Skip to main content

“மீண்டும் மீண்டும் சொல்லி விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும்” - மாபெரும் தமிழ்க்கனவு விழாவில் முதலமைச்சர்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

"We should keep saying it again and again and sow it" Chief Minister at the grand Tamil dream festival

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரையான மாபெரும் தமிழ்க்கனவு 100 ஆவது நிகழ்வில் கலந்து கொண்டார். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

 

இந்நிகழ்வில் பேசிய அவர், “எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் எனது மாபெரும் தமிழ்க்கனவு. ஆண்டுதோறும் அனைத்து கல்லூரிகளிலும் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடத்தப்படும். அண்ணா என்ற ஒற்றைச் சொல் லட்சக்கணக்கான இளைஞர்களை தமிழ் சொந்தங்களை இணைக்கும் ஒற்றுமை சொல்லாக மாறியது. அண்ணாவின் பேச்சுகளை மாலை நேரத்து நூலகம் என சொல்லுவார்கள். அவர் தான் படித்த அத்தனையும் தன் மொழியில் இந்த நாட்டிற்கு சொன்னார். அண்ணாவின் பேச்சுகள், தலைப்புகளை மையப்படுத்தித் தான் இருக்கும். 1961ல் அண்ணா பேசுவதற்காக தலைப்பு கேட்ட பொழுது விழாவை ஏற்பாடு செய்திருந்தவர்கள் தலைப்பு இல்லை என அண்ணாவிடம் சொன்னார்கள். அப்போது தலைப்பு இல்லாத நாடாக தமிழ்நாடு திகழ்வதா என்று அண்ணா பேசினார். 

 

தொடர்ச்சியான பரப்புரை மூலமாகத்தான் நல்ல பரப்புரைகளை விதைக்க முடியும். ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும் என்று கலைஞர் சொல்லுவார். அதுபோல் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி விதைத்தால் தான் அண்ணா காலத்தில் உருவான மாணவர்களைப் போல் உருவாக்க முடியும்.

 

அனைவரும் நமது இனத்தின் வரலாறு, மொழியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நான் முதல்வன் திட்டத்தை இளைஞர்கள் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வேண்டும். தமிழ்நாடு இளைஞர்களுக்கு தன்னைப் பற்றிய சிந்தனையும் நாட்டைப் பற்றிய பொது நோக்கமும் இருக்க வேண்டும். இளைஞர்கள் சமூக வலைதளங்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

புதிதாகத் திறக்கப்பட்ட அரசுப் பள்ளி கட்டடத்தில் விரிசல்கள்; சீரமைப்பு பணிகள் தீவிரம்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Repairing the cracks in the new classroom building is in progress

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.264.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 956 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 12 ஆய்வகங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள், திருவண்ணாமலையில் மாவட்ட முதன்மை  கல்வி அலுவலகத்துடன் இணைந்த ஒருங்கிணைந்த கல்வி வளாகம் போன்றவற்றைக் காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்தான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைவினாயகர்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுத் திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்த போது கட்டடத்தின் தரைதளம் மற்றும் சுவர்கள் உடைப்பு, விரிசல் இருப்பதைபபார்த்து பொதுப்பணித்துறை பொறியாளரிடம், இதெல்லாம் என்ன இப்படித்தான் வேலை செய்வீங்களா என்று கூறி உடனே சரி செய்ய வேண்டும் என்று கூறிச் சென்றனர். அதன் பிறகு அவசர அவசரமாக உடைப்புகளைச் சரி செய்யும்விதமாக ஆங்காங்கே சிமெண்ட் பூசியும், வெடிப்புகளில் பட்டியும் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அந்த கட்டடத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். முதலமைச்சர் திறந்து வைத்த போது அந்தப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதிய மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர்.

முதலமைச்சர் திறந்து வைத்த பிறகும் பள்ளி வகுப்பறைக் கட்டடத்தில் ஏற்பட்டிருந்த உடைப்புகளுக்குப் பஞ்சர் ஒட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

Next Story

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டித் திட்டம்; மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர்

Published on 15/07/2024 | Edited on 16/07/2024
 Minister Anbil Mahesh having breakfast with students

தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை சிற்றுண்டி திட்டத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட அசூர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் திட்டத்தினை துவக்கி வைத்தார். 

தமிழக முதல்வர் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் இதனை அடுத்து தமிழக முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர்  காலை சிற்றுண்டி திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் சட்டமன்ற  உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அசூர் ஊராட்சியில் ஸ்ரீ முருகன் அரசு உதவி பெறும் பள்ளியில் திட்டத்தினை துவக்கி வைத்தார். இப்பள்ளியில் 64 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்நிகழ்வில்  மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் சுமதி உட்பட  மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, தாசில்தார் ஜெயபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன் ஸ்ரீதர் , தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், அசுர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி குமரகுரு உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.