினைவுகளைக் கொண்ட இரவு!!
அய்யா எழுதத் தொடங்கி வேகமாக எழுதுகிறார். அண்ணாவுக்கு இரங்கல்!

தன்னை ஆளாக்கிய தானைத் தலைவனின் கண்ணீர்த் துளிகள் அண்ணாவின்மீது பட்ட சில மணித்துளிகள் ஓடிய நிலையில், ‘அண்ணா முடிவெய்தி விட்டார்’ என்று எழுதத் தொடங்கி,

‘‘அண்ணா மறைந்தார்;
அண்ணா வாழ்க!’’ என்று அரிய தலைப்பிட்டு இரங்கல் அறிக்கையை அந்த அறிவு ஆசான் தருகிறார்!
அதுவே வானொலிக்கான உரையாகிறது!
என்னே அவரது ஆழமான சிந்தனை வளம்!
இங்கிலாந்து நாட்டின் ஆங்கிலேயே அரசர்கள் மறைந்தால், ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள்.
‘‘‘King is dead
Long live the King’’
என்பதே அது.

தனி மனிதர் மறையலாம் - ஆனால் தத்துவம்?

வெறும் வரிகளைக் கொண்ட வார்த்தைகளாக இதைப் படிக்கும், கேட்கும் பலருக்கும், இது ஏதோ ஒரு முரண்பாடு போலத் தோன்றக்கூடும்.

‘பெரியார் வாழ்க’ என்று இன்றும் பெரியார் தொண்டர்கள் முழங்கும்போது சிலர் கேட்பதுண்டு; ‘‘என்ன பெரியார்தான் மறைந்துவிட்டாரே - இப்போது அப்படிக் கூறுவது பொருந்துமா?’’ என்று.

இன்னும் சிலர் ‘பெரியார் புகழ் வாழ்க’ என்றும் முழங்குவதுண்டு!
ஆனால், அதன் உண்மைப் பொருள் தத்துவப் பொருள் என்ன தெரியுமா?
இங்கிலாந்து நாட்டுக்கே மீண்டும் செல்வோம்.
‘‘மன்னர் மறைந்தார்
மன்னர் நீடு வாழ்க!’’
‘‘King is dead
Long live the King’’

என்ற முழக்கத்தில், ‘‘மன்னர் என்ற பொறுப்பில் தனி நபர் மறைந்தார்! ஆனால், அந்த மன்னர் என்ற நிறுவனம் நீண்ட நாள் வாழ்க!’’ என்பதே!
அந்தப் பொறுப்பு - தனி நபர் வகுத்த ஒன்று அல்ல - நிறுவனம் தொடருவதோர் அமைப்பு.
அதே பொருளை - ஆங்கில நாட்டுமுறைபற்றி கல்லூரி காணாத பெரியார் எவ்வளவு அழகாக எந்த இடத்தில் அதை எப்படிப் பொருத்தமாக எழுதுகிறார் பாருங்கள்!

அண்ணா மறைவுக்குப் பின் 50 ஆண்டுகள் தொடர்கிறது!

அண்ணா மறையவில்லை; அவரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் - கொள்கைக் கோட்டகம் - பாசறை அய்ம்பது ஆண்டுகளாக அது தொய்வின்றித் தொடருகிறது!
அவர் வகுத்த அரசியல், ஆட்சித் தத்துவங்களின் தேவைகள் மங்கவில்லை; மறையவில்லை, இப்போது அதிகமாகவே தேவைப்படுகிறது!

மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர் பயணம்

அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கியதாக கவிதாஞ்சலி பாடிய கலைஞர், அவருக்குப் பின்னும், அவர் கண்ட அறிவாலயமாக தி.மு.க. மு.க.ஸ்டாலின் போன்றவர்களைக் கொண்ட தொடர் நிறுவனம் - இலட்சியப் பயணத்தை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தொடர்கிறது!
திராவிடத்தின் தேவை திக்கெட்டும் உணரப்படுகிறது!
அய்யா எழுதிய தலைப்பு;
‘‘அண்ணா மறைந்தார்
அண்ணா வாழ்க!’’

43 ஆண்டுகளுக்குமுன், (1976 இல்) ‘‘அண்ணா நினைவிடம் வர வாய்ப்பின்றி வதிந்தவர்களும் இன்றும் அண்ணா நினைவிடத்தில்’’ - அதை ‘முரசொலி’யில் நாசுக்காக எழுதிப் புரிய வைத்த அவரது அன்பு தம்பி கலைஞரும் அருகில் உறங்க, அண்ணா நினைவிடத்தில்...
மலர்வளையம் வைத்து இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம்.
இப்போது புரிகிறதா தந்தையாரின் வாழும் எழுத்துக் கருத்துத் தொனி?
அண்ணா மறைந்தார்
அண்ணா வாழ்க! என்பது
புரிகிறதா நண்பர்களே!
தனி மனிதர்கள் மரிக்கிறார்கள்.
தத்துவங்களும், நிறுவனமும் மறைவதில்லை.
அண்ணா வாழ்க, என்றும்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT