ADVERTISEMENT

பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக மாட்டிய வி.ஏ.ஓ

03:12 PM Aug 27, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் தோப்பிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயியான அன்பழகன் என்பவர் தனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் தனது பெயர் மாறுதலுக்காக அவர் கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை அணுகிய போது பார்த்தசாரதி அன்பழகனிடம் லஞ்சம் கொடுத்தால்தான் பெயர் மாறுதல் செய்யப்படும் எனவும், அதற்காக ரூ 10,000 பணம் வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.

பணம் கொடுக்க விரும்பாத அன்பழகன் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கடலூர் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீசார் நேற்று(26.8.2022) இரசாயனம் தடவிய ரூ 10,000 பணம் கொடுத்து அனுப்பினர். இதனை லஞ்சமாக பார்த்தசாரதியிடம் அன்பழகன் கொடுத்தபோது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பார்த்தசாரதியை பிடித்தனர். அதன்பிறகு அவரை கைது செய்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த நிலையில் கடலூர் விஜயலட்சுமி நகரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து பார்த்தசாரதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இதுபோன்ற பல்வேறு விஷயங்களுக்காக லஞ்சமாக பெற்ற பணத்தில் கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஒரு வீடு, புவனகிரி வட்டத்தில் 30 ஏக்கர் நிலம் வாங்கியது தெரியவந்தது. அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

இதையடுத்து அவரை கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறைச்சாலையில் போலீசார் அடைத்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி வீடு, நிலம் வாங்கியது தொடர்பாக மேல் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு புவனகிரி வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், சர்வேயர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர்.

அதன்பேரில் நேற்று(26.8.2022) புவனகிரி வட்டாட்சியர் ரம்யா, மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர், சர்வேயர் ஆகியோர் கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி தொடர்பான பல்வேறு விவரங்களை கேட்டு பெற்றனர். அத்துடன் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT