Skip to main content

இதுமட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா???

சமீபகாலங்களில் ஒரு பிரச்சனை என்றால் அதை எதிர்த்து களத்தில் போராடாமல் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவது வழக்கமாகிவிட்டது.
 

dmk mk stalinஅரசியலிலும் அது சமீப காலமாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரையில் மிகமுக்கியமான இடத்தில் இருக்கும், மக்கள் பிரச்சனைகளை ஆட்சியாளர்களிடம் கொண்டுசேர்க்கும் எதிர்கட்சி என்ற இடத்தில் இருக்கும் திமுக இதை அதிகமாக செய்கிறது. 

ஒரு பிரச்சனையோ அல்லது ஒரு ஆலோசனைக் கூட்டமோ நடக்கும்போது அதற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அல்லது சட்டமன்றத்தில் விவாதம் நடக்கும்போது அங்குள்ள கட்சிகளின் விருப்பத்தைக் கேட்கும். அப்போது அந்த கூட்டத்தில் நமது கருத்தை தெரிவிக்கவேண்டும், அது மக்களுக்கு எதிரான திட்டங்களாக இருந்தால் அதற்கான வலுவான எதிர்ப்பை, வலுவான கருத்துகளை, ஆதாரங்களைக் காட்டவேண்டும். அப்படியானால்தான் அது வலுவான எதிர்ப்பாக அமையும். 
 

dmk mk stalin


நாடாளுமன்ற தேர்தலுக்குமுன் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டங்களில் திமுகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக, மக்களின் நலனுக்கு எதிராக அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காக திமுக தினமும் வெளிநடப்பு செய்துகொண்டே இருந்தது. அப்போது முதல் ஒரு சில தினங்களுக்கு நேர்மறையான கருத்துகளைப் பெற்றாலும், அதுவே போகப்போக எதிர்மறையாக மாறியது.

காலை 9.30 மணிக்கு சட்டமன்றத்திற்குள் செல்வார்கள் அப்போது, நீ வேணும்னாலும் பாரு, 9.45க்கு வெளிய வந்திருவாங்க என்று கேலியாக சொல்லும் அளவிற்கு மிகுந்த விமர்சனங்களை சந்தித்தது. திமுக கூட்டணி வெளிநடப்பு செய்தபிறகு, அவையில் அதிமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களை மட்டுமே வைத்து ஒருசில திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக. எதிர்கட்சி என்ற ஒரு வலிமையான தரப்பு இல்லாமலேயே சட்டமன்றங்கள் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதும் இதேமாதிரியான ஒன்றை திமுக செய்துள்ளது.
 

dmk mk stalin


நேற்று (19.06.2019) ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை செயல்படுத்தலாமா என்று அனைத்துக்கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. நடைமுறைக்கு ஒவ்வாத, குழப்பமான திட்டம் இது என அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர். அந்த கருத்தை, அந்த திட்டத்தை தங்களின் அரசியல் ஆலோசகர்கள், அனுபவங்கள் ஆகியவற்றைக்கொண்டு வலுவாக எதிர்க்கவேண்டிய காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் போன்ற எதிர்கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. மொத்தம் 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 21 கட்சிகள் மட்டுமே கலந்துகொண்டுள்ளன. இதில் பாஜக கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை கணிசமானவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தக் கூட்டம் முடிந்தபின் பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கூட்டத்தில் பங்குபெற்ற கட்சிகள் பலவும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இதை நடைமுறைப்படுத்துவது குறித்த தங்களது சந்தேகங்களை தெரிவித்தன, ஆனால் அவர்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த திட்டத்தை ஆராய ஒரு குழுவை பிரதமர் மோடி அமைப்பார். அந்த குழு ஆராய்ந்து தங்களது அறிக்கைகளை சமர்பிக்கும் எனவும் தெரிவித்தார். 

இதிலிருந்து ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது. இந்த திட்டம் கிட்டதட்ட நிறைவேறப்போகிறது. கூட்டத்தில் கலந்துகொண்ட பல கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன அதனால் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை வலுவான எதிர்கட்சிகள் அனைத்தும் கலந்துகொண்டு அதை வலுவாக எதிர்த்திருந்தால், பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் முடிவு என்றோ, நடைமுறைக்கு ஒத்துவராது என்றோ, இந்தியா துணைக்கண்டம் இது ஒரு நாடு இல்லை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின்படிதான் இது நடக்கிறது என்றோ கூறியிருந்தால் அது எவ்வளவு பெரிய எதிர்ப்பாக அமைந்திருக்கும். 
 

 

dmk mk stalin


தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திமுக அதை கண்டிப்பாக செய்திருக்கவேண்டும். ஏனென்றால் எந்த பிரச்சனையானாலும் அதற்கு பதில்கூறும், அதற்கு தீர்வு கொடுக்கும் கலைஞர், ஒற்றை ஆளாக நாடாளுமன்றத்தில் பல சமூகநீதி திட்டங்களை நிறைவேற்றிய, அதுகுறித்து அனைவரையும் பேசவைத்த அண்ணா போன்ற தலைவர்கள் இருந்த இயக்கம் இது. அதற்கும் மேல் ஒற்றை ஆளாக தொடங்கி ஒரு சமூகநீதி பேரியக்கமாக மாற்றிய, இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பெரியாரை முன்னோடியாகக்கொண்ட இயக்கம் இது. இந்திய அரசியலை தமிழ்நாட்டிலிருந்து தீர்மானித்தவர்கள் அவர்கள், அதனால்தான் அவர்கள் இல்லாதபோதும் அவர்களை அகற்றிவிட்டு அரசியல் செய்யமுடியவில்லை என்ற நிலை ஏற்பட்டது.

புறக்கணிப்பு எதிர்ப்பாக இருக்கலாம் ஆனால் அது ஒரு வலுவான எதிர்கட்சிக்கு அழகில்லை மேலும், அப்படியிருப்பது வலுவான எதிர்ப்பும் இல்லை, நிரந்தர தீர்வும் இல்லை இதை மனதில் வைத்துக்கொண்டு இன்றைய தலைவரும், கட்சியும் செயல்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஒருவேளை அதுமட்டுமே போதும் என யாரேனும் நினைத்தால் அது மிகப்பெரிய தவறாகவும் வாய்ப்பிருக்கிறது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்